Tuesday 30 June 2015

இரயில்வே மீது கொடுவாளை ஏவும் தேப்ராய் அறிக்கை-BSNLEUமதியசங்க அறைகூவலின்படி மதுரையில் ஆர்ப்பாட்டம்.

பிபேக் தேப்ராய் கமிட்டி இந்திய ரயில்வேயை பல பிரிவுகளாக பிரித்து தனியார்மயப்படுத்த வேண்டும் என பரிந்துரைத்து அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இதனை தனியார்மயம் என அழைப்பதற்கு பதிலாகஅரசின் பிடியிலிருந்து விடுதலைமயம்என நாமகரணம் சூட்டப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை விமர்சிப்பவர்களை தேவையில்லாமல் கிலியை ஏற்படுத்தும் இடதுசாரிகள் எனவும் காலாவாதியான நேரு காலத்திய சோசலிச கருத்துகளை உடையவர்கள் எனவும் பா... அரசாங்கமும் அதன் கார்ப்பரேட் துதிபாடிகளும் விமர்சிக்கக்கூடும். உண்மையில் அறிக்கையை உருவாக்கியவர்களுக்கும் அதன்ஆதரவாளர்களுக்குமே இந்த விமர்சனம் பொருந்தும்.ஏனெனில் இந்த அறிக்கைமுன்வைக்கின்ற தீர்வுகளும் அதற்கான காரணிகளும் நவீன தாராளமய சூத்திரங்களுக்கு முற்றிலும் இசைந்தவையாக உள்ளன. ரயில்வேயின் குறைகள் அனைத்திற்கும் காரணம் அது அரசுத்துறையாக இருப்பதுதான் எனவும் இக்குறைகளுக்கு சர்வரோக நிவாரணி தனியார்மயம்தான் எனவும் அறிக்கை கூறுகிறது.பிரிட்டன் ரயில்வேயை தனியார்மயப்படுத் தியதால் ஏற்பட்ட படுபாதகமான விளைவுகளை யும் அல்லது ஐரோப்பாவில் ரயில்வேயை அரசுத்துறையே இயக்குவதின் வளமான அனுபவத்தையும் இக்கமிட்டி உதாசீனப்படுத்தியுள்ளது.
அனைத்துப் பணிகளும் தனியாருக்கு!
ரயில்வேயை பல பிரிவுகளாக உடைத்து பிரிக்க வேண்டும் என இந்த அறிக்கை கோருகிறது. இருப்புப் பாதைகளை அமைப்பது, அவற்றை பராமரிப்பது, இருப்புப் பாதை தளவாடங்களை உற்பத்தி செய்வது, ரயில் வண்டிகளை இயக்குவது என பல பிரிவுகளாக பிரித்துஅவற்றை தனியாருக்கு தரவேண்டும் என தேப்ராய் கமிட்டி வலியுறுத்துகிறது. இதற்காக அடுத்தஐந்தாண்டுகளில் பல களப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கமிட்டி கூறுகிறது.முதலில் ரயில்வேயின் கணக்குகளை பராமரிப்பதில் வணிகமுறை அடிப்படையிலான நடைமுறை கொண்டு வரவேண்டும் என தேப்ராய் கமிட்டி ஆழமாக குறிப்பிடுகிறது. ரயில்வேயின் ஒவ்வொரு பணியும் ஒவ்வொரு வழித்தடமும் அதில் ஈடுபடுத்தும் சமூக முதலீடும்லாபம் தரக்கூடியதுதானா என்பதை வெளிப்படுத்துவதுதான் இதன் நோக்கம் என தெரிவிக்கப்படுகிறது. சமூகப்பணிகளுக்காக ஆகும் செலவை ரயில்வே ஏற்றுக்கொள்வதற்கு பதிலாக மத்திய அரசாங்கம் பட்ஜெட் மூலம் மானியமாக தந்துவிட வேண்டும். இரண்டாவதாக ஒருசுயேச்சையானகட்டுப்பாட்டுக் குழு உருவாக்கப் படும். கட்டணத்தை நிர்ணயிப்பது, தனியாரி டையே நியாயமான போட்டியை உருவாக்கு வது, ரயில்வேயின் பல்வேறு வசதிகளை பயன்படுத்திட தனியாருக்கு கட்டணத்தை தீர்மானிப்பது ஆகிய பணிகளை இந்த குழுதான் நடைமுறைப்படுத்தும்.அதே சமயத்தில் ரயில்வே பாதுகாப்பு, ஊழியர்களுக்கான வீட்டு வசதி, கல்வி மற்றும் மருத்துவ வசதி ஆகியவை அவுட்சோர்சிங் என்ற அடிப்படையில் தனியாரிடம் ஒப்படைக்கப்படும். ஊழியர்களுக்கான கல்வி மற்றும் மருத்துவ வசதியை தனியாரிடம் ஒப்படைத்துவிட்டு அதற்கான மானியத்தை அரசு தருவது தேவை எனவும்இக்கமிட்டி முன்வைக்கிறது. இவையெல்லாம் நவீன தாராளமயக் கொள்கைகளை அப்படியேபின்பற்றுவது என்பதாகும். அடிப்படை வசதிகளை உருவாக்கிட செலவு அரசாங்கத்திற்கு; அதில் அதீத லாபம் தனியாருக்கு எனும் அணுகுமுறை இதில் உள்ளது.
பிரிட்டன் தனியார்மயத்தின் அனுபவம்
இது ஏதோ பைத்தியக்காரத்தனமான கற்பனை என எண்ணுவோர் பிரிட்டன் ரயில்வேதனியார்மயத்தின் அனுபவத்தை நோக்கவேண்டும். பிரிட்டனின் தனியார்மயத்தைதான் தேப்ராய் கமிட்டி முன்மாதிரியாக எடுத்துக்கொண்டுள்ளது. இதன் அனுபவம் குறித்து பல ஆய்வுகள் உள்ளன. பிரிட்டன் அரசின் ஆய்வு கூட உள்ளது.பிரிட்டனில் ரயில்வே அடிப்படை வசதிகளை உருவாக்கிட 1993ல் அமைக்கப்பட்ட ரயில் டிராக் பி.எல்.சி. எனும் சுயேச்சையான அமைப்பு 2001ல் திவாலாகியது.
ஏன்? ரயில்வேயில் செயல்பட்ட தனியார் அமைப்புகள் தாம் தரவேண்டிய நியாயமான கட்டணங்களை தரவில்லை. பிறகு நெட் ஒர்க் ரயில் எனும் புதிய அமைப்பு உருவாக்கப்பட்டது. 2002-03ல் 9,600 மில்லியன் பவுண்ட் ஸ்டெர்லிங்காக இருந்த கடன் 2012ல் 30,000 மில்லியனாக உயர்ந்தது. இருப்புப்பாதைகளை பராமரிக்க ஆகும் செலவைவிட இக்கடனின் வட்டி அதிகமாக உள்ளது. ஆனால்பிரிட்டன் ரயில் தனியார்மயத்தை முன்மாதிரி யாக கொண்டு பிபேக் தேப்ராய் கமிட்டி முன்வைக்கும் சிகிச்சை என்பது நோயைவிட மோசமாக உள்ளது.ஏனைய ஐரோப்பிய நாடுகளின் அனுபவத்தையும் பிபேக் தேப்ராய் கமிட்டி ஆய்வு செய்திருக்கலாம். சில நாடுகளில் அரசே ரயில்வேயை இயக்குகிறது. சில நாடுகளில் மாநில குடியரசுகள் ரயில்வேயை இயக்குகின்றன. சில நாடுகளில் ரயில்வே பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அனைத்து பிரிவுகளும் அரசின் கீழ் இயக்கப்படுகின்றன. இப்படி பல நல்ல உதாரணங்கள் உள்ளன. ஆனால் தேப்ராய் கமிட்டி இவற்றைஆய்வு செய்யவில்லை. தேப்ராய் கமிட்டியின் அறிக்கையை மோடி அரசாங்கம் நிராகரிப்பதேசிறந்தது. ஆனால் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட் துதிபாடுவோரின் அழுத்தம் காரணமாக அவ்வாறு செய்யாது.ரயில்வேயை பொது நன்மைக்கான சேவை என்பதைவிட லாபம் தரவேண்டிய பொருளாதார அமைப்பாக பார்ப்பதும் மக்களைவிட லாபம்தான் முக்கியம் எனும் கோட்பாடும் தேப்ராய் கமிட்டியின் அறிக்கையை நிராகரிக்கும் அரசியல் வல்லமையை மோடி அரசாங்கத்திற்கு தராது.
மதுரை லெவல் 4 வளாகத்தில்  30.06.15 காலை நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்திற்கு தோழர்.சி செல்வின் சத்தியராஜ் தலைமைதாங்கினார். மத்திய அரசின் தனியார்மய  கொள்கையை கண்டித்து  தோழர்.என். சோனைமுத்து, தோழர்.எஸ். சூரியன் ஆகியோர் உரையாற்றினார்கள். தோழர்.எஸ்.மாயாண்டி நன்றிகூற ஆர்ப்பாட்டம்  நிறைவுற்றது.முன்னதாக மறைந்த தோழர்.பி .முருகேசனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.குறுகிய கால அழைப்பாகினும் அதிக எண்ணிக்கையில்  ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட CSC  தோழர்களுக்கு மாவட்ட சங்கத்தின் பாராட்டுக்கள்.

No comments: