Thursday, 4 September 2014

என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்...

என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி அனைத்து ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தால் நெய்வேலியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. ஏராளமான போலீசார் மற்றும் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்று கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு வடிவில் வலுவான போராட்டங்களை நடத்தி வருகின்றன. என்எல்சி நிர்வாகம் நீதி மன்ற நடவடிக்கைகளை காரணம் காட்டி பணிநிரந்தர கோரிக்கையை தள்ளிப்போட்டு வந்தது.இந்நிலையில் கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் ஒப்பந்தத் தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று என்எல்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு தீர்ப்பளித்தது.ஆனால் கடந்த ஓராண்டாக இதையும் தள்ளிப்போட்டு வந்தது, நீதிமன்ற தீர்ப்பையும் மதிக்கவில்லை, தொழிலாளர்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்றவில்லை.பல போராட்டங்களுக்கு பிறகு இந்த தீர்ப்பை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்த என்.எல்.சி. நிர்வாகம் ஒரு சிலருக்கு மட்டுமே பணிநிரந்தர ஆணை வழங்கியிருப்பதாக தெரிகிறது. மற்றவர்களை பணி நிரந்தரம் செய்ய காலம் தாழ்த்தி வருகிறது. நெய்வேலி என்எல்சியில் பணிபுரிந்து வரும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களை உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி பணிநிரந்தரம் செய்ய வேண்டும், அனைத்து ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் இன்கோசர்வ் ஹவுசிகோஸ் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ. 25 ஆயிரம் சம்பளம், 20 சதவீதம் போனஸ், ஓய்வுபெறும் போது பணிக்கொடை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில் மீண்டும் போராட்டத்தை தொடங்கினர்.நிரந்தர தொழிலாளர்களிடம் ஆதரவு கேட்பது, கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு செல்வது, ஆர்ப்பாட்டம், தலைமை அலுவலகம் நோக்கி பேரணி என பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினார்கள்.நிர்வாகத்திடம் வேலைநிறுத்த நோட்டீசும் கொடுத்துள்ளனர்.பணி நிரந்தரம் செய்யாவிட்டால் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்று எச்சரிக்கை விடுத்ததையடுத்து புதுச்சேரியில் கடந்த திங்களன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. உதவி தொழிலாளர் நல ஆணையர் முன்னிலையில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் என்.எல்.சி. நிர்வாகத்தின் சார்பிலும் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். எந்த சமரசமும் ஏற்படாததால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை செப்டம்பர் 2 ம் தேதி (செவ்வாய் கிழமை) நடந்தது அந்த பேச்சுவார்த்தையும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாமல் தோல்வியில் முடிந்தது.
இந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து கூட்டமைப்பினர் திட்டமிட்டப்படி வேலைநிறுத்தப் பேராட்டத்தை அறிவித்துள்ளனர், வேலை நிறுத்த அறிவிப்புக்கூட்டம் சிஐடியு அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இந்தகூட்டத்தில் ஏராளமான ஒப்பந்தத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இதில் தொ.மு.., அண்ணா தொழிலாளர் சங்கம், சி..டி.யூ. பாட்டாளி தொழிற்சங்கம், பி.எம்.எஸ்., தொழிலாளர் விடுதலை முன்னணி, .என்.டி.யூ.சி. தொழிலாளர் வாழ்வுரிமை சங்கம், எச்.எம்.எஸ் உள்ளிட்ட ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.செப்டம்பர் 3 ம் தேதி இரவு பணியிலிருந்துகாலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டம் தொடங்கும் எனஅறிவித்தனர். வேலைநிறுத்தப் போராட்ட அறிவிப்பால் நெய்வேலியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. ஆலை வாயில்களிலும், சுரங்க வாயில்களிலும் ஏராளமான போலீசார் மற்றும் மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்களும் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

No comments: