புதுச்சேரி BSNL ஊழியர் சங்க 7வது மாவட்ட மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவர் எஸ்.சங்கரன் தலைமை தாங்கினார். உதவிச் செயலர் டி.கலிய பெருமாள் வரவேற்றார்.“BSNLபலமும், பலவீனமும்” என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் பிஎஸ்என்எல்யு சங்க அகில இந்திய பொதுச் செயலர் பி.அபிமன்யு பேசுகையில், மத்திய அரசு ராணுவம், நீதிமன்றம், சட்டப் பேரவை தவிர மற்றவை அனைத்தையும் தனியாரிடம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளது என்று குற்றம் சாட்டினார். ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை. முந்தைய BJP ஆட்சியில், லாபம் தந்த பால்கோ அலுமினிய ஆலை தாரை வார்க்கப்பட்டது. அதன்பிறகு ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அரசு பொதுத்துறை நிறுவனங்களை சீரழித்தது என்றார்.கடந்த 2001-ல் தான் BSNL நிறுவனத்துக்கு செல்போன் சேவை தொடங்க அனுமதி தரப்பட்டது. ஆனால் 7 ஆண்டுகளுக்கு முன்பே தனியாருக்கு அனுமதி தந்து விட்டனர்.கடந்த 2001-2003-ல் தனியார் நிறுவனங்களிடம் 2.44 லட்சம் இணைப்புகள் மட்டுமே இருந்தன. ஆனால் BSNL நிறுவனம் அக்காலக் கட்டத்தில் 6 லட்சம் இணைப்புகளை பெற்றிருந்தது என்றும் அவர் தெரிவித்தார்.ஊழியர்கள் எண்ணிக்கை குறைந்தாலும் வருவாய் குறையவில்லை.இதற்கு மத்தியில் தான் 3 ஆண்டுகளில் ரூ.9 ஆயிரம் கோடி வருவாய் இழந்துள்ளோம். BSNL நிறுவனத்தை பாதுகாக்க ஊழியர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். ஆட்சியாளர்களின் தவறான கொள்கைகளை கண்டித்து போராட்டங்கள் நடத்தப் படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மாநாட்டை துவக்கி வைத்து பேசிய தமிழ் மாநில செயலர் எஸ்.செல்லப்பா, “BSNL நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உறு துணையாக இருந்துவரும் ஊழியர்கள், இந்நிறுவனத்தின் பங்குகளை விற்பதற்கு நிர்வாகம் எடுக்கும் முயற்சிகள் அனைத்தையும் எதிர்த்துப் போராட வேண்டும்” என்றார்.மேலும் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் அனைத்து போராட்டங்களையும் வெற்றிகரமாக நாம் பங்கேற்று நடத்த வேண்டும் என்று அனைத்து ஊழியர்களையும் கேட்டுக் கொண்டார்.BSNL நிறுவனத்தின் முதுநிலை பொதுமேலாளர் பி.சந்தோஷம், துணைப் பொதுமேலாளர் ராதிகா ஆகியோர் பேசினர்.மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியன் வேலை அறிக்கையை சமர்பித்தார், CITU மாவட்டச் செயலர் நிலவழகன், நிர்வாகிகள் பி.காமராஜ், எம்.சண்முகசுந்தரம், கொளஞ்சியப்பன், முருகையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.தனியாருக்கு சாதமாக பல அம்சங்களைக் கொண்ட "டிலாய்ட்" கமிட்டி பரிந்துரைகளை மத்திய அரசு கைவிட வேண்டும். தொழிலாளர் நலச்சட்டங்களை மத்திய BJP அரசு திருத்த முயல்வதை கண்டிக்க வேண்டும். காப்பீட்டுத்துறையில் அந்நிய முதலீடு 49 சதவீதமாக உயர்த்தக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
No comments:
Post a Comment