Friday 9 May 2014

பிளஸ் 2 தேர்வு முடிவு : கிருஷ்ணகிரி மாணவி முதலிடம்...























மேலே: சுஷாந்தி, அலமேலு               கீழே: நித்யா, துளசி ராஜன்
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. கிருஷ்ணகிரி மாணவி சுஷாந்தி மாநில அளவில் முதலிடம் பிடித்தார்.தமிழகத்தில் மார்ச் 3-ம் தேதி தொடங்கி மார்ச் 25-ம் தேதி வரை பிளஸ் 2 தேர்வுகள் நடைபெற்றது. இந்த ஆண்டு 8.45 லட்சம் பேர் பிளஸ்-2 தேர்வு எழுதினர். பிளஸ்-2 விடைத்தாள் மதிப்பீட்டு பணி தமிழகம் முழுவதும் ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கி 15-ம் தேதி வரை நடந்தது. முன்னரே அறிவித்தபடி இன்று (வெள்ளிக்கிழமை) முடிவு வெளியிடப்பட்டது.
90.6 சதவீத தேர்ச்சி
இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் 87.4% மாணவர்களும், 93.4% மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி விகிதம் 90.6%ஆகும். வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது.
சுஷாந்தி முதலிடம்
மாநில அளவில் முதலிடத்தை, தமிழை மொழிப்பாடமாக எடுத்துப் படித்த கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஸ்ரீவித்யா மந்திர் பள்ளியைச் சேர்ந்த மாணவி சுஷாந்தி பிடித்துள்ளார். அவர் 1,200க்கு 1,193 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
மாநிலத்தில் இரண்டாவது இடத்தை 1200-க்கு 1,192 மதிப்பெண்கள் பெற்று தர்மபுரி ஸ்ரீவிஜய விடிஎம் வித்யா மந்திர் பள்ளியைச் சேர்ந்த மாணவி அலமேலு பிடித்துள்ளார்.
மூன்றாவது இடத்தை 1191 மதிப்பெண்கள் பெற்று நாமக்கல் கிரீன் பார்க் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர் துளசிராஜனும், சென்னை மடிப்பாக்கம் பிரின்ஸ் மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த மாணவி நித்யாவும் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
பிளஸ் 2 தேர்வு எழுதியவர்களில் 4,94,100 மாணவர்கள் 60%-க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
பாடவாரியாக 200 மதிப்பெண் பெற்றவர்கள் விபரம்:
இயற்பியல்- 2,710-வேதியல்- 1,693-உயிரியல்- 652-தாவரவியல்- 15-விலங்கியல்- 7-கணக்கு- 3,882
கணினி அறிவியல்- 993-வணிகவியல்- 2,587-கணக்கு பதிவியல்- 2,403-வணிக கணிதம்- 605
கணித தேர்வு கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தாலும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக அளவிலான மாணவர்கள் முழுமதிப்பெண் பெற்றுள்ளனர்.

No comments: