Thursday 7 January 2016

2015ல் ஒரு தீவிரவாத செயல்கூட இல்லை ட குற்றங்கள் குறைந்தன - திரிபுரா சாதனை...

மகிழ்ச்சி பொங்கும் திரிபுராவின் ஒரு மலைக்கிராமத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் குழந்தைகள்....
கடந்த ஒரு ஆண்டில் எந்தவொரு தீவிரவாதச் செயலும் நடைபெறாத மாநிலம் என்ற பெயரை திரிபுரா மாநிலம் தட்டிச் சென்றுள்ளது.தீவிரவாதிகளின் அட்டகாசங்களால் திரிபுரா பெரும் நெருக்கடியில் சிக்கி இருந்தது. மக்களிடமிருந்து தீவிர வாதிகளைத் தனிமைப்படுத்தும் வகையில் திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது முன்னணி அரசு பல்வேறு நடவடிக்கை களை எடுத்தது. இதனால் கடந்த சில ஆண்டுகளாகவே தீவிரவாதச் செயல்கள் குறைந்தன. ஏராளமான தீவிரவாதிகள் தங்கள் ஆயுதங்களுடன் சரணடைந்தனர். அவர்களுக்கு முறையாக மறுவாழ்வு வாய்ப்புகள் தரப்பட்டன. இதனால், மக்கள் மத்தியில் அவர்களுக்கு இருந்த ஆதரவு மறைந்தது. மேலும், மக்களுக் குள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு அடிப் படைக் காரணங்கள் என்ன என்பதையும் அரசு எடுத்துச் சொல்லி வருகிறது.
இந்நிலையில்தான், 2015 ஆம் ஆண்டில் எந்தவொரு தீவிரவாதச் செயலும் திரிபுராவில் நடக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. பதான்கோட் விமானப் படைத்தளத்தில் தாக்குதல் நடந்துள்ள நிலையில், அது போன்ற விஷயங்களில் கூடுதல் கவனம்தேவைதான் என்று பத்திரி கையாளர்களிடம் பேசுகையில் தெரிவித்த திரிபுரா காவல்துறை தலைமை அதிகாரி கே.நாகராஜ், கடந்தாண்டில் தீவிரவாதச் செயல் நடக்கவில்லை என்பதையும் குறிப்பிட்டார்.
இது குறித்துப் பேசிய அவர், கடந்த 30 ஆண்டுகளாக திரிபுரா மாநிலம் தீவிரவாதச் செயல்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது அது பெரும்பாலும் கட்டுப்படுத்தப் பட்டுவிட்டது என்று கூறினார். மேலும் கூறிய அவர், ஒரு ஆண்டில் எந்தவொரு சம்பவமும் நடக்கவில்லை என்பதால்நாங்கள் மெத்தனமாக இல்லை. தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம். திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் இன்னும் வங்கதேசத்தைத் தளமாகப் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது 16 தீவிரவாதிகள் முகாம்கள்அங்கு உள்ளன.
கடந்த ஆண்டு நவம்பரில் பல முகாம்களை வங்கதேசப் பாது காப்புப் படையினர் அழித்தனர். குறிப்பாக, சிட்டகாங் மலைத் தொடர்பகுதியில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், மீண்டும் சில முகாம்களை தீவிரவாதிகள் அமைத்துள்ளனர் என்றார்.எல்லை தாண்டி தாக்குதல் நடப்பதற்கு வாய்ப்புகள் உள்ளனவா என்று கேட்டதற்கு, வங்கதேசத்துடன் திரிபுராவுக்கு 856 கி.மீ. எல்லை உள்ளது. வாய்ப்புகள் இல்லை என்று சொல்லி விட முடியாது. ஆனால் அத்தகைய தாக்குதல்கள் நடந்தால் அதை எதிர்கொள்ள நாங்கள் தயாராகவே இருக்கிறோம். எல்லைதாண்டி சட்டவிரோதமாக உள்ளே புகுந்த 1,761 வங்கதேசத்தவரைத் திருப்பி அனுப்பியுள்ளோம். ஒட்டு மொத்தமான சட்ட-ஒழுங்கு நிலைமை மேம்பட்டுள்ளது. குற்றங்கள் பெருமளவு குறைந்துள்ளன என்று கே.நாகராஜ் தெரிவித்தார்.

No comments: