Sunday, 7 June 2015

மக்களின் எதிரிகளை பதிலளிக்கச் செய்வோம்-அறைகூவல்...

 “ஜனநாயகத்திற்கும் கருத்துரிமைக்கும் எதிராக எந்தெந்தத் தளத்திலெல்லாம் ஆர்எஸ்எஸ் தலைமையிலான பண்பாட்டு ஒடுக்குமுறையாளர்கள் தாக்குதல் தொடுக்கிறார்களோ, அத்தனை தளங்களிலும் முற்போக்கு சக்திகள் ஒன்றுபட்டு எதிர்வினையாற்ற வேண்டும். அதேவேளையில் எதிர்வினையாற்றுவது மட்டுமல்லாமல் சமூக, பொருளாதார, பண்பாட்டுத்தள உண்மைகளை மக்களிடையே விரிவாக எடுத்துச்செல்வதில் நாமே நேரடியாகச் செயல்பட்டு, மக்களின் எதிரிகள் பதிலளிக்கும்படி செய்ய வேண்டும்,”என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்தார்.அம்பேத்கர் பெரியார் வாசிப்பு வட்டத்திற்கான அங்கீகாரம் ரத்துச் செய்யப்பட்டிருப்பதாக சென்னை ஐஐடி முதல்வர் அறிவித்ததற்கும், அவ்வாறு ஆணையிடக் கட்டாயப்படுத்திய மத்திய அமைச்சகத்திற்கும் கண்டனம் தெரிவிக்கும் கருத்தரங்கம், ‘சரிநிகர்அமைப்பின் சார்பில் வெள்ளியன்று (ஜூன் 5) சென்னையில் நடைபெற்றது. கருத்தரங்கில் நிறைவுரையாற்றிய ஜி. ராமகிருஷ்ணன், “உலகத்தரம் வாய்ந்த 200 பல்கலைக்கழகங்களின் பட்டியலில் இந்திய கல்வி நிறுவனங்கள் ஒன்றுகூட இடம்பெறவில்லை.
சென்னை ஐஐடி-யில் எடுக்கப்பட்ட நடவடிக்கை போன்ற அணுகுமுறையை மத்திய அரசு கல்வித்துறையில் கடைப்பிடிக்குமானால் ஒருபோதும் இந்தியப் பல்கலைக்கழகங்களின் நிலை உயராது,” என்று கூறினார்.தமது கல்லூரிப் பருவத்தில், வெளியே தொழிலாளர்கள் போராடியபோது அவர்களுக்கு ஆதரவாக மாணவர்கள் களம் இறங்கியதையும், கல்லூரிக்குள் மாணவர்கள் தங்கள் கோரிக்கைகளுக்காகப் போராடியபோது வெளியே தொழிலாளர்கள் ஆதரவாக நின்றதையும் நினைவுகூர்ந்த ராமகிருஷ்ணன்,
தமிழகத்தில் இன்று தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் அரசியல் பேசினாலோ, சமுதாயப் பிரச்சனைகளை விவாதித்தாலோ உடனடியாக நீக்கப்படுகிற ஜனநாயக விரோத நிலை உருவாகியிருக்கிறது,” என்றார்.“அம்பேத்கர் -பெரியார் வாசிப்பு வட்டத்தின் கடித முகப்பில் அந்த இரு தலைவர்களோடு பகத்சிங் முகமும் பதிக்கப்பட்டிருக்கிறது. அதன் உரையரங்குகளில் இந்தியச் சமுதாயத்தின் சாதிப்பாகுபாடுகள் குறித்தும், மதவெறி குறித்தும், ஏழைகளை வஞ்சிக்கும் நிலம் கையகப்படுத்தல் சட்ட முன்வரைவு, காப்பீட்டுத்துறையில் அந்நிய முதலீடு அதிகரிப்பு ஆகியவை குறித்தும் ஆய்வாளர்கள் பேசியிருக்கிறார்கள். சாதிப் பிரிவினை என்பது பொருளாதார வளர்ச்சியின் அடையாளம்தான் என்று கூறிய ஆர்எஸ்எஸ் பொருளாதார வல்லுநர் குருமூர்த்தியின் கருத்தை மாணவர்கள் விமர்சித்திருக்கிறார்கள். இதுதான் அதிகாரத்தில் இருப்போரையும் அவர்களைத் தூண்டிவிட்டோரையும் ஆத்திரப்பட வைத்திருக்கிறது,”என்றார் அவர்.மராட்டிய மாநிலத்தில் பகுத்தறிவாளர் தபோல்கர் படுகொலை முதல், பொதுவுடைமை இயக்கத்தின் பன்சாரே படுகொலை உள்பட இன்று ஐஐடி வளாகத்தில் நடைபெறுவது வரையில் மதவெறி-சாதிப்பாகுபாட்டுக் கூட்டம் பலவகைகளில் செயல்படுகிறது.வன்முறைத் தாக்குதல் வடிவம். மத்திய அமைச்சர்கள் சர்ச்சைக்குரிய விசயங்களைப் பேசுவதும் மதவாத உணர்வுகளைத் தூண்டுவதும் இரண்டாவது வடிவம். படிப்பு வட்டத்திற்குத் தடை விதிப்பது போன்ற நடவடிக்கைகள் மூன்றாவது வடிவம். நான்காவது வடிவம் ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் எதிரான கெடுபிடிகள். புதிய தலைமுறை தொலைக்காட்சி நிலையம் முன்பாக நடந்த வன்முறையும், சன் தொலைக்காட்சியின் விவாதத் தொகுப்பாளர் வீரபாண்டியன் தொடர்ந்து நிகழ்ச்சி நடத்தவிடாமல் தடுத்ததும் அந்த நான்காவது வடிவத்தின் மாதிரிகள்தான். சன் தொலைக்காட்சி நிர்வாகம்,
அந்தக் கெடுபிடிக்கு அடங்கிப்போனதில் கார்ப்பரேட் நலன் இருக்கிறது என்றும் ராமகிருஷ்ணன் கூறினார்.பிரதமர் நரேந்திர மோடியின் பலம் ஆர்எஸ்எஸ் நிறுவனம், கார்ப்பரேட் உலகம் இரண்டும்தான். ஜெர்மனியை அடக்கியாண்டு, உலகத்தையே அடிமைப்படுத்த முயன்ற ஹிட்லர் இதே போல் இனவெறி பாசிசத்தைப் பயன்படுத்தியும் ஜெர்மானிய கார்ப்பரேட்டுகளின் ஆதரவோடும்தான் சர்வாதிகாரம் செலுத்தினான்.2002ல் குஜராத் படுகொலைகளைத் தொடர்ந்து, இனி அந்த மாநிலத்தில் முதலீடு செய்ய மாட்டோம் என்று தீர்மானம் நிறைவேற்றியது தொழில்வர்த்தக முதலாளிகள் சங்கம். ஆனால் இன்று அதே முதலாளிகள் மோடிக்கு சாதகமாகச் செயல்படுகிறார்கள்.ஆர்எஸ்எஸ் - அரசு இரண்டிற்கும் இடையேயான ஒருங்கிணைப்புக்காக 6 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அந்தக் குழுக்களுக்கு அமைப்பு சார்ந்த பொறுப்பாளராக இருப்பவர் பாஜக தலைவர் அமித் ஷா. அமைச்சரவைப் பொறுப்பாளராக இருப்பவர் மோடி.இவற்றையெல்லாம் மக்களிடையே அம்பலப்படுத்த வேண்டிய கடமை அனைத்து முற் போக்கு சக்திகளுக்கும் இருக்கிறது என்றார்.ஐஐடி நிர்வாக நடவடிக்கைக்கு எதிர்வினையாகத் தமிழகத்தில் சிங்காரவேலர் பெரியார்-அம்பேத்கர் வாசிப்பு வட்டம், மும்பையில் மகாத்மா புலே அம்பேத்கர்-பெரியார் வாசிப்பு வட்டம், கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் அம்பேத்கர்-பெரியார் வாசிப்பு வட்டம், தில்லி பல்கலைக்கழகத்திலும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ஆகிய இரண்டு வளாகங்களிலும் அம்பேத்கர்-பெரியார் வாசிப்பு வட்டங்கள் தொடங்கப்பட்டிருப்பதை ஜி.ராமகிருஷ்ணன்குறிப்பிட்டபோது எழுந்த கரவொலி இத்தகையதொடர்முயற்சிகளுக்கான வரவேற்பாக ஒலித்தது....தீக்கதிர்.

No comments: