ஆன்மிக நோக்கில் ஒரு புரட்சிகரமான பார்வையை, விரிந்தளாவிய மனப் பக்குவத்தை இந்தியாவுக்கு வழங்கிய விவேகானந்தரின் சிந்தனைகளின் தொடர்ச்சியாக நீதிநாயகம் வி.ஆர். கிருஷ்ணய்யர் திகழ்கிறார். இந்தியா ஏன் ஒரு மதச்சார்பின்மை நாடாக இருந்தாக வேண்டும் என்பதற்கு இந்த இருவருமே இந்திய ஆன்மிக மரபைத் துணைகொண்டு விளக்கம் தருகிறார்கள்.இந்திய வரலாற்றை மதமோதல்களின் வரலாறாக மாற்றுவதற்குப் பல்வேறு தரப்புகளிலுமுள்ள சிறிய பகுதியினர் மேற்கொள்ளும் முயற்சிகளுக்குப் பெரும் மனத் தடைகளை ஆன்மிக, சமூக மரபின் வழியாகவே உருவாக்குகிறது இந்த நூல்.
புரட்சிகர மனிதாபிமானியான எம்.என். ராய், “மரபுச் செல்வங்களின் பெருமையை உணர்ந்து போற்ற இயலாமைதான் நம் கால கட்டத்தின் மகத்தான நெருக்கடி” என்று சாடிவிட்டு, மதச்சார்பின்மை நவீன அறிவியல் உலகின் சமூகக் கலாச்சாரத் தேவை என வரையறுக்கிறார். மதச்சார்பற்ற நாடு எனும்போது பலரும் எதிர்கொள்ளும் சிக்கல், தம் மதத்தைத் தானும் தனது நாடும் துறந்துவிட வேண்டும் என்று இந்தக் கருத்து வலியுறுத்துகிறதோ என்கிற அச்சம் மேலிடுவதால்தான். ஆனால் இந்தியச் சமூகப் பார்வை கொண்ட ராய், மதத்தை அதன் உண்மையான லட்சியத்தை வளர்க்கும் கருவியாகப் பயன்படுத்த ஊக்கமளிக்க வேண்டும், அறம் சார்ந்து செயல்படும் சுதந்திரமும் பகுத்தறிவும் கொண்டதாக இருக்க வேண்டுமென வரையறுக்கிறார்.இதன் வழியாக இந்தியா தனது சுதந்திரத்தை மதச்சார்பின்மை எனும் மாமருந்துகொண்டே எட்ட முடியும் என கிருஷ்ணய்யர் கூறுகிறார். இதன் மறுபக்கம் சிறுபான்மை மதவாதத்துக்கு ஆதரவாய் இருப்பதுவும் அல்ல. இங்கு நேரும் குழப்பத்தை அகற்ற அவர் மூன்று வகைகளில் முயற்சி செய்கிறார். அறிவியல், ஜனநாயகம், இந்திய ஆன்மிக மரபு எனும் முப்பெரும் பார்வைகளால் தன் கருத்துக்களைச் செம்மை செய்து அறிவும் மனிதநேயமும் இணைந்து நிற்கிற பகுதியாக ஆக்குகிறார்.அறிவியலிலும் ஜனநாயக சோஷலிசத்திலும் இன்னும் கைப்பக்குவம் இல்லாத இந்திய உளவியலைச் சமைப்பதற்காக அவர் இந்திய ஆன்மிக மரபை முன்வைக்கிறார். இதன் வாயிலாக மதச்சார்பின்மை ஓர் இயற்கையான முகிழ்ப்பு என நிறுவப்படுகிறது; அது வலிந்து இந்திய அரசமைப்புச் சட்டத்துக்குள் சொருகப்படவில்லை.
இந்தியாவின் தனித்த அரசியல் மற்றும் சமூக வளர்ச்சிக்கு ஒவ்வொருவரின் பங்களிப்பும் தேவை. இதற்கு கிருஷ்ணய்யர் முன்வைக்கும் வாதம் அருமையானது. நம்மை ஒருவர் வழிநடத்திச் செல்வதைவிட நாமே நம்மை வழிநடத்தக் கோருகிறார்: “நாம் வெறும் பயணிகள் அல்ல; நாமே மாலுமிகள்; நமது கப்பல் எந்தக் கரையைச் சேரவேண்டும் என்பதை நாமே முடிவு செய்ய வேண்டும்.”மதச்சார்பின்மையைச் சட்டமன்றத் தீர்மானத்தாலோ அரசின் ஆணைகளாலோ வளர்த்துவிட முடியாது. இதைத் தெரிந்துகொண்ட நிலையில் மதச்சார்பின்மைத் தத்துவத்துக்கு நாடு, நாட்டின் ஐக்கியம், வளர்ச்சி, பின் அதற்கான ஆன்மிக உள்ளுறை என்று நாலா பக்கங்களிலும் அதனைச் செப்பமுறச் செதுக்குகிறார் கிருஷ்ணய்யர். இவை சமூக விஞ்ஞானத்தின் கண்ணிகளாக நம்மைச் சூழ்கின்றன.இங்கு மதம் சார்ந்த வெறுப்புகள் ஏன் விதைக்கப்படுகின்றன, அவற்றின் உண்மையான நோக்கம் என்ன, இவற்றால் ஆதாயம் அடைகிற சக்திகள் எவை, அவை எங்கே இருக்கின்றன என்றெல்லாம் கிருஷ்ணய்யர் எழுப்பும் கேள்விகள் நம் மனசாட்சிக்கு அழைப்பு விடுக்கின்றன. “செத்த பன்றியும் பசுவும்கூட நம் குடியரசை நடுநடுங்கச் செய்கிறதே, இதைக் கண்டு சிரியுங்கள்” என்று கிருஷ்ணய்யர் சொல்கிறார். அது சிரிப்பதற்கான வாய்ப்பு அல்ல, நம் மனசாட்சிக்கு விடுக்கப்படும் சவால்...
No comments:
Post a Comment