தொழிலாளர்களின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, வருங்கால வைப்பு நிதிக்கு வரி விதிக்கும் முடிவிலிருந்து, நரேந்திரமோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு பின்வாங்கியது.இத்திட்டம் குறித்து வந்த கருத்துகளின் அடிப்படையில், பல்வேறு கோணங்களில் பி.எப். வரி விதிப்புத் திட்டத்தை மத்திய அரசு ஆய்வு செய்ய விரும்பு வதாகவும், எனவே இந்த வரிவிதிப்புத் திட்டத்தை மத்திய அரசு கைவிடுவதாகவும் நிதியமைச்சர் அருண் ஜெட்லி நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.2016-17ம் ஆண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் அருண்ஜெட்லி, 2016-ஆண்டு ஏப்ரல் 1-க்கு பின்பு பி.எப். பிடித்தத் தொகையை தொழிலாளர்கள் எடுக்கும்போது, அதில் 60 சதவிகிதத் தொகைக்கு வரிகட்ட வேண்டும் என்று அறிவித்தார்.
தொழிலாளர்கள் அவர்களின் சேமிப்பிலிருந்து எடுக்கும் பணத்திற்கு வரி விதிக்கும் இந்தவிநோதமான அறிவிப்புக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. சிஐடியு உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தன அப்போது, முழு பி.எப். தொகையையும் எடுக்கும்போதுதான் 60 சதவிகித எடுப்புத் தொகைக்கு வரி விதிக்கப்படும் என்றும், மாறாக அந்த 60 சதவிகிதத் தொகையும் ஏதாவது ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்பட்டால் அதற்கு வரிவிதிப்பு கிடையாது என்றும் அருண்ஜெட்லி சமாளித்தார். அதற்கு, ஒரு திட்டத்திலிருந்து எடுத்துமற்றொரு திட்டத்தில் சேமித்தால் வரிஇல்லை என்று சொல்வது மோசடியானது என்றும், எப்போதாவது தங்களின் சேமிப்பை எடுத்து, குடும்பத் தேவைகளுக்காக செலவழித்துத்தான் ஆக வேண்டும்; அப்படியிருக்க பி.எப். தொகையை வேறு திட்டத்தில் முதலீடு செய்ய நிர்ப்பந்திப்பதாக அரசின் அறிவிப்பு உள்ளது என்றும், தொழிற்சங்கத்தினர் கொந்தளித்தனர். தங்களின் பணத்தை எங்கு, எதில் முதலீடு செய்வது என்பதைத் தேர்வு செய்வது அந்தந்த தொழிலாளர்களின் உரிமை என்றும் குறிப்பிட்டனர். எதிர்க்கட்சிகளும் இந்த வரிவிதிப்பைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினர்.
பாஜக கூட்டணி கட்சிகளில் சிலவும்கூட வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தன.எதிர்ப்பு முற்றுவதை அறிந்த நரேந்திரமோடி அரசு, செவ்வாயன்று நிதியமைச்சர் அருண்ஜெட்லி மூலம், நாடாளுமன்றத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் “வரி விதிப்புத் திட்டம் குறித்து வந்த கருத்துகளின் அடிப்படையில், பல்வேறு கோணங்களில் மத்திய அரசு பி.எப். வரிவிதிப்புத் திட்டத்தை ஆய்வு செய்ய விரும்புகிறது; எனவே, இந்த வரிவிதிப்புத் திட்டத்தை மத்திய அரசு கைவிடுகிறது” என்றும் கூறப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment