Tuesday 15 October 2013

மனித உயிர்கள் மதிப்புமிக்கவை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்...

கோவில்கூட்டநெரிசலால்துயரம்
பலி 115 ஆனது தவிர்த்திருக்க முடியும்..
.ஒருவார காலத்திற்கு மேலாக அச்சுறுத்தி வந்த பைலின் புயல் கரை கடந்துள்ளது. ஆந்திர மற்றும் ஒடிசா மாநில அரசுகள் கடலோரத்தில் குடியிருந்த சுமார் 5லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயரச் செய்ததன் மூலம் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப் பட்டுள்ளது.எனினும் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளது. இந்நிலையில் மத்தியப் பிரதேச மாநிலம் தாதியா மாவட்டத்தில் ரதன்கர்மாதா கோவிலுக்கு வழிபாடு நடத்த மக்கள் பெருமள வில் சென்ற நிலையில் நெரிசல் ஏற்பட்டு 115 பேர் உயிரிழந்துள்ள செய்தி வேதனை ஏற் படுத்துவதாக உள்ளது.ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரியின்போது இந்தகோவிலுக்கு லட்சக்கணக்கான மக்கள் வழிபாடு நடத்த வருவார்களாம். இந்த ஆண்டும் அதேபோன்று 5லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வந்திருந்த நிலையில், நெரிசல் ஏற்பட்டு பெண்கள் குழந்தைகள் உட்பட 115 பேர் உயிரிழந்துள்ளனர்.
கோவிலுக்குச் செல்லும் வழியில் சிந்துநதி மீது கட்டப்பட்டிருந்த பாலத்தின் வழியாக மக்கள் சென்றுகொண்டிருந்த போது பாலம் இடிந்து விட்டதாக எழுந்த வதந்தியைத் தொடர்ந்து நெரி சல் ஏற்பட்டதாகவும், அதனால் உயிர்ப்பலி நேர்ந்ததாகவும் பூர்வாங்கத் தகவல்கள் கூறுகின்றன.இதே திருவிழாவில் 2006ம் ஆண்டு ஏற்பட்ட நெரிசலின்போது 20க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் மத்தியப்பிரதேச மாநில பாஜக அரசு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்ததா என்ற கேள்வி எழுகிறது. அனைத்து இடங்களிலும் நீக்கமற நிறைந் துள்ள லஞ்ச நடைமுறையும் இந்த விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் சிலரிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு டிராக்டர் உள்ளிட்ட கனரக வாகனங்களை பாலத்தின் வழியாக அனுமதித்ததும் நெரிசலுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. கடைசி நேரத்தில் நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தியதும் நெரிசல் ஏற்படக் காரணம் என்று கூறப்படுகிறது. காரணம் எதுவாக இருந்தாலும் லட்சக்கணக்கில் மக்கள் கூடும் ஒரு இடத்தில் அதற்கேற்ப பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்பது தெளிவு. மத்தியப்பிரதேசத்தில் ஏற்பட்ட இந்த நெரிச லில் மக்கள் உயிரிழந்தது, ஏற்கனவே ஏற்பட்ட பல்வேறு நெரிசல்களை நினைவூட்டுவதாகவே உள்ளது.இயற்கைப் பேரிடர் அபாயங்கள் ஏற்படும் பொழுது சேதத்தை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுவது நல்லது. ஆனால் குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட இடத்தில் மக்கள் வழிபாட்டுக்காகக் கூடுவார்கள் என்பது நன்கு தெரிந்திருந்த நிலையிலும், தேவையான ஏற்பாடுகளைச் செய்யாதது கண்டிக்கத்தக்கது. நெரிசல் குறித்து நீதிவிசாரணை நடத்தப்படும் என்று .பி.மாநில பாஜக அரசு அறிவித்துள்ளது.
இந்த விசாரணையின் அடிப்படையில் பெறப்படும் படிப்பினைகளைக் கொண்டு எதிர்காலத்தில் இத்தகைய உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்க வேண்டியது அவசியமாகும். மனித உயிர்கள் மதிப்புமிக்கவை என்பதை மதத்தை வைத்து அரசியல் நடத்துபவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்

No comments: