Sunday 28 June 2015

ஆணிவேரை . . . அசைத்து பார்க்கலாமா ?

மத்தியில் ஆளும் மதவெறி பிடித்த பாரதீய ஜனதா அரசு, சிறு, குறுந்தொழில்களை அழிப்பதில் காங்கிரசுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல. இந்திய மக்களை ஒட்டச் சுரண்டி, ஓட்டாண்டிகளாக்கி பன்னாட்டு பாவிகளையும், இந்திய பெரும் முதலாளி கூட்டத்தையும் மேலும் கொழுக்க வைப்போம் என கங்கணம் கட்டி செயலாற்றி வருகிறது.தேர்தலில் மோசடி மன்னன் மோடி, வார்த்தை ஜாலங்களால் வக்கணையாக பேசி வாய்ப்பந்தல் போட்டு பன்னாட்டு பெருச்சாளிகளிடம் பணத்தை பெற்று தேர்தலில் தேறியது இந்திய நாடே அறிந்த ஒன்று.ஏற்கெனவே பலவகையான சிறு, குறுந்தொழில்களை காவு கொடுத்து முடிந்த நிலையில் எஞ்சியுள்ள 20 சிறு,குறுந்தொழில்களையும் பன்னாட்டு, இந்திய பெருமுதலாளிகள் தயாரித்து கொள்ளலாம் என்ற அனுமதியை வழங்கியுள்ளது.அரைவயிற்றுக் கஞ்சி குடித்துக் கொண்டிருந்த தொழிலாளர்களின் வாழ்க்கையில் பேரிடியை இறக்கிவிட்டிருக்கிறது. உற்பத்தியாளர்களும் வழி தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிற நிலையை மோடி அரசு உருவாக்கியிருக்கிறது.ஏற்கெனவே மதுரையில் பாரம்பரியமான பஞ்சாலைகள் புதிய ஜவுளிக் கொள்கை என்ற பெயரில் காங்கிரஸ் அரசாங்கம் கொண்டு வந்ததால் ஆலைகளின் கதவுகள் இழுத்து மூடப்பட்டன. வி.ஆர்.எஸ். என்ற பெயரில் தொழிலாளர்கள் வீட்டுக்கு விரட்டியடிக்கப்பட்டனர். மதுரைவாழ் தொழிலாளர் குடும்பங்கள் வாழ வழியின்றி பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களுக்கு புலம்பெயர்ந்து விட்டனர்.மதுரையில் எஞ்சியிருப்பதோ அடி சரக்குப் பட்டறைகளும், அப்பளக் கம்பெனிகளும் தான். ஊறுகாய் உள்ளூரில் தயாரித்தால் உலக பணக்காரன் ஒப்புக் கொள்ளமாட்டான் என ஊதாரி அரசாங்கம் நினைக்கிறது. உள்ளூர்க்காரன் வெடி தயாரித்தால் வெடிக்காது எனச்சொல்லி வாழ்க்கைக்கே வேட்டு வைக்கிறது.
திண்டுக்கல் பூட்டையே திருடி விற்கப் பார்க்கிறது. இளம்பெண்களின் கைகளை வெளிநாட்டு வளையல்கள் தான் இனிஅலங்கரிக்கும். இந்திய சாமிகள் வெளிநாட்டு பத்திகளின் வாசனையில் வலம்வரப் போகின்றன.கட்டுமான தொழிலிலிருந்து, கள்ளமிட்டாய் தயாரிப்பு கம்பெனிகள் வரை வெளிநாட்டுக்காரன் மேற்பார்வையில் தான் நடைபெறும் போல. சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் முடங்கிப்போய், எதிர்காலத்தை நினைத்து ஏங்கித் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மக்களை வதைக்கும் மத்திய அரசுகளின் நிழல்களின் பின்னால் ஒளிந்து கொண்டு திமுக - அதிமுக கட்சிகள் நாட்டைகாக்கும் நல்லவர்கள் நாங்கள் தான் என்று நாடகம் ஆடி நயவஞ்சகம் செய்கின்றனர்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இதய சுத்தியோடு இந்திய மக்களின் வாழ்வை பாதுகாக்க, மெழுகுபோல் தன்னையே கரைத்து, கொள்கை மாறாமல், மாற்றுக் கொள்கையை முன்வைத்து சிறு, குறுந்தொழில் பாதுகாப்பு மாநாட்டை 29.6.2015 அன்று மதுரை நகர் ஜெய்ஹிந்துபுரம் ஜீவா நகரில் நடத்துகிறது.மாசற்ற மதுரை மக்களை மனந்திறந்து அழைக்கிறது. அனைவரும் வாரீர், வாரீர்..தொழில் காப்போம்! தொழிலாளரைக் காப்போம்இரா.விஜயராஜன் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் -  CPI(M)

No comments: