Sunday 15 November 2015

சமூகத் தற்கொலை செய்துகொள்கிறோமா நாம்?...

ஆந்திராவின் கிருஷ்ணா நதி நீர் கிடைக்காவிட்டால் சென்னையில் தவித்த வாய்க்கு தண்ணீர் கிடைக்காது. கர்நாட காவின் காவிரி நீர் கிடைக்கவில்லை என்றால் நெற்களஞ்சியமான டெல்டா பகுதிகள் பாலைவனமாகிவிடும். பெரியாறு, பவானி, சிறுவாணி இந்த ஆறுகளின் குரல் வளை எல்லாம் கேரளாவின் கையில் இருக்கிறது. கேரளா அந்தக் குரல்வளை யைக் கொஞ்சம் நசுக்கினால் போதும், நமது கொங்கு மண்டலமும் காலி; தென் மாவட்டங்களும் காலி. இப்படி ஒரு மாநிலத்தின் பெரும் பகுதியே தண்ணீருக் காக அண்டை மாநிலங்களை நம்பியிருக்க வேண்டிய நிலை. குழாயடிச் சண்டைப் போடாத குறையாகத்தான் அங்கெல்லாம் தண்ணீரைப் பெற்று வருகிறோம். இதில் நமது கட்சித் தலைவர்கள் செய்யும் அரசியல் இருக்கிறதே... சினிமா நடிகர்களே தோற்றுவிடுவார்கள். சரி, இப்படி தண்ணீருக்காக நாம் கையேந்தி நிற்கும் அண்டை மாநிலங்களின் மழை அளவைவிட நம் தமிழகத்தின் மழை அளவு அதிகம் என்கிற உண்மை தெரியுமா?ஒரு புள்ளிவிவரத்தைப் பார்ப்போம். உலக ஆண்டு சராசரி மழையளவு 840 மில்லி மீட்டர். இந்திய ஆண்டு சராசரி மழையளவு 1,170 மி.மீ. கர்நாடகம் 732 மி.மீ. ஆந்திரம் 908 மி.மீ. இப்போது தமிழகத்தின் ஆண்டு சராசரியைப் பார்ப்போம். ஜனவரி முதல் மே மாதம் வரை பொழியும் உபரி மழை 179 மி.மீ. ஜூன் முதல் செப்டம்பர் வரை பொழியும் தென்மேற்குப் பருவ மழை 307 மி.மீ. அக்டோபர் முதல் டிசம்பர் வரை பொழியும் வடகிழக்குப் பருவ மழை 439 மி.மீ. ஆக மொத்தம் 925 மி.மீ. ஆந்திர மாநிலத்தைவிட தமிழகத்தில் 17 மி.மீ மழையளவு அதிகம். கர்நாடகத்தைவிட 193 மி.மீ அதிகம்.அதேசமயம் கர்நாடகம் கடந்த 1991-ம் ஆண்டில் 11.20 லட்சம் ஏக்கராக இருந்த தனது விவசாய பாசனப் பரப்பை இன்று 21.71 லட்சம் ஏக்கராக வளர்த்தெடுத்துள்ளது. ஆனால், தமிழகமோ 1971-ம் ஆண்டில் 28 லட்சம் ஏக்கராக இருந்த தனது பாசனப் பரப்பை 2014-ல் 21 லட்சம் ஏக்கராக அழித்துக்கொண்டது. அதிகம் மழை பெறும் நமது மாநிலம் 7 லட்சம் ஏக்கர் பாசனப் பரப்பை இழந்துள்ளது. குறைந்த மழை பெறும் கர்நாடகம் 10.51 லட்சம் ஏக்கர் பாசனப் பரப்பை அதிகரித்துள்ளது. இத்தனைக்கும் அண்டை மாநிலங்களிடம் தமிழகத்தைப் போல 2 ஆயிரம் ஆண்டுகாலப் பாரம்பரிய நீர் கட்டமைப்புகள் எல்லாம் ஒன்றுமில்லை. ஆனால், அவை எல்லாம் பிற்காலத்தில் விழித்துக்கொண்டன. சிறப்பாக நீர் மேலாண்மை செய்கின்றன. (ஆந்திராவும் கர்நாடகாவும் செய்துவரும் சிறப்பான நீர் மேலாண்மை மற்றும் பாசனத் திட்டங்கள் குறித்து பின்னர் விரிவாகப் பார்ப்போம்)
இன்னொரு உதாரணம்: கோதாவரி, கிருஷ்ணா போன்ற மிகப் பெரிய நதிகள் கொண்ட ஆந்திராவில் இயந்திரங்களைக் கொண்டு ஆற்றில் மணல் அள்ளத் தடை விதித்திருக்கிறார்கள். பெரியாறு உட்பட 44 ஆறுகள் கரை புரண்டோடும் கேரளாவிலும் அப்படியே. அந்த மாநிலங்களுடன் ஒப்பிடும்போது இங்கே ஓடும் பாலாறு, தென்பெண்ணை, வைகை இவை எல்லாம் வானம் பார்த்த சிறிய ஆறுகள்தான். ஆனால், இங்கெல்லாம் அரசாங்கமே ராட்சத இயந்திரங்களின் மூலம் மணல் அள்ளுவதை என்னவென்று சொல்ல? நம் தாய் வயிற்றைக் குத்திக் கிழித்து ரத்தம் குடிக்கிறோம் நாம். கர்நாடகாவும் ஆந்திரமும் முன்னோக்கிச் செல்கின்றன. நாம் மட்டும் அதள பாதாளத்துக்குச் செல்கிறோம். இந்தக் கொடுமையை எங்கேச் சொல்லி முட்டிக்கொள்வது?எல்லாவற்றுக்கும் காரணம், நாம் இயற்கையை மதிக்கவில்லை. நம்மைத் தவிர வேறு எதையுமே ஓர் உயிராக நாம் பாவிப்பதே இல்லை. மண்ணின் மீது பேராசை; வனத்தின் மீது பேராசை; வன உயிர்களின் மீது பேராசை; மலையின் மீது பேராசை; நீர் நிலைகளின் மீது பேராசைஎல்லாவற்றையும் அசுர வெறிக் கொண்டு அழித்துக்கொண்டிருக்கிறோம். இது இயற்கையின் மீதான அழிவு மட்டுமல்ல; நம் தலையின் மீது நாமே மண் அள்ளிப் போட்டுக்கொண்டிருக்கிறோம். சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் இதன் பெயர் சமூகத் தற்கொலை.
தமிழகத்தில் அரசாங்கத்தின் கணக்குப்படி 39,202 ஏரிகள் இருக்கின்றன. அவற்றில் 100 ஏக்கருக்கும் அதிகமான ஆயக்கட்டு கொண்டவை 18,789. இவை பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. 100 ஏக்கருக்கும் குறைவான ஆயக்கட்டு கொண்டவை 20,413. இவை உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. இவைத் தவிர, 3,000 கோயில் குளங்கள், 5,000 ஊருணிகள் இருக்கின்றன. இவற்றின் மொத்த நீர் கொள்ளளவு 390 டி.எம்.சி. இது சாதாரண அளவு அல்ல; ஒரு டி.எம்.சி. தண்ணீர் என்பது 100 கோடி கனஅடி தண்ணீர். எவ்வளவு பிரமாண்டம்! இது தமிழகத்தின் மொத்த அணைக்கட்டுகளின் நீர் கொள்ளளவான 243 டி.எம்.சியை விட அதிகம். ஏன், காவிரி ஆற்றுப் படுகையில் கிடைக்கும் 249.60 டி.எம்.சியை விடவும் அதிகம். இப்போது புரிகிறதா நம் முன்னோர்கள் வெட்டிய ஏரிகளின் அருமை!ஏரிகளை மட்டுமே ஒழுங்காகப் பராமரித்திருந்தாலே நாம் விவசாயத்துக்காக ஆறுகளையும் அணைகளையும் நம்பியிருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது.
சுழலியலாளர்கள் ஏரியைப்பூமியின் கண்என்று குறிப்பிடுகிறார்கள். நாம் அந்தக் கண்ணில் கழிவுகளைக் கொட்டி குருடாக்கி வருகிறோம். மொத்தம் உள்ள 39,202 ஏரிகளில் இன்று சுமார் 5,000 முதல் 6,000 ஏரிகளை காணவில்லை. கோவையிலும் மதுரையிலும் கடல் போல் விரிந்த ஏரிகள் எல்லாம் சாக்கடையாகத் தேங்கி கொசு உற்பத்தி மையங்களாக துர்நாற்றம் அடிக்கின்றன. மறைந்த கவிஞர் கா.மு. ஷெரீப் எழுதி, எஸ்.எஸ்.ஆர் நடித்தஏரிக்கரை மீது போறவளே பொன்மயிலே...’ பாடல் காட்சி சேலம் பனமரத்துப் பட்டி ஏரியில் படமாக்கப்பட்டபோது, அந்த ஏரி 2,700 ஏக்கர் பரப்பில் விரிந்து கடல்போலத் தண்ணீர் தளும்பியதாம். இப்போது ஒரு வாரமாக சேலத்தில் நல்ல மழை பெய்துகொண்டிருக்கிறது. ஆனால், பனமரத்துப்பட்டி ஏரியில் சொட்டுத் தண்ணீர் இல்லை. ஏரி முழுவதும் கருவேல முட்செடிகள் நிறைந்து நெஞ்சை குத்திக் கிழிக்கின்றன.---நன்றி  தமிழ் இந்து 

No comments: