ஐஓசி பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதை கண்டித்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழ்நாடு பெட்ரோலியம் மற்றும் கேஸ் ஒர்க்கர்ஸ் யூனியன் (சிஐடியு) சங்கத்தினர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஐஓசி மண்டல அலுவலகம் முன்பு வியாழனன்று (அக். 10) ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்தியன் ஆயில் கார்ப்பரேசன், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேசன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன், இந்திய இயற்கை எரிவாயு கழகம் (ஓஎன்ஜிசி) உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றும் அனைத்து தொழிலாளர்களையும் நிரந்தரம் செய்ய வேண்டும், ஓட்டுநர், கிளீனர்களுக்கு சட்டப்பூர்வ சலுகைகளை வழங்குவதை முதன்மை முதலாளியான எண்ணெய் நிறுவனங்களை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.விஜயன் “ மக்களுக்கு சேவை செய்வதிலும் நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாப்பதிலும் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் முக்கிய பங்கை வகிக்கிறது, இப்படிப்பட்ட நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை மத்திய அரசு தனியார் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.
ஏற்கனவே 21 சதவீதம் தனியாரிடம் உள்ள நிலையில் மேலும் 10சதவீத பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வது ஏற்புடையதாக இல்லை. இது ஊழியர்களிடையே பெரும் பாதிப்பை உண்டாக்கும். ” என்று செய்தியாளர்களிடம் கூறினார்.மத்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேசன், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேசன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன், இந்திய இயற்கை எரிவாயு கழகம் (ஓஎன்ஜிசி) ஆகிய நிறுவனங்களில் தென்மண்டலங்களான தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் 700 நிரந்தர ஊழியர்களும், 2,200 ஒப்பந்த ஊழியர்களும் பணி செய்து வருகின்றர்.இவர்களில் பெரும்பாலும் சிலிண்டர்களை நிரப்பும் பணிமனைகளில் 25 ஆண்டுகளுக்கு பணி செய்து வருகின்றனர் இவர்களை அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இந் நிறுவனங்களில் பொருட்களை விநியோகம் செய்யும் பணியில் இருக்கும் லாரி ஓட்டுநர்கள் மற்றும் கிளீனர்களுக்கு இஎஸ்ஐ, பிஎப் உள்ளிட்ட அனைத்து சட்ட சலுகைகள் வழங்க வேண்டும் மேற்கொண்ட கோரிக்கைகளை மத்திய அரசு உடனே நிறைவேற்ற என்றும் அவர் வலியுறுத்தினார்.சங்கத்தின் தலைவர் கே.ஆறுமுகநயினார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நாகை மாலி எம்எல்ஏ, பாலகிருஷ்ணன், முனுசாமி (புதுச்சேரி) ரவி (ஓஎன்ஜிசி), விநாயகமூர்த்தி, எச்எம்எஸ் பொதுச் செயலாளர் ஆர்.ஆறுமுகம், குப்புசாமி, செல்வராஜ் உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
கோரிக்கை மனுவை முதன்மை மக்கள் தொடர்பு அலுவலரிடம் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.விஜயன், தலைவர் கே. ஆறுமுகநாயினார், நாகை மாலி எம்எல்ஏ வழங்கினர்.
No comments:
Post a Comment