Tuesday 8 March 2016

கலாபவன் மணியின் சாவில் மர்மம் - நடிகர் உள்ளிட்ட 5 பேரிடம் போலீஸ் விசாரணை

திரைப்பட நடிகர் கலாபவன் மணி மரணத்தில் மர்மம் உள்ளதாக அவரது சகோதரர் கொடுத்தபுகாரின் பேரில், நடிகர் உட்பட 5 பேரிடம் போலீசார் விசாரணையைத் துவக்கி உள்ளனர்.தமிழ் மற்றும் மலையாளத் திரைப்பட உலகில் புகழ்பெற்ற நடிகராக விளங்கியவர் கலாபவன்மணி. கடைசியாக தமிழில் பாபநாசம் படத்தில் கமல்ஹாசனுடன் நடித்திருந்தார். அண்மைக் காலமாக நுரையீரல் மற்றும் சிறுநீரகக் கோளாறுகள் காரணமாக கொச்சியில் உள்ள அமிர்தா மருத்துவ மனையில் மணி சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், ஞாயிறன்று இரவு மணி இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. இது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மணிக்கு 45 வயதுதான் ஆகிறது.இதனிடையே மணியின் உடலை பிணக்கிடங்குக்கு எடுத்துச்செல்ல முயன்றபோது, அவரது சாவில் மர்மம் இருப்பதாக மணியின் சகோதரர் ராமகிருஷ்ணன் சந்தேகம் எழுப்பினார். இந்த மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று சாலக்குடி போலீசாரிடம் புகாரும் அளித்தார். போலீசார் அதை ஏற்றுக்கொண்டு, பிரிவு 174-ன் கீழ் F.I.R. பதிவு செய்தனர். விசாரணைக்காக தனிப்படையும் அமைத்தனர்.டிஎஸ்பி கே. சுதர்சன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த தனிப்படை ஞாயிறன்று இரவே கலாபவன் மணியின் சாலக்குடி இல்லத்தில் தீவிர விசாரணை செய்தது. அந்த இல்லத்தில்தான் கலாபவன் மணி, சுயநினைவின்றிக் கிடந்துள்ளார். பின்னர் அங்கிருந்து மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார். எனவே, மணி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்பாக அவருடன் தங்கியிருந்த நடிகர் ஒருவர் உள்ளிட்ட 5 பேரையும் போலீசார் விசாரித்துள்ளனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மணியின் உடலில், கள்ளச் சாராயத்தில் உள்ள மெத்தனால் என்ற நச்சுத்தன்மையுள்ள அமிலம் இருந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன. இதனால், திருச்சூர் அரசு மருத்துவமனையில் திங்களன்று காலை மணியின் உடலுக்கு உடற்கூராய்வு நடத்தப்பட்டது. அதில் கிடைக்கும் தகவல்களைப் பொறுத்து, மணியின் மரணத்தில் உள்ள மர்மம் விலகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments: