Friday, 18 October 2013

உண்மையை கண்டறிவதில் நிர்பந்தத்திற்கு சிபிஐ இடமளிக்கக் கூடாது...

விரியும்ஊழல்கதைவிளக்கமளிப்பாராபிரதமர்?
நிலக்கரி சுரங்க ஒதுக்கீயடு ஊழல் கதை விரிந்துகொண்டே போகிறது! நிலக்கரித்துறையின் முன்னாள் செயலர் பரேக், பெருந்தொழிலதிபர் குமார்மங்கலம் பிர்லா ஆகியோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில் மேலும் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. “ இந்த வழக்கில் நான் குற்றவாளி என்றால் நிலக்கரித்துறை அமைச்சராக இருந்த சிபுசோரன் பதவி விலகிய பின்னர் அந்த துறையை நேரடியாக கவனித்த பிரதமர் மன்மோகன்சிங்கும் குற்றவாளிதான். எனவே அவரையும் விசாரிக்கவேண்டும்என்று பரேக் வெளிப்படையாகக் கூறியுள்ளார். அந்த பேட்டி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த ஊழல் தொடர்பாக பிரதமரையும் விசாரிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருவதன் நியாயம் உறுதிப்படுகிறது.அலைக்கற்றை உரிம ஊழல்விவகாரத்தில் பிரதமர், நிதியமைச்சர் ஆகியோரே ஒப்புதல் அளித்தனர். அவர்களுக்குத் தெரிந்தே அனைத்து ஒதுக்கீடுகளும் நடைபெற்றன என்பதால் அவர்களையும் வழக்கில் சேர்க்கவேண்டும் என்று முன்னாள் அமைச்சர் . ராசா தொடர்ந்து கூறி வருகிறார். அலைக்கற்றை ஒதுக்கீட்டு போன்றே நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடும் அமைச்சரவையின் தலைவர் என்ற வகையில் பிரதமருக்கு தெரியாமல் எதும் நடந்திருக்க வாய்ப்பில்லை. இனியும் சாக்குப்போக்கு கூறி தப்பிக்காமல் விசாரணையைச் சந்திக்க அவர் தாமாக முன்வர வேண்டும்.கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகள் இப்பிரச்சனையை எழுப்பியபோது மவுனம் சாதித்தார் மன்மோகன். இப்போதும் அப்படி சாதிக்காமல் நாட்டு மக்களுக்கு விளக்கமளிக்கும் பொறுப்பு அவருக்கு இருக்கிறது. இதில் பலர் சம்மந்தப்பட்டிருப்பதால் முந்தைய பாஜக கூட்டணி ஆட்சியில் செய்யப்பட்ட சுரங்க ஒதுக்கீடுகள் குறித்தும் முழு விசாரணை தேவை என்ற கோரிக்கையிலும் நியாயம் இருக்கிறது. முதல் முறையாக ஒரு முக்கிய பெருந்தொழிலதிபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டவுடன் பல்வேறு தொழில் அமைப்புகள், முதலீட்டுச் சூழல் பாதிக்கப்பட்டு விடும் என்று புலம்புகின்றன. தொழிற்சங்க உரிமை மறுக்கப்படும்போதும் தொழிலாளர் சட்டங்கள் மீறப்படும்போதும் தொழிலாளர்கள் போராடினால் உற்பத்தி பாதிக்கப்படுகிறது என்று ஓலமிடும் இந்த அமைப்புகள், அப்பட்டமான முறைகேட்டில் தொடர்புடைய தொழிலதிபர்கள் மீது வழக்கு கூட பதிவு செய்யக்கூடாது என்று மறைமுகமாகச் சொல்வது ஒரு வகையான கெடுபிடி உத்தியே. “நாங்கள் எங்கள் விருப்பப்படி இயற்கை வளங்களை எப்படி வேண்டுமானலும் சுரண்டுவோம்; யாரும் கேள்வி கேட்கக்கூடாதுஎன்று கட்டளையிடுவது போல் இருக்கிறது.இப்படி முதலீடு பாதிக்கும் என்ற கேடயத்தைப் பயன்படுத்தியே பல முறைகேடுகளை அரசு அனுமதித்து வந்திருக்கிறது. இத்தகைய வாதங்களை முளையிலேயே கிள்ளி எறியும் அரசியல் துணிவு ஆட்சியாளர்களுக்கு வேண்டும்.முறைகேட்டில் யார் ஈடுபட்டாலும் அந்தக் குற்றவாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை பாயும் என்பதே மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தும். உண்மையை கண்டறிவதில் யாருடைய நிர்பந்தத்திற்கும் சிபிஐ இடமளிக்கக் கூடாது என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

No comments: