Friday 10 July 2015

நூற்றாண்டு நிறைவு விழா மாமனிதர் ஜோதிபாசு...

நாடே போற்றிய மக்கள் தலைவர், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மறைந்த மகத்தான தலைவர், மேற்குவங்க த்தின் மக்கள் மனங்களில் என்றென்றும் வீற்றிருக்கும் தலைவராம் தோழர் ஜோதிபாசுவின் நூற்றாண்டு நிறைவு விழா கொல்கத்தாவில் ஜூலை 8 புதனன்று பெரும் உற்சாகத்துடன் நடைபெற்றது. வங்கத்தின் அனைத்து அறிவுஜீவிகளும் மக்கள் தலைவர்களும் நாடாளுமன்ற வாதிகளும் பல்லாயிரம் தோழர்களும் கலந்து கொண்ட இந்த விழாவில் உரையாற்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி எம்.பி., “மேற்குவங்க மாநிலத்திலும் இந்திய நாட்டிலும் பெரும் ஆபத்தின் பிடியில் சிக்கியிருக்கும் ஜனநாயகத்தை மீட்பதற்கான போராட்டத்தில் இடதுசாரி சிந்தனை கொண்ட அனைத்து தனிநபர்களும், அனைத்து அறிவுஜீவிகளும் ஒன்றுபட்டு வாருங்கள்என்று அழைப்பு விடுத்தார். யெச்சூரி அப்படிக் கூறும்போது, விழா மேடையில் மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி, பிடிஎஸ் கட்சியின் தலைவர் சமீர் புத்தந்து உள்பட கொல்கத்தா மாநகரின் அறிவியல் மற்றும் கலாச்சார துறைகளில் சிறப்பு வாய்ந்த அறிஞர்கள் அமர்ந்திருந்தனர். “மேற்கு வங்க மாநிலமும் இந்திய நாடும் கொடூரமான ஆட்சியாளர்களின் கைகளில் சிக்கியிருக்கின்றன. இதை எதிர்கொள்வது ஒரு கட்சியின் தனிப்பட்ட பிரச்சனை அல்ல.ஒத்த கருத்துடைய அனைத்து தனிநபர்களும் எங்களது போராட்டத்தோடு இணைந்து கொள்ள முன்வர வேண்டுமென அழைக்கிறோம். நாட்டின் ஜனநாயக மாண்புகளுக்கு மிகப்பெரிய அளவில் சவால் விடுக்கப்பட்டுள்ளது. அதை எதிர்த்தப் போராட்டமும் மிகப்பெரியதுஎன்று சீத்தாராம் யெச்சூரி கூறினார்.தோழர் ஜோதி பாசுவின் நினைவைப் போற்றும் இந்த விழாவில் முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா, மாநில எதிர்க்கட்சித் தலைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளருமான டாக்டர் சூர்யகாந்த மிஸ்ரா, இடதுமுன்னணியின் தலைவர் பிமன்பாசு உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று உரையாற்றினர்.முன்னதாக பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி உரையின் போது மேலும் கூறியதாவது:- தோழர் ஜோதிபாசு இந்தியாவின் மதச்சார்பற்ற அடித்தளத்தை வலுப்படுத்திய ஒரு மகத்தான தலைவர்.
சுதந்திர இந்தியாவின் வாழ்க்கை எப்படியிருக்க வேண்டும் என்பதை மேற்குவங்கத்தில் நிரூபித்துக் காட்டியவர் தோழர் ஜோதிபாசு. ஜோதிபாசு மற்றும் அவரது தலைமுறை கம்யூனிஸ்ட் தலைவர்கள் நடத்திய வீரம் செறிந்த போராட்டங்களின் விளைவாகவே ஜமீன்தாரி நடைமுறையும் நிலப்பிரபுத்துவ கொடூரங்களும் முடிவுக்கு வந்தன என்பதை உரத்துச் சொல்வோம். மேற்குவங்கத்தில் இதையெல்லாம் தோழர் ஜோதிபாசு நிகழ்த்திக் காட்டியபிறகுதான் இந்திய அரசியலின் நிகழ்ச்சி நிரலே மாறியது. இந்தியாவில் நடுத்தர வர்க்கம் என்பதே இதற்குப் பிறகுதான் ஒரு வடிவம் பெற்றது.
இந்திய மாநிலங்கள் மொழிவாரி மாநிலங்களாக மறுசீரமைக்கப்பட்டதும் ஜோதிபாசு மற்றும் அவரது தலைமுறை கம்யூனிஸ்ட் தலைவர்களின் மிக முக்கியமான சாதனையாகும். உலக அரங்கில் நெல்சன் மண்டேலாவுக்குப்பிறகு அனைத்து தரப்புமக்களாலும் நேசிக்கப்பட்ட மாமனிதர் ஜோதிபாசு. தனது இறுதி மூச்சு வரை ஒரு தலைசிறந்த கம்யூனிஸ்டாக வாழ்ந்து மறைந்தார். வரலாற்றில் இப்படிப்பட்ட மாமனிதர்கள் தோன்றுவது அரிது.மத்திய-மாநில உறவுகள் தொடர்பான பிரச்சனையிலும் ஜோதிபாசுவின் பங்களிப்பு மகத்தானது. மத்திய அரசின் எதேச்சதிகாரப்போக்கினை தடுத்து நிறுத்துவதற்காக நாட்டிலுள்ள எதிர்க்கட்சி முதலமைச்சர்களின் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தவர் அவர். இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி புகழாரம் சூட்டினார்.விழாவில் ஜோதிபாசுவுடனான நினைவலைகளை மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி, எழுத்தாளர் புத்ததேவ் குகா, முன்னாள் காங்கிரஸ் தலைவர் காஷி கந்தா மொய்த்ரா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச்செயலாளர் பிரபோத் பந்தா, மேற்குவங்க முன்னாள் சபாநாயகர் ஹாசிம் அப்துல் ஹலீம், இடதுசாரி இயக்கத்தின் முதுபெரும் தலைவர் அசோக் போஸ், மேற்குவங்கத்தின் தலைசிறந்த கலைஞர்களான லோப முந்த்ரா மித்ரா, ஸ்ரீகாந்த ஆச்சார்யா உள்ளிட்டோர் பகிர்ந்துகொண்டனர்

No comments: