1917 நவம்பர் 7ல் நடைபெற்ற ரஷ்யப் புரட்சி உலகையே மாற்றி அமைத்த புரட்சி. அதனால்தான் நமது மகாகவி பாரதியும் இதனை யுகப் புரட்சி என வர்ணித்தார். புரட்சி நடைபெற்ற காலத்தில் ரஷ்யாவின் நிலைமைகளை அறிந்து கொள்வது அவசியம். ஐரோப்பா கண்டத்திலேயே மிகவும் பிற்போக்கான அரசியல் பொருளாதாரம், கலாச்சாரம் உள்ள நாடாக ரஷ்யா விளங்கியது. முந்நூறு ஆண்டுகளுக்கு மேல் ஜார் மன்னர்களின் கொடுங்கோல் ஆட்சி நடைபெற்ற பூமி அது. அங்குள்ள மத ஸ்தாபனங்கள் ஜார்களின் ஆட்சியை தாங்கும் தூண்களாக இருந்தன. அவர்களின் கைக்கூலியாகவும் செயல்பட்டன. ரஷ்ய தேசம் பரிசுத்த ரஷ்யா என்றும் அழைக்கப்பட்டது. ஜார் மன்னர்கள் சிறுவெண்பிதா என்று அழைக்கப்பட்டனர்.1914 - 18 முதல் உலக மகா யுத்தம் ஜார் ருஷ்யாவிற்கும், ஜெர்மனிக்கும் நடைபெற்ற யுத்தத்தில் ரஷ்ய மக்கள் பெரும் இன்னல்களுக்கு உள்ளாகினர். விவசாயிகள், தொழிலாளர்கள் குடும்பங்களைச் சார்ந்த இளைஞர்கள் பல்லாயிரக்கணக்கில் போர்முனைக்கு அனுப்பப்பட்டனர். இவர்களுக்கு முறையான பயிற்சியுமில்லை, உரிய ஆயுதங்களும் வழங்கப்படவில்லை; நல்ல உடுப்புகள் கூட இல்லாமல் போர்க்களத்திற்கு அனுப்பப்பட்டனர். இவ்வாறு அனுப்பப் பட்டவர்கள் எல்லாம் போர்க்களத்தில் மாண்டு போனார்கள். வறுமை தாண்டவமாடியது. சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து போனது. எப்போது யுத்தம் நிற்கும்? நமது துன்ப துயரங்கள் தீர்வது எப்போது? என மக்கள் கவலையுடனும், கோபத்துடனும் இருந்தனர். கம்யூனிஸ்ட் கட்சி யுத்தத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்தது. இந்த யுத்தம் நாடு பிடிக்கும் பேராசை யுத்தம். ஏகாதிபத்தியங்களுக்கு இடையில் நடைபெறும் யுத்தம். மக்கள் பங்கேற்க வேண்டாம் என பிரச்சாரம் செய்தனர். உணவு வேண்டும், சமாதானம் வேண்டும், போரை நிறுத்து எனும் முழக்கம் நாடெங்கும் ஒலித்தது. 1917 மார்ச் 8 அன்று பீட்டர்ஸ்பர்க் நகரத்தில் பஞ்சாலையில் வேலை செய்த பெண் தொழிலாளர்கள் வேலையை நிறுத்திவிட்டு வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதை தொடர்ந்து மற்ற அனைத்து தொழில்களில் உள்ள தொழிலாளர்களும் போராட்டத்தில் பங்கு பெற்றனர். உணவு வேண்டும், அமைதி வேண்டும், எதேச்சதிகாரம் ஒழிக என்று முழக்கங்களை எழுப்பினர்.ஜாரின் கசாக்கு துருப்புகள் போராட்டத்தை அடக்க களத்தில் இறக்கப்பட்டன. ஆனால் துருப்புகள் போராடும் மக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்ய மறுத்தனர். போராட்டக்காரர்கள், குறிப்பாக பெண்கள், துருப்புகளிடம் பேசி தன்வயப்படுத்தினார்கள். படையாட்களும் தொழிலாளர்களுடன் சேர்ந்து கொண்டனர். பீட்டர்ஸ்பர்க் நகரத்தில் தொடங்கிய புரட்சி மாஸ்கோ உள்ளிட்ட மற்ற நகரங்களுக்கும் பரவியது.உணவு வேண்டும், நிலம் வேண்டும், யுத்தம் கூடாது, சமாதானம் வேண்டும் எனும் பெரும் முழக்கங்களுடன் தொழிலாளர்கள், விவசாயிகள் பெரும் திரளாக திரண்டு நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மார்ச் 12இல் தொழிலாளர்கள், இராணுவத்தினர் சேர்ந்து மந்திரிகள் பலரை கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். ஜார் மன்னன் ஓட்டம் பிடித்தான். தொலை தூரத்திற்கு சென்று பதுங்கிக்கொண்டான்.தொழிலாளர்கள், இராணுவ வீரர்கள், விவசாயிகள் அடங்கிய சோவியத்துகள் அமைக்கப்பட்டது. ஜார் ஆட்சி வீழ்ந்தது. 300 ஆண்டுகால ஜார் மன்னர்களின் சகாப்தம் முடிவுக்கு வந்தது.புரட்சி நடைபெற்ற காலத்தில் முக்கிய தலைவர்கள் நாடு கடத்தப்பட்டோ அல்லது தலைமறைவாகவோ வெளியில் இருந்தனர். லெனின் சுவிட்சர்லாந்தில் இருந்தார். ஸ்டாலின் சைபீரியாவில் இருந்தார். புரட்சி நடைபெற்ற தகவல் தெரிந்த பிறகே நாடு திரும்பினர்.ஏப்ரல் 17ஆம் தேதி லெனின் ரஷ்யா வந்து சேர்ந்தார். நிலைமைகளை ஆய்வு செய்தார். தொழிலாளர் வர்க்கம் புரட்சியை நடத்தி, ஆட்சி அமைக்கும் உரிமையை முதலாளித்துவ வர்க்கத்திடம் ஒப்படைத்து நிலைமையின் விபரீதத்தை தோழர்களிடம் விளக்கினார். இடைக்கால அரசாங்கம் யுத்தத்தை தொடர்ந்து நடத்தியது. ஜார் ஆட்சி போன பின்பும் நிலைமைகளில் மாற்றம் இல்லை. இடைக்கால அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் நாளுக்கு நாள் வலு வடைந்தது.
தொழிலாளர்கள், விவசாயிகள் ஒற்றுமை வலுவடைந்தது. சோவியத்துகளில் போல்ஷ்விக்குகளின் பலம் பெருகியது. தொழிற்சாலைகள் அனைத்தும் தொழிலாளர்களுக்கே! நிலங்கள் அனைத்தும் விவசாயிகளுக்கே! அதிகாரம் அனைத்தும் சோவியத்துகளுக்கே! என முழக்கங்களை எழுப்பிக்கொண்டு மக்கள் வீதிகளில் திரண்டனர். பெட்ரோகிராடில் அகில ருஷ்ய சோவியத் காங்கிரஸ் கூட்டங்கள் அடுத்தடுத்து நடைபெற்றன. ஒவ்வொரு கூட்டமும் அதற்கு முந்தைய கூட்டங்களை விட தீவிரத்தன்மை வாய்ந்ததாக அமைந்தது.நவம்பர் 7 அன்று அனைத்து ருஷ்ய சோவியத்துகள் மாநாடு பெட்ரோகிராடு நகரில் கூட்டப்பட்டது. அதே தேதியில் புரட்சியை நடத்திடவும் திட்டமிடப்பட்டது. திட்டமிட்டபடியே நவம்பர் 7இல் புரட்சி தொடங்கப்பட்டது. தொழிலாளர்கள், விவசாயிகள், செம்படையினர், ராணுவத்தினர்கள் இடைக்கால அரசாங்கத்தின் கேந்திரமான அலுவலகங்களை கைப்பற்றிக் கொண்டனர். இடைக்கால அரசாங்கம் வீழ்ந்தது. மார்ச் 8இல் தொடங்கி மக்கள் தொடர்ந்து புரட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாலும் முன்கூட்டியே சரியாக திட்டமிடப்பட்டதாலும் புரட்சி பெரிய அளவில் எதிர்ப்பின்றியே வெற்றி பெற்றது.அதுவரையில் தலைமறைவாக இருந்து புரட்சி நடவடிக்கைகளை இயக்கி வந்த லெனின் நவம்பர் 8 அன்று அகில ருஷ்ய சோவியத் காங்கிரஸ் நடைபெற்ற ஸ்மால்னி கழக கட்டிடத்தில் தோழர்கள் முன் தோன்றினார். அண்டமே அதிரும் அளவிற்கு மக்கள் கரவொலி எழுப்பி எழுச்சி முழக்கங்களுடன் வரவேற்றனர்.லெனின் தலைமையில் பாட்டாளி வர்க்க அரசு அமைக்கப்பட்டது.
No comments:
Post a Comment