பிரதமராகப் பதவியேற்கவிருக்கும் மோடி அவர்களுக்கு வணக்கம்! உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இதை நான் மிகவும் உளப்பூர்வமாகத்தான் சொல்கிறேன்; இப்படிச் சொல்வது ஒன்றும் எனக்கு அவ்வளவு எளிதான செயலல்ல. ஏனெனில், நீங்கள் இப்போது அடைந்திருக்கும் உச்சபட்ச பதவியில் உங்களைக் காண விரும்பியவர்களில் ஒருவனல்ல நான். நீங்கள் பிரதமராகியிருப்பது குறித்துக் கோடிக் கணக்கானோர் பரவசத்துடன் இருக்கும் அதே வேளையில், இன்னும் கோடிக் கணக்கானோர் இதே காரணத்துக்காக வருத்தமுற்றிருக்கக் கூடும் என்பதை நீங்கள் நன்றாக அறிந்திருப்பீர்கள்.
ஜவாஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி போன்றவர் களும், இந்திரா காந்தியின் நெருக்கடி நிலை காலகட்டத்துக்கு எதிரான வரலாற்றுச் சிறப்பு மிக்க போராட்டத்துக்குப் பிறகு, ஆட்சிக்கு வந்த மொரார்ஜி தேசாயும், பிறகு உங்கள் அரசியல் குரு வாஜ்பாயும் உட்கார்ந்த நாற்காலிக்கு இதோ நீங்களும் வந்துவிட்டீர்கள். உங்களை இந்த இடத்தில் பார்க்க விரும்பாதவர்கள் நீங்கள் இந்த இடத்துக்கு வந்திருப்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்..
தேசம் என்னும் கருத்தாக்கம்
இதையெல்லாம் தாண்டி, இந்தியாவின் தலைமைப் பொறுப்பில் நீங்கள் இருப்பது கோடிக் கணக்கான இந்தியர்களை ஏன் சங்கடப்படுத்துகிறது என்பது குறித்து நான் பேசியாக வேண்டும். 2014 தேர்தலில் வாக்காளர்கள் மோடிக்காகவோ அல்லது மோடிக்கு எதிராகவோ வாக்களித்திருக்கிறார்கள் என்பது வேறு யாரையும்விட உங்களுக்கு நன்றாகத் தெரியும். தேசத்தின் சிறந்த பாதுகாவலன், உண்மையில் அதன் ரட்சகன் என்று சொல்லி 31% மக்களை நீங்கள் கவர்ந்ததன் மூலம், பா.ஜ.க. இவ்வளவு இடங்களை வென்றிருக்கிறது. அதே நேரத்தில் 69% மக்கள் உங்களை அவர்களின் பாதுகாவலராகக் கருதவில்லை என்பதையும் கவனித்தாக வேண்டும். இந்த தேசம் என்பது உண்மையில் என்ன என்பதில் உங்களுக்கு உள்ள கருத்துடன் மாறுபடும் கருத்தை அவர்கள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். தேசம் என்கிற இந்தக் கருத்தாக்கம் குறித்துப் பேசும்போதுதான் இந்திய அரசியலமைப்பு, அதாவது நீங்கள் பிரதமர் பதவியில் அமர்வதற்குக் காரணமான அந்த அதிகாரம், முக்கியத்துவம் பெறுகிறது திரு மோடி அவர்களே. இந்த நேரத்தில்தான் தேசம் என்னும் கருத்தாக்கத்தைத் திரும்பிப்பார்க்க வேண்டுமென்று உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
சிறுபான்மையினருக்கு நம்பிக்கையூட்டுதல்
அளவுக்கு அதிகமாகவும் வெளியில் சொல்ல முடியாத வகையிலும் பலரிடத்திலும் பயம் இருக்கிறது, என்ன காரணம்?
ஏனென்றால், நீங்கள் பேரணிகளில் உரையாற்றும்போது, இந்தியக் குடிமக்கள் என்ற கருத்தாக்கத்தைத் தூக்கிப் பிடிக்கும் ஒரு ஜனநாயகவாதியின் குரலைத்தான் அவர்கள் கேட்க விரும்புகிறார்களே தவிர, கட்டளைகளைப் பிறப்பிக்கும் ஒரு சக்ரவர்த்தியின் குரலை அல்ல. நீங்கள் செய்ய வேண்டியது சிறுபான்மை மக்களின் அச்சத்தைக் களைவதுதானே தவிர, ஏதோ அவர்களுக்குப் பரிபாலனம் செய்வதுபோல் நடந்துகொள்வதல்ல. ‘பாதுகாப்பு' என்பதற்கு வளர்ச்சி என்பது எந்த வகையிலும் மாற்றாகாது. ‘ஒரு கையில் குர்ஆன், மறு கையில் மடிக்கணினி’ என்ற ரீதியில் நீங்கள் பேசினீர்கள். அந்தப் படிமம் அவர்களுக்கு நம்பிக்கை யூட்டுவதாக அமையாது. ஏனெனில், வேறொரு படிமம் அவர்களை அச்சுறுத்துகிறது: இந்து என்ற தோற்றத்துக்குள் ஒளிந்துகொண்டு ஒருவர் இந்துப் புராணமொன்றின் டி.வி.டி-யை ஒரு கையிலும் அச்சுறுத்தும் வகையில் திரிசூலத்தை மற்றொரு கையிலும் வைத்திருக்கும் படிமம்.
உப்பு தடவிய பிரம்பு
முன்பெல்லாம், பள்ளிக்கூடங்களில் உப்பு தடவிய பிரம்பை வகுப்பறைக்கு வெளியே தலைமையாசிரியர்கள் வைத்திருப்பது உண்டு. பார்த்தாலே பயம் வரும்; தப்பு செய்தால் தலைமையாசிரியர் எப்படியெல்லாம் தோலை உரிப்பார் என்பதை நினைவூட்டும் விதத்தில் அந்தப் பிரம்பு வைக்கப்பட்டிருக்கும். முசாபர்நகரில் 42 முஸ்லிம்கள் 20 இந்துக்கள் இறப்பதற்கும் 50,000 பேர் வீடுவாசலை இழந்து அகதிகளானதற்கும் காரணமான கலவரங்களைப் பற்றிய மிகச் சமீப காலத்திய நினைவுகள்தான் அந்தப் பிரம்புகள். “ஜாக்கிரதை, இதுதான் உங்களுக்கு நடக்கும்!” என்ற எச்சரிக்கை கோடிக் கணக்கானவர்களின் பகல் நேர அச்சமாகவும் இரவு நேரப் பயங்கரமாகவும் நுழைந்து விட்டிருக்கிறது.
முஸ்லிம்கள் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள மதச் சிறுபான்மையினர் அனைவரும் தங்கள் மனதில் ஆழமான வடுக்களைச் சுமந்துகொண்டிருக்கிறார்கள், மேற்கு பஞ்சாபிலிருந்து அகதிகளாக வந்த இந்துக்கள், சீக்கியர்கள் போலவும் காஷ்மீர் பண்டிட்டுகள் போலவும். யதேச்சையான அல்லது திட்டமிட்ட காரணங்களுக்காகத் திடீரென்று ஏதாவது கலவரம் ஏற்படும் என்றும் அதற்குப் பல மடங்கு, குறிப்பாக பெண்களை இலக்காகக் கொண்டு, பழிவாங்கல் என்றெல்லாம் தொடரும் என்றும் ஒரு அச்சம் நிலவுகிறது. தலித் மக்களும் பழங்குடியினரும், குறிப்பாகப் பெண்கள், தங்கள் வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் அவமானத்திலோ, அவமானத்துக்குள்ளானதைப் பற்றிய நினைவிலோதான் கழிக்கிறார்கள். இந்நிலையைக் கருத்தில் கொண்டு, பேச்சளவிலும் செயலளவிலும் அவர்களுடைய நம்பிக்கையை வென்றெடுங்கள் திரு மோடி அவர்களே. அவர்களுடைய நலன்களுக்காகக் குரல்கொடுக்கும் முதல் நபர் நீங்கள்தான் என்ற உறுதியை அளிப்பதன் மூலம் இதை நீங்கள் சாதிக்க முடியும்.
பிரிவு 370 பற்றி நீங்கள் எடுத்திருக்கும் நிலைப்பாடு, பொது சிவில் சட்டம்குறித்த புளித்துப்போன கோரிக்கை, அயோத்தியில் ராமர் கோயில், இந்து அகதிகளையும் முஸ்லிம் அகதிகளையும்பற்றி நீங்கள் பேசியது, இவையெல்லாம் நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை; பயத்தைதான் ஏற்படுத்து கின்றன. வெகுஜன அச்சம் என்பது இந்தியக் குடியரசின் குணாம்சமாக இருக்க முடியாது திரு மோடி அவர்களே.
உங்களுக்கு வாக்களிக்காத 69 சதவீதத்தினருக்காக அவர்கள் விரும்பும் விதத்தில் இந்துஸ்தானின் வஸிர்-இ-ஆசமாக (வஸிர்-இ-ஆசம் = உருது மொழியில் ‘பிரதம மந்திரி') இருங்கள்.
நமது தேசத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்கவிருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்களுடன்,
உங்கள்சககுடிமகன்,
கோபாலகிருஷ்ணகாந்தி
கட்டுரையாளர், காந்தியின் பேரன், மேற்கு வங்கத்தின் முன்னாள் ஆளுநர்.
கோபாலகிருஷ்ணகாந்தி
கட்டுரையாளர், காந்தியின் பேரன், மேற்கு வங்கத்தின் முன்னாள் ஆளுநர்.
No comments:
Post a Comment