வெளிநாட்டு வேலை, ஐ.டி. மோகம் என இந்தக் காலத்து இளைஞர்கள் ஓடிக்கொண்டிருக்கையில், தனது கிராமத்துக்கான தேவையை 15 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் கட்டமைத்துக் கொண்டிருக்கிறார் இளைஞர் காளிமுத்து.மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகிலுள்ள தங்களாச்சேரி கிராமம் தான் காளிமுத்துவின் சொந்த ஊர். 7 வருடங்களுக்கு முன்பு எம்.ஃபில் முடித்துவிட்டு கல்லூரியை விட்டு வெளியே வந்த இவர், மற்றவர்களைப்போல் வேலை தேடி நகரத்துக்கு ஓடவில்லை. மாறாக, கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வேலைகளை முன்னெடுத்தார். அதற்கு அவர் எடுத்த ஆயுதம் இயற்கை விவசாயம். அந்த ஆயுதத்தைக் கொண்டு சாதித்து கட்டியுள்ளார்.
விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் இடையே இடைவெளி அதிகமாக இருப்பதால்தான் நாம் வாங்கும் விளைபொருட்கள் எந்த நிலத்தில், எப்படி விளைவிக்கப்பட்டது என்ற விவரம் தெரியாமல் பல்வேறு நோய் களுக்கு ஆளாகிறோம். எனவே, அந்த இடைவெளியை குறைப்பது தான் எங்களது முதல் வேலை யாக இருந்தது. காய்கனிகள், சிறு தானியங்களுக்கு இயற்கை விவ சாயத்தில் முக்கியத்துவம் கொடுத் தோம். உள்ளூர் தேவைக்குப் போக திருமங்கலத்தில் அரசு ஊழியர்கள், ஓய்வுபெற்ற அதிகாரிகள் என ஐம்பது குடும்பங்களை எங்களது வாடிக்கையாளர்களாக ஆக்கினோம்.
உரம் போடாமல் விளையும் காய்கள், பயறுகள் என்பதால் எங்களுடைய பொருளுக்கு நல்ல கிராக்கி. ஊரெல்லாம் தக்காளி கிலோ 2 ரூபாய்க்கு விற்றபோது எங்களது தக்காளியை பத்து ரூபாய்க்கு வாங்கத் தயாராய் இருந்தார்கள். இதையெல்லாம் பார்த்துவிட்டு இன்னும் சில விவசாயிகளும் எங்களோடு இணைந்தார்கள். இப்போது எங்கள் அமைப்பில் 50 விவசாயிகள் உள்ளனர். இவர்களில் ஒருத்தர் கத்தரி பயிரிட்டால் இன்னொருவர் தக்காளி போடுவார்; இன்னொருத்தர் மிளகாய் பயிரிடுவார். சந்தைப் படுத்துதலை எளிமையாக்கவும் எல்லாவிதமான பயிர்களையும் பயிரிட வேண்டும் என்பதற்காகவும் எங்களுக்கு நாங்களே வகுத்துக் கொண்ட வழிமுறை இது.
விவசாயிகளுக்குத் தேவையான விதைகளையும் நாங்களே வாங்கிக் கொடுப்போம். ஒவ்வொருவரும் வாங்கிய விதையின் அளவு எவ்வளவு, அதைக் கொண்டு எத்தனை மாதத்தில் எவ்வளவு சம்பாதித் தார்கள் என்பதற்காக கணக்குகள் எங்களிடம் பக்காவாக இருக்கும். பன்னிக்குண்டு கிராமத்தைச் சேர்ந்த செந்தில் என்பவர் எங்களிடம் 23 ரூபாய்க்கு பீர்க்கன் விதை வாங்கி பயிரிட்டு அறுபதாயிரம் ரூபாய் சம்பாதித்திருக்கிறார். எங்கள் பகுதியில் கடந்த மூன்று மாதத்தில் 10 டன் காய்கனிகளை விளைவித்து சாதனை படைத்திருக்கிறோம். விவசாயிகள், சுற்றுப்புறச் சூழல் மற்றும் இயற்கை விவசாய மேம்பாட்டுக்காக கடந்த ஆண்டு எனக்கு ‘நம்மாழ்வார் விருது’ கொடுத்தார்கள்.
பென்ஷன் பலன் கிடைக்கும் என்பதற்காகவே பெரும்பாலானவர்கள் அரசு மற்றும் தனியார் வேலை களை தேடி ஓடுகின்றனர். அப்படிப் போகவேண்டிய அவசியமே இல்லை. கிராமங்களிலேயே பொருளாதார பொக்கிஷங்கள் கொட்டிக் கிடக்கின்றன. இருபது சென்ட் நிலம் இருந்தால் இயற்கை விவசாயத்தில் மாதம் 20 ஆயிரம் ரூபாய் சம்பாதிப்பதற்கான வழிகளையும் 60 வயதில் பலன் தரக்கூடிய வழிமுறைகளையும் நாங்கள் சொல்லிக் கொடுக்கிறோம். கல்லூரி மாணவர்களிடமும் இப்போது இதைத்தான் பிரச்சாரம் செய்கிறோம்.IIT-யில் படித்துவிட்டு லட்சத்தில் சம்பளம் வாங்குபவர்கள், பெற்றோர்களையும் உறவுகளையும் காப்பகங்களில் சேர்த்துவிட்டு அநாதைகள்போல் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.அவர்கள் யாருக்காக சம்பாதிக்கிறார்கள் என்றே தெரிய வில்லை. ஆனால், நாங்கள் சொந்த கிராமத்தில் இயற்கையின் மடியில் உறவுகளோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதுதான் நிம்மதியான வாழ்க்கை என்பதை புரிந்துகொண்டு இளைஞர்கள் சொந்த கிராமங்களை நோக்கி நகர வேண்டும்.
No comments:
Post a Comment