எது உன் அடையாளம்? இந்திய இளைஞர் தினம் எது? இது வெறும் கேள்வி அல்ல. தத்துவக் கேள்வி. நான் எண்பதுகளில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் பணியாற்றிய காலத்திலேயே பெரும் விவாதமானது. ஜனவரி 12 விவேகானந்தர் பிறந்தநாளை இளைஞர் தினமாக அறிவிக்க ஒரு சாரார் கோரினர். மார்ச் 23 பகத்சிங்கும் அவனது தோழர்களும் தூக்கிலிடப்பட்ட தினத்தை இளைஞர் தினம் என அறிவிக்க நாங்கள் கோரினோம். ஆயின் பல்வேறு நிர்பந்தங்களால் ஜனவரி 12 இளைஞர் தினமாக அறிவிக்கப்பட்டது. ஆயின் அது அரசின் வெறும் சடங்காக மட்டுமே தொடர்ந்தது. விவேகானந்தர் மீது எமக்கு எந்த வெறுப்பும் கிடையாது. அவருடைய பேச்சிலும் எழுத்திலும் தெறித்த பல்வேறு முற்போக்குக் கூறுகளை நாங்கள் நிராகரிக்கவில்லை . பசுவதைக்கு எதிராக குரல் கொடுக்க மறுத்தவர். மாட்டுக்கறி உண்பதைஆதரித்தவர்.
அவர் வாழ்நாளில் ஒரு போதும் பாபர் மசூதியை இடித்து ராமர் கோயில் கட்டச் சொல்லவில்லை .பிற மதப் பகைமையை விசிறவில்லை .இதனை எல்லாம் நாங்கள் தொடர்ந்து சொல்லுவதில் தயக்கம் இல்லை. எது எப்படியாயினும், வீரத்துறவி என சொல்லினும் அவர் ஒரு மதம் சார்ந்தவரே. மதவெறி அமைப்புகள் அவரை முகமூடியாக்கி தங்கள் தீய நோக்கை நிறைவேற்றிக்கொள்ள இயலும் .அதுதான் இப்போது நடக்கிறது. விவேகானந்தர் பெயரை மோடியும் ஆர்எஸ்எஸ்-சும் முன் நிறுத்துவது வஞ்சக நோக்குடன்தான். இப்போது மோடி அரசு இளைஞர் தினத்தைக் கொண்டாட பெரிதும் ஈடுபாடு காட்டுவதும். “இந்தியா எழுந்திரு” என முழக்கம் எழுப்புவதும் யாரைக் காப்பாற்ற? கல்வியை விற்பனை பண்டமென உலக ஒப்பந்தத்தில் கையெழுத்திட துடிக்கும் மோடி,இளைஞர்களில் ஒரு சிறுபகுதியினர் எல்லாம் பெறவும், பெரும் பகுதியினர் குலத்தொழிலில் மூழ்கவும் சதித்திட்டம் தீட்டி மீண்டும் வர்ணாஸ்ரம தர்மத்தை நிலைநாட்ட முயல்கிறார். விவேகானந்தர் கடைசியில் எதற்கு பயன்படுத்தப்படுகிறார்? யார் பயன்படுத்துகிறார் ? நாம் எச்சரித்ததும் பயந்ததும் இதற்குத்தானே ! ஆனால் பகத்சிங் தன்னலமற்ற தியாகத்தின் குறியீடு. “நான் ஏன் நாத்திகன் ஆனேன்?”என அறிவுப்பூர்வமாய் சொன்னவர். சமத்துவ இந்தியாவைக் கனவு கண்டவர். விஞ்ஞான ரீதியாய் சோஷலிசமே விடியலின் பாதை எனத் தெளிந்தவர். அவர் பயங்கரவாதியல்ல; தேசத்தையும் மக்களையும் தீவிரமாய் காதலித்த வீர இளைஞர். தொலைநோக்குப் பார்வை கொண்டவர். அவரின் நினைவு நாள் தானே இந்திய இளைஞர்களின் கனல் நாளாகும்; கனவு நாளாகும்; இலட்சிய நாளாகும்; ஆம் மெய்யான என் இளைஞர் தினம் மார்ச் 23 என்பதை உரக்கச் சொல்லுவோம். வீறுடன் கொண்டாடுவோம். விடியலுக்கு விதை தூவுவோம். சரிதானே!- சு.பொ.அகத்தியலிங்கம்
No comments:
Post a Comment