Saturday 26 October 2013

தனியார் திட்டத்தை கைவிடும் வரை போராட்டம்...

விமான நிலைய ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம்


விமான நிலையத்தை தனியார் மயமாக்குவதை கண்டித்து சென்னை விமான நிலைய ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்தியாவில் உள்ள விமான நிலையங்களின் பராமரிப்பு மற்றும் நிர்வாக பிரிவுகளை தனியார் வசம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. டிசம்பர் மாதம் டெண்டர் முடிந்து ஜனவரி மாதம் தனியார் வசம் ஒப்படைக்கும் பணி நடக்கும் என கூறப்படுகிறது.ஆனால், இதற்கு சென்னை விமான நிலைய ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடந்த சில மாதங்களாக உணவு இடைவேளையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். கடந்த 22ந் தேதி முதல் 4 நாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மாலை விமான நிலைய ஊழியர்கள் ஆயிரம் பேர், கையில் மெழுகுவர்த்தி ஏந்தி விமான நிலைய சரக்ககப் பிரிவில் இருந்து உள்நாட்டு முனையத்தில் உள்ள புறப்பாடு பகுதி வரை ஊர்வலமாக வந்தனர்.பின்னர் புறப்பாடு பகுதியில் கையில் மெழுகுவர்த்தியுடன் நின்று, விமான நிலையத்தை தனியார் மயமாக்குவதை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். விமான நிலையத்தை தனியார் மயமாக்கும் திட்டத்தை கைவிடும் வரை போராட்டம் தொடரும் எனவும் ஊழியர்கள் தெரிவித்தனர்.

No comments: