Wednesday 16 October 2013

65 தமிழக மீனவர்களைஉடனடியாக விடுவிக்க வேண்டும்...





















மீனவர்கள் தொடர்பான பிரச்னையில் இந்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறது. குஜராத் கடற் பகுதியில் மீனவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் குறித்து பாகிஸ்தான் துணை தூதருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்களில் மத்திய அரசின் மனப்பான்மை வேறு மாதிரியாக உள்ளது.
இலங்கை கடற்படையால் அப்பாவித் தமிழக மீனவர்கள் கடந்த 14-ஆம் தேதியன்று பிடித்துச் செல்லப்பட்ட சம்பவம் குறித்து தங்களின் கவனத்துக்குக் கொண்டுவர, ஆழ்ந்த வருத்தத்துடன் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். இந்திய மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது அவர்கள் மீது கடுமையான மற்றும் தொடர்ச்சியான தாக்குதல்களை இலங்கைக் கடற்படையினர் நடத்துவது குறித்து போதிய உணர்வுடன் மத்திய அரசு இருப்பதில்லை.
இதனாலேயே மீனவர்கள் மீதான தாக்குதல்களை இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்கள். கடந்த 14-ஆம் தேதியன்று இந்திய மீனவர்கள் மீது நடத்தப்பட்ட இருவேறு சம்பவங்களை தங்களின் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன்.ராமேசுவரத்தைச் சேர்ந்த 22 இந்திய மீனவர்கள் மீன்பிடித்தபோது அவர்களை இலங்கைக் கடற்படையினர் பிடித்துச் சென்றனர்.
2}ஆவது சம்பவமாக புதுக்கோட்டை ஜெகதாபட்டினத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள் பாக் ஜல சந்தி பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அவர்களையும் இலங்கைக் கடற்படையினர் பிடித்துச் சென்றனர்.இந்திய மீனவர்கள் கடத்தப்படுவதும், அவர்கள் சிறை வைக்கப்படுவதும், அந்தச் சிறைக் காலம் நீட்டிக்கப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. இந்தப் பிரச்னையில் தூதரக ரீதியிலான கடும் கண்டனத்தையோ அல்லது எந்த வகையான நடவடிக்கைகளையோ மத்திய அரசு எடுக்கவில்லை. மேலும் இந்தப் பிரச்னையில் தங்களுக்கு எழுதிய கடிதங்கள் தொடர்பாகவும் பதில் வரவில்லை.
வெளியுறவுத் துறை அமைச்சர் அண்மையில் இலங்கை சென்றபோது, மீனவர்கள் தொடர்பான பிரச்னை குறித்து ஆக்கப்பூர்வமான பேச்சு நடத்தப்பட்டு இருந்தாலோ அல்லது அது குறித்து அறிக்கைகள் வெளி வந்திருந்தாலோ ஆறுதல் அளித்திருக்கும். இலங்கை மற்றும் தமிழக மீனவர்கள் சங்கங்களுக்கு இடையில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்திருக்கலாம்.
பாக் ஜல சந்தி பகுதியில் தமிழக மீனவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் மத்திய அரசு நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. எனவே, கடந்த 13-ஆம் தேதியன்று இலங்கைக் கடற்படையால் பிடித்துச் செல்லப்பட்ட 37 மீனவர்கள் உள்பட 65 மீனவர்களை விடுவிக்கவும், அவர்களுடைய 35 படகுகளை மீட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் பிரச்னை குறித்து தாங்கள் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்த வேண்டும்.
அப்பாவி ஏழை மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் நடத்தும் தாக்குதல்களைத் தடுப்பதற்குச் சாதகமான நடவடிக்கைகளை தாங்கள் எடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

No comments: