Saturday 5 March 2016

மூத்த தலைவர் என்.சங்கரய்யாவுக்கு அரசியலில் நேர்மைக்கான விருது காயிதே மில்லத் அறக்கட்டளை வழங்குகிறது.

அரசியலில் உயர்ந்த கொள்கைகளுடனும் நேர்மையுடனும், அரசியல் சட்டத்திற்கு முழுமையாக உட்பட்டும் வாழ்ந்த பெருந்தகை கண்ணியமிகு காயிதே மில்லத் பெயரால் அரசியல் மற்றும் பொதுவாழ்வில் எளிமைக்கும், நேர்மைக்கும், நல்லிணக்கத்திற்கும், தேசபக்திக்கும் முத்திரை பதித்தவர் களுக்கு ஆண்டுதோறும் காயிதே மில்லத் அறக்கட்டளை விருது வழங்கி கவுரவித்து வருகிறது.கடந்தாண்டு கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் நல்லகண்ணு, சமூகப் போராளியும், வழக்கறிஞருமான டீஸ்டா செதல்வாத் ஆகியோருக்கு இவ்விருது பகிர்ந்தளிக்கப்பட்டது.  இவ்வாண்டுக் கான விருதைத் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பத்மநாபன், முன்னாள் துணைவேந்தர் டாக்டர் வே. வசந்தி தேவி, தென்னிந்திய திருச்சபையின் பேராயர் டாக்டர் தேவசகாயம், அரசியல் விமர்சகரும் பத்திரிகையாளருமான ஞாநி, காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை பொதுச்செயலாளர் எம்.ஜி.தாவூத் மியாகான் ஆகியோரைக் கொண்ட தேர்வுக்குழு வியாழனன்று சென்னையில் கூடி பரிசீலித்தது.
கூட்டத்திற்கு வர இயலாத குழுவின் மற்றொரு உறுப்பினர் பேரா. மார்க்ஸ் இந்த தேர்வுக்கு ஒப்புதல் அளித்தார். தேர்வுக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா, வரலாற்று பேராசிரியர் ரோமிலா தாப்பர், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும் முன்னாள் எம்பியுமான சையத் ஷஹாபுத்தீன் சாஹிப் ஆகியோர் இந்தாண்டு விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.காயிதே மில்லத் கல்லூரி வளாகத்தில் விரைவில் நடைபெறும் விழாவில் இவ்விருதுகள் வழங்கப்படும் என்று அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் எம்.ஜி.தாவூத்மியாகான் தெரிவித்துள்ளார்.

No comments: