Friday 13 November 2015

மகாராஷ்ட்ராவில் இந்த ஆண்டு மட்டும் 2016 விவசாயிகள் தற்கொலை-விசாரணை நடத்த தலைவர்கள் வலியுறுத்தல்

மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்த ஆண்டு மட்டும் 2016 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இது பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று விவசாய சங்க தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்மகாராஷ்ட்ரா மாநிலத்தில் முதல்வர் பட்நாவிஷ் தலைமையில் பாரதிய ஜனதா மற்றும் சிவசேனா கூட்டணி ஆட்சி உள்ளது. இந்த மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலை செய்வது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இதை தடுக்க ஆளும் பாரதிய ஜனதா அரசு நடவடிக்கை எடுப்பதில்லை என்று குற்றச்சாட்டு கூறப்படுகிறது. இங்குள்ள விதர்பா மற்றும் மராத்வாடா பகுதிகளில் விவசாயிகள் தற்கொலை செய்வது அதிகமாக உள்ளது.இங்கு கடந்த 2009-ம் ஆண்டில் 1600 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். 2010-ம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 1740 ஆக உயர்ந்தது. கடந்த 2014-ம் ஆண்டில் 1949 விவசாயிகள் தற்கொலை செய்தனர். இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை மகாராஷ்ட்ரா மாநிலத்தில் தற்கொலை செய்த விவசாயிகளின் எண்ணிக்கை 2016 ஆக உயர்ந்து விட்டது. இந்த ஆண்டு விதர்பா பகுதியில் 1010 விவசாயிகளும், மராத்வாடா பகுதியில் 695 விவசாயிகளும் தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் விவசாயிகளிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.இது பற்றி அரசு விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாய சங்க தலைவர்களும், விவசாய நிபுணர்களும் வலியுறுத்தி உள்ளனர்.இது குறித்து சுவாபிமானி பக்சா கட்சியை சேர்ந்த ஹட்கங்கலே தொகுதி எம்.பி. ராஜூ ஷெட்டி கூறியதாவது:- கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் வறட்சியால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு நஷ்டம் ஏற்பட்டதால் விவசாயிகள் தற்கொலை முடிவை எடுத்து உள்ளனர். பருவ காலத்தில் உரிய மழை பெய்யாமலும், இந்த ஆண்டு அறுவடை நேரத்தில் அதிக மழை பெய்து பயிர்கள் அழிந்ததாலும் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். ஆளும் பட்நாவிஷ் தலைமையிலான பாரதிய ஜனதா அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இப்போது பருவகாலம் தொடங்கி விட்டது. ஆனால் 20 லட்சம் ஹெக்டர் விவசாய நிலங்கள் சாகுபடி செய்யப்படாமல் வீணாக கிடக்கிறது. விவசாயிகள் பிரச்சனைக்கு அரசு விரைவில் தீர்வு காண வேண்டும்.விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட 14 மாவட்டங்களில் வசிக்கும் 60 லட்சம் விவசாயிகளின் குழந்தைகளுக்கு மருத்துவ வசதி மற்றும் கல்வி வசதிகளை அரசு செய்து கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

No comments: