Friday, 18 March 2016

சங்கரய்யாவுக்கு காயிதே மில்லத் விருது . . .

விருதுத் தொகையை மாணவர்களுக்காக அளித்த சங்கரய்யா . . . ஏற்புரையாற்றிய சங்கரய்யா, “அரசு அளித்த விருதுகளையும் தியாகிகள் உதவித்தொகையையும் ஏற்க மறுத்தவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். இந்த விருதை ஏற்கிறேன். ஆனால் விருதுத் தொகை இரண்டரை லட்சம் ரூபாயை, இக்கல்லூரியால் பயனடையும் தலித் மாணவர் களுக்கும், பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும், சிறுபான்மையினருக்கும், பெண்களுக்கும் தொடர்ந்து உதவிடு வதற்காக இந்த அறக்கட்டளையிடமே ஒப்படைக்கிறேன்,” என்று அறிவித்தார்.அரங்கம் நிறையக் கூடியிருந்த மாணவர்களும் பார்வையாளர்களும் உணர்ச்சிப் பெருக்குடன் எழுப்பிய கரவொலி அடங்க நீண்ட நேரம் ஆனது
 நாட்டின் அரசமைப்பு சாசனம் வலியுறுத்துகிற மதச்சார்பின்மைத் தத்துவத்தைப் பாதுகாக்க இளைய தலைமுறையினர் உறுதியேற்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் என். சங்கரய்யா அறைகூவல் விடுத்தார்.அரசியல் மற்றும் பொதுவாழ்வில் நேர்மைக்கான காயிதே மில்லத் விருது வழங்கல் விழா வியாழனன்று (மார்ச் 17) சென்னையில் நடைபெற்றது.காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளையின் இந்த விருது இவ்வாண்டு சங்கரய்யா, முன்னாள் வெளியுறவுத் துறை துணைச்செயலரும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் துணைத்தூதராக பணியாற்றிய பின்னர் முழுநேர அரசியலில் ஈடுபட்டு நாடாளுமன்ற உறுப்பினராக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டவருமான சையத் ஷஹாபுதீன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.சென்னை, மேடவாக்கம், காயிதே மில்லத்கல்லூரியில் நடைபெற்ற விழாவில், ஏற்புரையாற்றிய சங்கரய்யா மேற்கண்டவாறு இளைஞர்களைக் கேட்டுக்கொண்டார்.“எந்த மதத்தையும் எவரும் பின்பற்றவோ, தங்கள் மதத்தைப் பரப்பவோ உரிமை உண்டு.ஆனால் அரசாங்கம் எந்த மதத்திற்கும் சொந்தமானது அல்ல என்பதே மதச்சார்பின்மைத் தத்துவம். அதற்கு இன்று மதவெறி, சாதி வெறி சக்திகளிடமிருந்து வரும் அச்சுறுத்தலை முறியடிக்க இளைய சமுதாயம் எழ வேண்டும்,” என்றார் அவர்.
விடுதலைப் போராட்டம் சாதாரணமான போராட்டம் அல்ல. மொழி, மதம் கடந்துபோராடிய மக்களின்அளப்பரிய தியாகங்களால் கிடைத்ததே நாட்டின் சுதந்திரம். பம்பாய் கப்பற்படை கலகத்திற்குப் பிறகு, இனியும் ஆயுதத்தால் இந்தியாவை அடக்கி வைத்திருக்க முடியாது என உணர்ந்து வெளியேற முடிவு செய்தது பிரிட்டிஷ் அரசு. அந்தப் போராட்டத்தில் பல நூறு போராளிகள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். நாட்டின் சுதந்திரத்தை உறுதிப்படுத்திய அவர்களது தியாகத்திற்கு நான் தலைவணங்குகிறேன்.வீரத்தாலும் தியாகத்தாலும் இந்திய சுதந்திரத்தை அன்று நிலைநாட்டியவர்கள் அன்றைய தேசிய இயக்கத்தினரும் இடதுசாரிகளும்தான். இதைத்தெரிந்துகொண்டு, சுதந்திரத்தைப் பாதுகாப்பது இன்றைய தலைமுறையினரின் கடமை,” என்று அவர் கூறினார்.விடுதலைப் போராட்டத்தின்போது மகாகவி பாரதி, “முப்பது கோடி ஜனங்களுக்கும் பொதுவுடைமைஎன்று பாடினார். முப்பது கோடிப்பேருக்கு தேவைப்பட்ட பொதுவுடைமை இன்று 120 கோடி மக்களுக்குப் பலமடங்காக விரிவாகக் கிடைக்கச் செய்யப் போராட வேண்டும். இந்தியாவை மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசாக வலுப்படுத்த உறுதியேற்க வேண்டும் என்றும் சங்கரய்யா மாணவர்களைக் கேட்டுக்கொண்டார்.
மதச்சார்பின்மைக்கும் மதவெறிக்கும் இடையே போர் நடக்கிறது
சையத் ஷஹாபுதீன் சார்பில் அவரது மகளும், பீகார் மாநில முன்னாள் சமூக நீதித்துறை அமைச்சருமான பர்வீன் அமானுல்லா விருதினைப் பெற்றுக்கொண்டார். தந்தையின் ஏற்புக் கடிதத்தையும் அவர் வாசித்தார்.“நியாயமற்ற கொள்கைகளை அரசு எந்திரத்தில் புகுத்த முன்னெப்போதும் இல்லாத வகையில் வலதுசாரி சக்திகள் தீவிரமாக முயல்கின்றன. அனைத்து மக்களையும்உள்ளடக்கிய ஜனநாயகம், பாகுபாடற்ற குடியரசு ஆகியவற்றுக்கு எதிரான, குறிப்பாகக் கல்வி வளாகங்களில் பன்முகப் பண்பாட்டுச் செயல்பாடுகளுக்கு எதிரான அத்துமீறல்கள் நடக்கின்றன.
சிறுபான்மையினர் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று வலதுசாரி சக்திகள் பிரச்சாரம் செய்வது நாள்தோறும் நடக்கிறது. இதையெல்லாம் தடுப்பதுதான் மத்திய அரசின் கடமைஎன்று ஷஹாபுதீன் தனது செய்தியில் கூறியிருந்தார்.“இந்தியா ஒரு போர்க்களமாக மாறியிருக்கிறது. மதச்சார்பின்மைக்கும் மதவெறிக்கும் இடையே போர் நடக்கிறது.

No comments: