Monday 18 January 2016

ஜனவரி 19 தியாகிகள் தினம் . . .

தொழிலாளர் - விவசாயிகள் வர்க்க ஒற்றுமை - ஒன்றுபட்ட போராட்டமே தீர்வு
1982 ஜனவரி 19-இல் துவங்கிய போராட்டம் அன்றைய ஆட்சியாளர்களின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிரானது. ஆனால் இன்று நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்காதது, பருவ நிலையில் மாற்றம் காரணமாக விவசாயம் பொய்த்துவிட்டது. இவைகள் காரணமாக கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் 3லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்பட்டனர். விவசாய வேலைகளும், போதிய வருமானமும் இல்லாததால் விவசாயத் தொழிலாளர்கள் மாற்றுவேலைகளை தேடி நகரங்களை நோக்கி நகரத்து வங்கிவிட்டனர். இந்நிலையை தங்களுக்கு சாதகமாக்கிக்கொண்டு விவசாயத்தை கார்ப்பரேட்டுகளின் கைகளில் ஒப்படைக்க ஆட்சியாளர்கள் முயற்சிக்கின்றனர்.
பொதுவிநியோக முறையை முற்றிலும் சீரழித்துவிட்டனர். அனைத்திற்கும் நேரடி மானியம் என்பது மக்களை ஏமாற்றும் புதிய வழி. வேலை வாய்ப்பே இல்லாத வளர்ச்சி, ‘மேக் இன் இந்தியாஎன்கிற வேலைவாய்ப்பளிக்காத கொள்கை. மத்திய அரசுத்துறையில் உள்ள 5 லட்சத்திற்கும் மேற்பட்ட காலி இடங்களைக் கூட பூர்த்திசெய்ய தயாரில்லாத அரசு. யுபிஏ-1 காலத்தில் இடதுசாரிகளின் கடுமையான வற்புறுத்தலால் கொண்டுவரப்பட்ட நூறுநாள் வேலைதிட்டத்தை முடக்க முயற்சி, வேலைஇல்லா கால நிவாரணம் அறவே நிறுத்தப்பட்டது. விவசாய உற்பத்திப் பொருட்கள் கொள்முதலை நிறுத்திக் கொண்டது/குறைத்துக்கொண்டது, அரசு நினைத்தால் தங்கு தடையின்றி நிலத்தை பறித்துக்கொள்ளலாம் என்கிற சட்டத்திருத்த முயற்சி, தொழிலாளர்கள் போராடிப்பெற்ற உரிமைகளை பறிக்க முயற்சி, தொழிற்சங்க உரிமைகளை மறுப்பது,ஜனநாயக உரிமைகளின் மீது கைவைப்பது, என நிலைமை மிக மோசமாக மாறிவிட்டது.தமிழகத்தில் மன்னராட்சி காலம்போல் அனைத்திற்கும் கையேந்தும் நிலை. தமிழனின் வீரத்தை போற்றாதவர்கள் இல்லை. ஆனால் பொங்கலுக்கு இரண்டடி கரும்புக்கும், ரூ.100க்கும் கையேந்த வைக்கும் ஆட்சி. இவைகள் எல்லாம் ஜனநாயகம் சீரழிந்துவிட்டது என்பதை நிரூபிக்கிறது.
ஒற்றுமையை பிளவுபடுத்த முயற்சி
ஓட்டுவங்கிக்காகவும், தங்களது சுய நலனுக்காகவும் ஜாதியின் பெயரால், மதத்தின் பெயரால் உழைப்பாளி மக்களை பிளவுபடுத்த ஆட்சியாளர்களே முயற்சிப்பது. தேவை ஏற்படும்போது ராமர் கோயில் பிரச்சனையை முன் நிறுத்துவது. உணவைக்கூட அரசியலாக்கும் நிலை. யார் எதைச்சாப்பிட வேண்டும் என தீர்மானிப்பது ஆட்சியாளர்கள் என்றால் தனிமனித உரிமை என்ன ஆவது? அனைத்தையும் உருவாக்கும் விவசாயி தற்கொலையில் மடிகிறதைப்பற்றி கவலைப்படாத ஆட்சியாளர்களும், கட்சிகளும் மாட்டைப்பற்றி கவலைப்படுவது எதற்காக? உணவைக்கூட அரசியலாக்கவும், வாக்குவங்கியாக்கவும் முயற்சிக்கும் ஆட்சி அதிகாரத்தின் மமதை. தேர்தல்கள் வந்தாலே தங்களது பலத்தை அதிகரிக்க திட்டமிட்டு மதக்கலவரங்களை உருவாக்குவதும் அப்பாவி மக்கள் செத்து மடிவதும் வாடிக்கையாகிவிட்ட நிலை.இதுவரை இந்திய நாட்டில் இல்லாத அளவிற்கு கல்வித்துறையிலும், ஆராய்ச்சி நிறுவனங்களிலும், பொது ஸ்தாபனங்களிலும் மதத்தை முன்நிறுத்துவதை கண்டித்து எழுத்தாளர்களும், அறிஞர்களும், ஏனைய பலரும் தங்களுக்கு கிடைத்த வெகுமதிகளை திருப்பி ஒப்படைக்கும் நிலை. ஆட்சியாளர்களின் நன்மதிப்பை பெற ஆதாரமற்ற புராணக் கதைகளை முன்நிறுத்தி ஆய்வுகள் நடத்துவதும், அதை பொது சபைகளில் சமர்ப்பித்து அறிவு ஜீவிகளின் வெறுப்புக்கு ஆளாவதோடு மட்டுமல்ல இந்திய கௌரவத்தையே உலக அரங்கில் தலைகுனியச்செய்யும் நிலை.
ஒன்றுபட்ட போராட்டமே தீர்வு
மேற்கு வங்கத்தில் 1946 ஆம் ஆண்டில் வெடித்துக் கிளம்பியதெபாகாபோராட்டம் கடந்த நூற்றாண்டின் மிகப் பெரிய கிராமப்புற எழுச்சியாகும். வாரக்குத்தகை விவசாயிகளும், ஏழை விவசாயிகளும் ஜோட்டேதார்கள் மற்றும் ஜமீன்தார்களின் மரபு ரீதியான சுரண்டலுக்கு எதிராக நிலத்தில் நிரந்தர உரிமை, விளைச்சலில் மூன்றில் இரண்டு பங்கு(தெபாகா) உரிமை கோரி நடத்திய மாபெரும் போராட்டமாகும். 24 பர்கானா மாவட்டத்திலும், மிட்னாபூர் மற்றும் பல பகுதிகளிலும் பரவிய போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. கிராமப்புற தொழிலாளர்களும், மாட்டு வண்டி தொழிலாளர்களும், ‘டோங்காகுதிரை வண்டி தொழிலாளர்களும் பங்கேற்ற எழுச்சி மிகு தியாக வரலாறு கொண்ட போராட்டமாகும்.1982 விட மோசமான அரசியல் சூழலும், ஜனநாயகத்திற்கு ஆபத்தும் ஏற்பட்டுள்ள காலம் இது. எனவே கடந்த காலங்களை விட தொழிலாளி, விவசாயி ஒற்றுமை மிக முக்கியமானது. இந்த ஒற்றுமை நமக்கு ஒன்றும் புதிதல்ல.1967-70 காலங்களில் மேற்குவங்கத்தில் உபரிநிலத்தை கைப்பற்றுவது என்கிற கோஷத்துடன் களமிறங்கி கடும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய தொழிலாளர்கள். நில உடமையாளர்களும் காவல்துறையும் கைகோர்த்து நடத்திய தாக்குதல்களையும் முறியடித்து உருவாக்கப்பட்ட குத்தகைதாரர் பாதுகாப்புச் சட்டம். விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லையும், கோதுமையையும் அறுவடை பருவத்தில் அறுவடை செய்து தங்களது களத்திற்கு கொண்டு சென்றனர் நில உடமையாளர்கள். நிர்கதியாக நின்ற விவசாயிகளுக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் ஆதரவாக மேற்குவங்க சணல் ஆலைத் தொழிலாளர்கள், இஞ்சினியரிங் தொழிலாளர்கள், துர்க்காப்பூர் ஸ்டீல் தொழிலாளர்கள் என அனைத்து தொழிலாளர்களும் கையில் கிடைத்ததை எடுத்துக்கொண்டு காவல்துறையின் கடுமையான அடக்குமுறைகளையும் மீறி நில உடமையாளர்களின் களத்திற்கு நேரடியாக சென்று விவசாயிகளின் விவசாய பொருட்களை ஒருநெல்மணி கூட குறையாமல் மீட்டுக் கொடுத்த ஒற்றுமைப்போராட்டங்களை நடத்திக்காட்டிய வரலாற்றுக்குச் சொந்தக்காரர்கள் நாம். தமிழகத்தில் ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்ற விவசாயத் தொழிலாளர்கள் கூலிப்போராட்டத்தில் ரயில்வே தொழிலாளர்களின் பங்கு அளப்பெரியது. இப்படி எண்ணற்ற தொழிலாளர்- விவசாயி ஒற்றுமைப்போராட்டங்கள். இந்த ஒற்றுமையின் விளைவாகவே அடுத்து நடைபெற்ற தேர்தலில் மேற்குவங்கத்தின் கிராமப்புறங்களில் செங்கொடி பட்டொளிவீசி பறக்கத் துவங்கியது.ஜனவரி 19 - சாதாரண நாள் அல்ல. தொழிலாளிவர்க்கம் ஒட்டுமொத்தமாக, அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒன்றிணைத்து ஆட்சியாளர்களின் மமதைக்கு எதிராக, மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக, அடக்குமுறை தர்பாருக்கு எதிராக களமிறங்கிய நாள். தொழிலாளி வர்க்கத்தின் அனுமதியின்றி அணுவும் அசையாது என நிரூபித்த நாள். அனைத்து உரிமைகளையும் நிலைநாட்ட முன்னேற்றப்பாதையை வகுத்த நாள்.எனவே ஜனவரி 19 மீண்டும் நினைவு கூருவோம். தொழிலாளி விவசாயி ஒற்றுமையை வலுப்படுத்துவோம். புதிய சகாப்தம் படைப்போம்.

No comments: