Saturday 28 November 2015

எளிய தமிழர்களின் முனகல்களை கவனித்த ஜப்பானியத் தமிழறிஞர் நொபுரு கரோஷிமா காலமானார்

நொபுரு கரோஷிமா ஒரு வரலாற்று அறிஞர். தமிழக வரலாற்றை வித்தியாசமான கோணத்தில் பார்த்து எழுதிய அறிஞர்.சமூகம் எப்படி இயங்கியது, எப்படி மாறியது என்பது தெரியாமல் அரசியல் வரலாற்றை - ஆட்சி வரலாற்றை- புரிந்துகொள்ள முடியாது என்னும் கொள்கையில் ஆழமான நம்பிக்கை கொண்டவர்.தமிழகத்தின் மன்னர் ஆட்சிகளைப் பேரரசுகளின் ஆட்சிகளாகப் பார்த்து வரலாறு எழுதிய பழைய தலைமுறை வரலாற்று ஆய்வாளர்களிடமிருந்து வேறுபட்டுத் தமிழக வரலாற்றைப் பார்த்தவர். இன்றைய தமிழ்த் தேசியத்துக்கு உரம் போடும் செய்திச் சுரங்கமாக அவர் தமிழக வரலாற்றைப் பார்க்கவில்லை.அன்றைய தமிழ்ச் சமூகத்தின் வாழ்முறையை அறிந்துகொள்ளும் செய்திச் சுரங்கமாகவே அவர் கல்வெட்டுகளைப் பார்த்தார். அரசர்களின் போர் வெற்றிகளைப் பறைசாற்றும் சாதனமாக மட்டும் அவற்றை அவர் பார்க்கவில்லை.கல்வெட்டுகளிலிருந்து அரச வெற்றிகள் பற்றி நாம் கேட்கும் உரத்த குரலை மட்டுமல்லாமல், அவற்றிலிருந்து வரும் முனகல்களையும் கேட்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். இந்த முனகல்களில்தான் சாதாரண மக்களின் குரலைக் கேட்கலாம்.அதே நேரத்தில், தமிழகத்தின் வணிக உறவுகள், கலாச்சார உறவுகள் தூரத்து நாடுகளிலும் நிலை பெற்றிருந்ததை உலகுக்கு எடுத்துச் சொன்னார். சீனாவில் தமிழ்க் கல்வெட்டு இருப்பதைக் கண்டு சொன்னவர்கரோஷிமா. அவருடைய ஆய்வு பெரும்பாலும் சோழர் காலத்தைச் சார்ந்தது. ஆனாலும், அது சிங்கநோக்காக சோழருக்கு முந்திய காலத்தையும் பிந்திய காலத்தையும் பார்க்க இன்றியமையாதது. கரோஷிமாவின் விஜயநகர ஆட்சி பற்றிய ஆராய்ச்சியில் இதைக் காணலாம்.
தமிழ் மீது காதல் கொண்ட கரோஷிமா
இவருடைய ஆராய்ச்சியின் தரவுகள் பெரும்பாலும் கல்வெட்டுகளிலிருந்து வருபவை. தொடர்ந்து கல்வெட்டுகளில் மற்ற ஆய்வாளர்களும் இளம் தலைமுறை ஆய்வாளர்களும் ஈடுபடப் பல தரவுகளைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார் கரோஷிமா. இவற்றைப் பயன்படுத்தாமல் செய்யும் எந்தத் தமிழக வரலாற்று ஆராய்ச்சியும் மேலோட்டமானதாகவே இருக்கும்.கரோஷிமா தமிழ்க் கலாச்சாரத்தின்மீதும் மக்களின் மீதும் காதல் கொண்டவர். தமிழ்க் கலாச்சாரத்தைப் பற்றித் தன்னுடைய ஜப்பானிய மாணவர்களுக்காக ஒரு ஆவணப்படம் எடுத்திருக்கிறார். இந்தப் படம் தமிழ்ப்படுத்தப்பட்டுத் தமிழர்களின் பார்வைக்குக் கொண்டுவரப்படவேண்டும்.கரோஷிமா உலகப் புகழ்பெற்ற டோக்கியோ பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். அந்தத் துறையில் தென்னிந்திய வரலாற்றைப் படிக்க இடம் தேடித் தந்தவர். இந்த ஆராய்ச்சிக்குப் பல ஜப்பானிய மாணவர்களை உருவாக்கியவர். ஐரோப்பா, அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் பெயர் பெற்ற தென்னிந்திய ஆய்வாளர்கள் பலர் உண்டு. அவர்களின் செல்வாக்கு இந்தியாவில் உள்ள வரலாற்று அறிஞர்களிடம் அதிகம். அந்த மேல்நாட்டு அறிஞர்களின் ஆராய்ச்சிப் போக்கில் கரோஷிமாவின் அணுகுமுறையின் தாக்கத்தைக் காணலாம். இந்தத் தாக்கம் தமிழ் நாட்டு வரலாற்று அறிஞர்களிடமும் நேரடியாக ஏற்பட வேண்டும்.
உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத் தலைவர்கரோஷிமா
உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக இருந்தபோது நான் அதன் செயலாளாராக இருந்தேன். அப்போது அவரோடு நெருங்கிப் பழகியிருக்கிறேன். அவர் மனம் செயல்படும் விதம் தெரியும். தஞ்சை மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய பிறகு அடுத்த மாநாட்டை நடத்தக் காலம் தாழ்த்தியதற்கு அவரிடம் வலுவான காரணங்கள் இருந்தது  உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் எதிர்காலம் பற்றிச் சில சிந்தனைகள் அவரிடம் இருந்தன. தமிழ் ஆய்வை இக்காலத் தமிழ் அரசியலிலிருந்து பிரிப்பது அவற்றில் ஒன்று. அதையே அவருடைய வாழ்க்கைச் செய்தியாக நாம் கொள்ளலாம்.

No comments: