Saturday, 14 November 2015

NOV-14, சர்வதேச நீரிழிவு நோய் தினம்...

மனிதர்களை அச்சுறுத்தும் பல விடயங்களில் மிகமுக்கிய இடம்பிடிப்பது நோய்கள்தான். இன்று நோய்கள் இல்லாத ஒருவரை தேடிப்பிடிப்பது அவ்வளவு இலகுவானதல்ல. உலகை அச்சுறுத்தும் பல நோய்களில் நீரிழிவு நோய்க்கும் பிரதான இடம் உண்டு. மனித உடலுக்குத் தேவையான இன்சுலினை உடல் உற்பத்தி செய்யாத நிலையில்தான் Diabetics எனும் நீரிவு நோய் தாக்குகிறது. இன்சுலின் சமச்சீர் நிலையை இழப்பதால் ஏற்படும் தன்மையே நீரிழிவு என்பதால் இது ஒரு நோயாகக் கருதப்படுவதில்லை என்றாலும், பல வியாதிகளுக்கு நிரிழிவு நோயே முக்கியக் காரணியாக அமைந்துவிடுகிறது. 1921-ஆம் ஆண்டு சார்ஸ் பெஸ்ட் என்பவரோடு இணைந்து, பிரட்ரிக் பான்ரிங் என்பவர் நீரிழிவு நோய்க்கான இன்சுலினை கண்டுபிடித்தார். இவரது பிறந்த தினத்தை முன்னிட்டும் நீரிழிவு நோய் மீதான விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலும் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14 ஆம் தேதியை உலக நீரிழிவு நோய் தினமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. 1991ஆம் ஆண்டு முதன்முதலில் நீரிழிவு தினம் அனுஷ்டிக்கப்படத் தொடங்கியது. தற்போது உலக அளவில் 192 நாடுகளில் அனுஷ்டிக்கப்படுகின்றது. நீரிழிவு நோயாளி சுயகட்டுப்பாட்டுடன் செயற்பட்டால் உடல் ஆரோக்கியத்தைப் பேணி, வாழ்நாளை நீடித்துக்கொள்ள முடியும் என்பது மிக முக்கியமான விடயமாகும். நீரிழிவு நோய் குறித்து நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாக அறியப்பட்டிருந்தாலும் இதற்கான உறுதியான சிகிச்சை முறை என்பது இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப கட்டத்தில்தான் கண்டறியப்பட்டது. 1922ஆம் ஆண்டில் 'பேண்டிங்க் அண்ட் பெஸ்ட்' என்ற கனடா நாட்டு விஞ்ஞானிகள் கூட்டணி இன்சுலின் மூலம் நீரிழிவு நோயை முழுமையாக கட்டுப்படுத்தலாம் என்பதைக் கண்டறிந்தனர். இலங்கையின் சனத்தொகையில் 25 வீதமானவர்களுக்கு இந்த நோய்த்தாக்கம் இருப்பதாகவும் இவ் வீதம் 2050 ஆம் ஆண்டளவில் இரட்டிப்பாகுமெனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலகளாவிய ரீதியில் நீரிழிவு நோயாளிகள் அதிகம் உள்ள 10 நாடுகளை (2009 தகவல் படி) பின்வருமாறு வகைப்படுத்தலாம். (1) இந்தியா,  (2) சீனா, (3) அமெரிக்கா (4), இந்தோனேசியா (5), ஜப்பான் (6), பாகிஸ்தான் (7), ரஷ்யா (8), பிரேஸில் (9), இத்தாலி (10) பங்களாதேஷ் என்பனவாகும். உலக நீரிழிவு நோய் தினத்தில் நீரிழிவுநோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான பிரச்சாரங்கள் சர்வதேச ரீதியில் முன்னெடுக்கப்படுகின்றன. பல்வேறு சுகாதார அமைப்புகளும் மருத்துவமனைகளும், தன்னார்வத் தொண்டர் நிறுவனங்களும், நீரிழிவு நோய் அமைப்புகளுடன் இணைந்து இத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றன. உலக அளவில் நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வு பிரசாரங்களுக்கு வானொலி, தொலைக்காட்சி, விளையாட்டுப் போட்டிகள், பிரசாரங்கள், விழிப்புணர்வுக் கூட்டங்கள், பயிற்சி முகாம்கள், கருத்தரங்குகள் ஆகிய தொடர்பு சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அது மட்டுமல்லாமல், ஐக்கிய நாடுகள் சபை இந்த நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தனியான அடையாளச் சின்னம் ஒன்றை வடிவமைத்து வெளியிட்டிருக்கிறது. நீலநிறத்திலான வளையம் நீரிழிவு நோய் தடுப்பின் சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. மருத்துவ ஆலோசனைப்படி நடப்பதில் நீரிழிவு நோயாளி முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதன் மூலம் இந்நோயின் தொடர் விளைவுகளைத் தடுக்கவோ அல்லது குறைக்கவோ முடியும்

No comments: