Thursday, 4 September 2014

சமஸ்கிருத மேலாதிக்கம் தடுக்க வேண்டியது கட்டாயம்...

சமஸ்கிருத மேலாதிக்கம் ஏற்படாமல் தடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என எழுத்தாளர் சு.வெங்கடேசன் பேசினார்.மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் 9 வது புத்தகத்திருவிழாவில் செவ்வாயன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், “ தமிழ்ப் பண்பாட்டில் வாசிப்பு ’’ என்ற தலைப்பில் எழுத்தாளர் சு.வெங்கடேசன் பேசியதாவது:உயிர்கள் அனைத்தும் அடுத்த சந்ததிகளுக்கு மரபு வழியாக உயிரியல் விஷயங்களைக் கடத்துகின்றன. அப்படி கடத்த முடியாத விஷயம் என்பது அனுபவம் மூலம் அறிந்த தகவல்களைத் தான். அதையும் அடுத்த சந்ததிக்கு கடத்த மனிதன் கண்டு பிடித்த அற்புதமே புத்தகங்கள்.பண்டைய தமிழகம் கல்வியில் சிறந்து விளங்கியது. எல்லா காலத்திலும் வாசிப்புக்கான களம் இருந்ததில்லை. வாசிப்பு ஒரு கலாச்சாரமாக கொடிகட்டிப் பறந்த இரண்டு காலங்கள் உண்டு. கி.பி. 5 ஆம் நூற்றாண்டு காலத்துக்கு முந்தைய முதல் தமிழ்ச் சங்க காலம், பழந்தமிழ் இலக்கியங்கள் தோன்றிய பொற்காலமாக இருந்துள்ளது. கிறிஸ்து பிறப்பதற்கு முந்தைய காலத்தில் ஒரு பெண் எழுத்தாளர் கூட கிடையாது.கிரேக்க மொழியில் 7 பேர் மட்டுமே இருந்தனர். ஆனால், அக்காலத்திலேயே தமிழில் 44 பெண் கவிஞர்கள் இருந்தனர். மற்ற மொழிகள் எல்லாம் அக்காலத்தில், அதிகாரத்தில் இருப்பவர்களின் கையில் இருந்தது. ஆனால், தமிழோ சாதாரண மக்களிடம் இருந்தது என்பதை பானையோடு, முதுமக்கள் தாழியில் கண்டுபிடித்த எழுத்துக்களைக் கொண்டு அறியலாம்.இடைக்காலத்தில், சாதி, மதக் கோட்பாடுகளால் 5 ஆம் நூற்றாண்டு முதல் 15 ஆம் நூற்றாண்டு வரையில் பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது. அன்றைய கால கட்டத்தில் பெண்களும் வறியவர்களும் கல்வி கற்க முடியாது. மேல்தட்டு மக்கள் மட்டுமே கற்க முடியும் என்ற ஒருநிலை உருவாக்கப்பட்டது. பின்னர், நவீன காலத்தில் .வே.சா. மற்றும் வள்ளல் பாண்டித்துரைத் தேவர் அவர்களால்மீண்டும் ஒரு தாக்கம் ஏற்பட்டது. பாண்டித்துரைத் தேவர் மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கத்தை உருவாக்கியபோது, மிகச் சிறந்த தமிழ்நூல்கள் படைக்கப்பட்டன. தமிழில் நல்ல நூல்களைக் கண்டறிந்து அதைப் பரப்புவதிலும், நச்சு இலக்கியங்களைக் கண்டறிந்து ஒழிப்பதிலும் ஈடுபட்டு, முக்கிய கடமையாற்றினார்.
ஆனால், இப்போது மீண்டும் தமிழுக்கு ஆபத்து வந்திருக்கிறது. சமஸ்கிருத வாரம் என்ற பெயரில், தமிழ் உயர்ந்ததா, சமஸ்கிருதம் உயர்ந்ததா என்ற விவாதம் இன்று, நேற்று ஏற்பட்டதல்ல. வள்ளலாருக்கும், அன்றைய காஞ்சி சங்கராச்சாரியாருக்கும் இடையே இந்த வாதம் ஏற்பட்டுள்ளது. சமஸ்கிருதம் இந்திய மொழிகளுக்கெல்லாம் தாய் என்று சங்கராச்சாரியார் சொன்ன போது, அப்படியானால் தமிழ் தந்தை மொழி என வள்ளலார் கூறினார். ஆகவே, சமஸ்கிருத மேலாதிக்கம் ஏற்படாமல் தடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று அவர் கூறினார்.

No comments: