Thursday, 8 May 2014

தமிழக அரசுக்கு & விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி.

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.மேலும், முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு உருவாக்கியஅணை பாதுகாப்புச் சட்டத்தைரத்து செய்துள்ள உச்சநீதிமன்றம், அணை பாதுகாப்பை ஆராய மூன்று பேர் குழுவை அமைத்தும் உத்தரவிட்டுள்ளது.முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டத்தை உயர்த்துவது தொடர்பாக தமிழக - கேரள அரசுகள் இடையே பிரச்சனை ஏற்பட்டது.
இதுகுறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2006ம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த கேரள அரசு தவறியது. இருதரப்புக்கும் இடையே இதுதொடர்பாக நீண்ட வாதப்பிரதிவாதம் நடந்து கொண்டிருந்த நிலையில் அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக குறைக்க கேரள அரசு அவசரச் சட்டத்தை கொண்டு வந்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது.அணையின் நீர்மட்டத்தை உயர்த்தினால் அணை உடையும் என்றும் பிரச்சாரம் செய்து வந்தது. மேலும் அணை பலவீனமாக இருப்பதாக கூறி முல்லைப் பெரியாறு அணையின் அருகே புதிய அணை ஒன்று கட்டுவதற்கும் முயற்சி மேற்கொண்டது.
இந்த தீர்மானம் கேரள சட்டமன்றத்தில் நிறைவேறியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி ஆனந்த் தலைமையில் குழு ஒன்றை நியமித்து அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த குழுவினர் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என்றும், அதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் தெரிவித்தனர்.அந்த அறிக்கையை ஏற்க கேரள அரசு மறுத்துவிட்டதுடன் புதிய குழுவை நியமிக்கவும் நீதிமன்றத்தில் வலியுறுத்தியது. ஆனால் கேரள அரசின் இந்த வாதத்திற்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.இந்தப்பின்னணியில், இந்த வழக்கின் மீதான இறுதி கட்ட விசாரணை முடிந்து மே 7 புதனன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் தனது தீர்ப்பில், முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்றும், அணை பலவீனமாக உள்ளது என்பதை ஏற்க முடியாது என்றும் தெரிவித்தது.
இதுமட்டுமின்றி கேரள அரசு இயற்றிய அவசரச் சட்டத்திற்கும் தடை விதித்து உத்தரவிட்டது.மேலும், கேரள அரசின் சட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது. நீதிமன்ற தீர்ப்புகளை சட்டம் மூலம் தடுக்க முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.இந்த தீர்ப்பு தமிழக அரசுக்கு கிடைத்த வெற்றி மட்டுமின்றி விவசாயிகளுக்கும் கிடைத்த வெற்றியாகும்

No comments: