Saturday 12 October 2013

அந்த முகங்களை பார்க்கையில் அதிர்ச்சியாக இருந்தது... என்ன செய்தியைச் சொல்கின்றன அந்த முகங்கள்?
அந்த முகங்களை நாளிதழில் பார்க்கையில் அதிர்ச்சியாக இருந்ததுஅதிகபட்சம், இரண்டு நாள் உறக்கமற்ற இரவுகளைக் கடந்தது போன்ற களைப்பை மீறி, ஒரு படுகொலையைச் செய்துவிட்டு உட்கார்ந்திருக்கும் எந்தச் சுவடும் அதில் தென்படவில்லை. கடந்த காலத்தைப் பற்றியோ, எதிர்காலம் குறித்தோ எந்தச் சிந்தனையும் இல்லாத அந்த முகங்களில் நிகழ்கால வாழ்க்கையை எப்படியாவது அல்லது எப்படியேனும் வாழ்ந்துவிட்டுப் போகிற முகங்களுக்கான ஒரு புதிய மாதிரிப் படிமம் தெரிந்தது. அதிர்ச்சி அளிக்கும் அந்தக் காட்சியை வெறிக்கும் எந்தக் கண்களும் அடுத்த வேலையில் உடனே போய் மறந்துவிட முடியாது அந்த முகங்களை. ஏரோநாட்டிக் என்ஜினீயரிங் (ஆகாய விமானங்கள் குறித்த பொறியியல் படிப்பு) மாணவர் ஒருவர்.தகவல் தொடர்பு படிப்பவர் அடுத்தவர். சிவில் பொறியியல் வகுப்பில் இருப்பவர் மூன்றாமவர்.
கல்லூரியில் ரேகிங் கூடாது என்பது உள்பட ஒழுக்க விதிகளில் மிகவும் கண்டிப்பானவர் கொலையுண்ட கல்லூரி முதல்வர் சுரேஷ் என்பது ஒரு தகவல். சக மாணவர் ஒருவரை பேருந்து இருக்கை தொடர்பான தள்ளு முள்ளு சண்டைக்காக கல்லூரிக்குள்ளும் வெளியேயும் அடித்தார் என்பதற்காக முதலில் குறிப்பிட்ட மாணவர் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார் என்பது அடுத்த தகவல். அவரோடு மற்ற இரண்டு மாணவர்களும் சேர்ந்து இந்த வெறிச் செயலில் ஈடுபட்டதாக நாளிதழ் செய்திகள் தெரிவிக்கின்றன.
கல்லூரி வளாகங்களில் பரஸ்பரம் மாணவரிடையே வாக்குவாதங்கள், மோதல்கள், அடிதடி, வெட்டு, குத்து என்பவை புதியவை அல்லதான். ஒழுக்க விதிகளோடு முரண்படும் மாணவர்கள்-கடுமையாக நடந்து கொள்ளும் கல்லூரி நிர்வாகங்கள் இவையும் புதிதான விஷயமல்ல தான். ஆனால் கண்ணுக்குப் புலனாகாது நுட்பமாக இவற்றின் தன்மையில் தீவிரமான, வேதனை தரத் தக்க, மீளுதல் இல்லாத வகையிலான மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
தான் எதை எப்படிப் புரிந்து கொள்கிறோமோ அப்படியே அதனை அடுத்தவர் ஏற்க வேண்டும் என்ற எண்ணப் போக்கு. தன்னை மீறித்தான் அடுத்த சங்கதி என்ற எண்ணப் போக்கு. நட்பு, நேயம், உறவுமுறை எல்லாவித சேர்க்கைக்கும் இது முன் நிபந்தனை. இந்த விதிகள் கடுமையானவை. மாற்றத்திற்கு உட்பட இயலாதவை. இளம் வயதிலிருந்து, சொல்லப் போனால் குழந்தைப் பருவத்திலிருந்தே கூட இத்தகைய எண்ணப் போக்கு சூழலின் உரமும், வரமும் பெற்று செழித்து வளருகிறது. எல்லாக் காலத்திலும் அச்சுறுத்தும் எதிர்வினையின் கவசத்தை மேலே போட்டுக் கொண்டே வளரும் இந்த எண்ணப் போக்கு மேலும் இறுகி கெட்டிப்பட்டுவிடுகிறது.
வேலையற்ற திண்டாட்டம், பாலியல் குற்றங்கள், போதை போன்றவை எப்படி முதலாளித்துவ சமூகத்தின் இன்றியமையாத தேவைகள் என்று நமது சமூக அறிவியலாளர்கள் விவரிக்கின்றனரோ, அப்படியே புதிய தாராளமய காலம் வேறு தேவைகளை அதுவே உற்பத்தி செய்கிறது. ஊழலை உருவாக்கும்போதே அந்தப் புழக்கத்தில் பெருகும் பணம் எத்தனை புதிய சமூகத் தீமைகளை உருவாக்கித் தரும் என்பதை ஊடகங்கள் விவாதிப்பதில்லை.
பெரும் ஏற்றத்தாழ்வின் ஊடாட்டத்தில் தத்தளிக்கும் ஒரு சமூகம் எப்படி அந்த பிரதிபலிப்புகளின் எதிர்வினைகள் அற்று ஒன்றுமறியாத மாதிரி மனிதர்களை நடத்த முடியும்? இந்தக் கொடிய கரங்களின் பிடியில் நடுத்தர வயதுக்காரர்களே எல்லை மீறும்போது, துடிப்பான வாலிப வயதில் வந்து நிற்போரை நடப்புக் காலம் எத்தனை ஆட்டுவிக்கும் என்பதன் ஒரு அதிர்ச்சிக் கூறு தான் தூத்துக்குடி மாவட்டத்தின் பொறியியல் கல்லூரி விஷயத்தில் நாம் இப்போது எதிர்கொண்டிருப்பது. தனி விஷயமாக இதைப் பார்ப்பதும், விசாரிப்பதும், உண்மையைக் கண்டறிவதும், தண்டிப்பதும் சட்டம் பார்த்துக் கொள்ளும்.
ஆனால் தலை குனிந்து நிற்கும் சமூகம் அதைக் கடந்தும் மிகுந்த கவலையோடு, அக்கறையோடு, எச்சரிக்கையோடு விவாதங்களை நடத்த வேண்டுவது காலத்தின் கரைதலாகும். தனது பொறுப்பை நிறைவேற்றுவதன்றி கொலையுண்டு கிடக்கத் தக்க தவறு எதையும் செய்ததாகத் தெரியாத கல்லூரி முதல்வரின் முகமும் நாளிதழில் இருக்கிறது. அந்த முகத்திற்கும் சமூகம் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது.

No comments: