Thursday 8 May 2014

மே-8 தோழர் வி.பி.சிந்தன் நினைவு நாள் . . .

தோழர்.வி.பி .சி அன்று சொன்னவை இன்றும் பொருந்தும்
தமிழகத்தில் உருக்கு போன்ற பல்வேறு தொழிற்சங்கங்களை உருவாக்கி வளர்த்த பெருமை தோழர் வி.பி.சிந்தனுக்கு உண்டு.1987ம் ஆண்டு மாஸ்கோவில் நடைபெற்ற மே தின பேரணியில் பங்கேற் பதற்காக சென்றிருந்த போது மே 8-ந்தேதி தோழர்.வி.பி சிந்தன் காலமானார்.மாஸ்கோ புறப்படுவதற்கு முன்பு சென்னையில் நடைபெற்ற தொழிற்சங்க பேரவைக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர், “பல்லாண்டு காலமாக போராடிப் பெற்ற உரிமைகளை பறிக்கின்ற முயற்சிகளை மத்தியில் அமைந்துள்ள அரசு இறங்கியிருக்கிறது. தொழிற்சங்க அங்கீகாரத்தின் மீது தாக்குதல்களை தொடுத்துள்ளது.
பல நிறுவனங்களில் வேலைநிறுத்தம் செய்யும் உரிமை பறிக்கப்பட்டுவிட்டதுஎன்று குறிப்பிட்டதோடு உரிமைகளை பெறுவதற்கான போராட்டத்தில் அனைத்துத் தொழிலாளர்களும் , தொழிற்சங்கங்களும் இணைந்து நிற்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.இன்றைக்கு தாராளமயமாக்கல் கொள்கைகள் தாராளமாக நடைமுறைப்படுத்தப்படும் நிலையில் தொழிற்சங்க உரிமைகளை பறிப்பது என்பது சர்வசாதாரணமாகிவிட்டது. பன்னாட்டு நிறுவனங்களின் ஆலைவாயில்களில் கொடியேற்றுவது கூட குற்றம் என்று கொக்கரிக்கிறார்கள் முதலாளிகள். கைவிலங்கு பூட்டி தலைவர்களைக் கைது செய்யவும் தயங்குவதில்லை ஆளும் அரசுகள்.
தோழர் வி.பி.சிந்தன் காட்டிய வழியில் தொழிற்சங்க உரிமைகளை, தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்க முன்னிலும் வீரியத்தோடு, வேகத்தோடு போராட வேண்டும் என்பதையே அவரது ஒவ்வொரு நினைவு நாளும் நமக்கு சுட்டிக்காட்டுகிறது.தோழர் வி.பி.சி மறைந்து பல ஆண்டுகள் ஆன பின்னும் தமிழக தொழிற்சங்க வரலாற்றில் அவர் பதித்த தடங்கள் இன்னமும் வழிகாட்டும் பாதைகளாக கண்முன் காட்சியளிக்கின்றன. அந்த தடங்களில் பாதம் பதித்து முன்னேற இந்நாளில் அவரது பெயரால் உறுதியேற்போம்.

No comments: