Wednesday, 7 May 2014

மவுனம் கலையுமா ? . . .

ஜி அலைவரிசைக் கற்றை ஒதுக்கீடு தொடர்பான அனைத்து முடிவுகளும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தெரிந்துதான் எடுக்கப்பட்டது என்று முன்னாள் தொலைதொடர்புத்துறை அமைச்சர் .ராசா நீதிமன்றத்தில் மீண்டும் தெரிவித்துள்ளார். அலைவரிசைக் கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு குறித்த வழக்கு புதுதில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நீதிமன்றம் முன்பு ஆஜராகி கேள்விகளுக்கு பதிலளித்த .ராசா, எந்த ஒரு முடிவையும் நான் தன்னிச்சையாக எடுக்கவில்லை. அனைத்து முடிவுகளையும் பிரதமரிடம் தெரிவித்து அவரது ஒப்புதலுடன்தான் முடிவுகள் எடுக்கப்பட்டன என்று அவர் கூறியுள்ளார்.இவ்வாறு .ராசா கூறுவது இது முதன்முறையல்ல. இந்த வழக்கில் அவர் சிக்கி கைதானபோதே இந்தக்கருத்தை வெளியிட்டார். இது ஏதோ மாட்டிக்கொண்டவர் அடுத்தவரை கைகாட்டி தப்பிப்பதற்காக சொல்லப்படுகிற வார்த்தைகளாக எடுத்துக்கொள்ள முடியாது. ஏனெனில் இவரால் குற்றம் சாட்டப்படும் பிரதமர் மன்மோகன் சிங் இதுவரை அலைவரிசைக் கற்றை ஒதுக்கீடு தொடர்பான முடிவுகள் எதுவும் எனக்குத் தெரியாது. எனக்குத் தெரியாமல்தான் அனைத்தும் நடந்துள்ளது என்று வாய்திறந்து ஒருமுறைகூட கூறவில்லை.
ஏதோ தனக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லாதது போல அவர் நடந்துகொள்கிறார்.நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் நடந்தபோது அந்தத் துறையை கையில் வைத்திருந்தவர் பிரதமர் மன்மோகன் சிங்தான். ஸ்பெக்ட்ரம் ஊழலைத் தொடர்ந்து அந்த ஊழலும் வெளியாகி நாட்டு மக்களை அதிர்ச்சியடையச் செய்தது. இதுதொடர்பான சில கோப்புகள் கூட காணாமல் போய், மத்திய அரசை உச்சநீதிமன்றம் கண்டித்தது. அதற்கும் அசையவில்லை மன்மோகன் சிங். அலைவரிசைக் கற்றை ஒதுக்கீடு தொடர்பான முடிவுகள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு மட்டுமல்ல. அப்போதைய நிதியமைச்சர் .சிதம்பரத்திற்கும் தெரியும் என்று ஏற்கெனவே .ராசா கூறியிருக்கிறார். இந்த ஊழல் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக்குழு, பிரதமர் மற்றும் அப்போதைய நிதியமைச்சர் .சிதம்பரம் ஆகியோரை அழைத்து விசாரிக்க வேண்டும் என்று அந்தக்குழுவில் இடம்பெற்றிருந்தவரும், இந்த ஊழலை முதன்முதலாக அம்பலப்படுத்தியவருமான சீத்தாராம் யெச்சூரி வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.ஆனால் அந்தக்குழுவில் பெரும்பான்மையாக இருந்த காங்கிரசார் அதை ஏற்கவில்லை. குழுவில் இடம்பெற்றிருந்த திமுக உறுப்பினரும் கூட இதற்கு அழுத்தம் கொடுக்கவில்லை. இந்தப்பின்னணியில்தான் .ராசாவின் வாக்குமூலம் முக்கியத்துவம் பெறுகிறது. ஊழலுக்கு எதிரிபோல தன்னைக்காட்டிக் கொள்ளும் பாஜகவும் கூட இந்த விஷயத்தில் அடக்கியே வாசிக்கிறது. இந்த ஊழலின் வேரை பிடித்துக்கொண்டு போனால் அது முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசை நோக்கி செல்லும் என்பது அவர்களுக்குத் தெரியும். தன்னுடைய பதவிக்காலம் முடிவடைய இருக்கிற நிலையிலாவது மன்மோகன் சிங் வாய்திறந்து உண்மைகளைச் சொல்ல வேண்டும்.     நன்றி----தீக்கதிர் 

No comments: