நாட்டின் முதலாவது குடியரசு துணைத்தலைவரும் இரண்டாவது குடியரசுத் தலைவருமான சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாள் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது .1962 ஆம் ஆண்டு அவர் குடியரசுத் தலைவரான போது அவரது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டுமென்று நண்பர்களும் உறவினர்களும் கேட்டுக்கொண்டனர். அப்போதுஎனது
பிறந்த நாளைக் கொண்டாடுவதென்றால் அந்நாளில் ஆசிரியர்களை கவுரவப்படுத்துங்கள் என்று ராதாகிருஷ்ணன் அவர்கள் யோசனை கூறினார்.அந்த ஆண்டிலிருந்துதான் (1962 ) சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளானசெப்டம்பர் 5 ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. “ஆசிரியப்பணி அறப்பணி; அதற்கே உன்னை அர்ப்பணி” என்று நல்லாசிரியர்கள் கூறுவர். ஆசு என்றால் குற்றம் குறைகள். இரிதல் என்றால் அகற்றுதல் நீக்குதல். ஒருவனிடம் உள்ள குற்றம் குறைகளை நீக்கி நல்லாற்றுப்படுத்தும் பணியைச் செய்வதால் ‘ஆசிரியர்’ எனப் பெயர் பெற்றவர்கள்.மாணாக்கர் என்பதும் கூடக் காரணப் பெயர்தான். ஒருவனை மாண்புடையவனாக ஆக்கப்படும் நிலையில் இருப்பவர் தான் மாணாக்கர்.எனவே ஆசிரியர் - மாணவர் உறவு என்பதுகுரு - சிஷ்ய உறவிலிருந்து முற்றிலும் வேறுபட்டது.இருவென இருந்து - எழுவென எழுந்து - சொல்லெனச் சொல்லி மேல் - கீழ் அடுக்கு முறையைக்கொண்டது குரு - சிஷ்ய உறவு. ஆசிரியர் - மாணவர் உறவு என்பது நட்பு பாராட்டுவது. வளர்ச்சிக்குஉறுதுணையாக இருப்பது .மனதால் ஒருவரை குருவாக ஏற்றுக்கொண்டு வித்தை கற்றதையும் தவறெனச் சொல்லி ஏகலைவனின் கட்டைவிரலை தட்சணையாகக் கேட்டது குரு- சிஷ்ய முறையின் தன்மை. பிராமணருக்கு மட்டுமே வில்வித்தை கற்றுக் கொடுத்த வரிடம் சத்ரியன் கர்ணன் பொய் சொல்லி கற்றுக் கொண்டான் என்பதற்காக தேவைப்படும் போது கற்றவித்தையெல்லாம் மறந்து போகக்கடவது என சாபம் விடுவதை குரு - சிஷ்ய முறை நினைவுப் படுத்துகிறது.
தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் வேறுவேறு குரு. முன்னவர் வியாழன் என்றும் பின்னவர் வெள்ளி என்றும் பாகுபடுத்திய புராணக்கதைகளும் உண்டு . இந்தப் பாகுபாடுகளை நீக்கி எல்லோருக்கும் எல்லோரும் கற்பிக்கலாம் எல்லோரும் எல்லோரிடமும் கற்றுக் கொள்ளலாம் என்ற நவீனமுறை தான் ஆசிரியர் மாணவர் உறவுமுறை. எனவே மாதா - பிதா - குரு - தெய்வம் என்றுகுருவை தெய்வமாகப் போற்றியவர்கள் நாம் என்று பசப்பு வார்த்தைகளை கூறிஆசிரியர் தினத்தை குரு உத்சவ் எனப்பெயர்மாற்றத்தை நியாயப்படுத்தும் இந்துத்துவா சக்திகளை அடையாளம் காணவேண்டும்.ஆசிரியர்களை தெய்வமாக நீங்கள் போற்றுவதை விட மனிதர்களாக மதிப்பதுதான் மேன்மையானது. சாதி, மதப் பாகுபாடு இல்லாமல் இன்றுள்ள நிலையைப் பராமரிப்பது தான் சிறந்தது. அதைவிடவும் செப்டம்பர் 5 - ஆசிரியர் தினம் கொண்டாடும் வேளையில் ராதாகிருஷ்ணன் அவர்கள் வேறொரு நிலையிலும் நினைவு கூரத்தக்கவர். 1938 ஆம் ஆண்டு சென்னை மாகாண முதலமைச்சராக இருந்தராஜாஜி அவர்கள் உயர் நிலைப் பள்ளிகளில்இந்தி மொழிப்பாடம் கட்டாயம் என அறிவித்தார். அந்த அறிவிப்பை வலுவாக எதிர்த்த சென்னை மாகாண காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர்தான் ராதாகிருஷ்ணன் அவர்கள்.அதுமட்டுமல்ல 1965 ஆம் ஆண்டு மத்தியஅரசின் ஆட்சி மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டபோது அதனை எதிர்த்து மத்திய அமைச்சர்களாக இருந்த சி. சுப்பிரமண்யம் அவர்களும் ஓ.வி. அழகேசன் அவர்களும் பதவியை ராஜினாமா செய்தார்கள்.
இந்திஆட்சி மொழிக்கு ஆதரவான பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி அவர்கள் இந்த அமைச்சர்களின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளுமாறு குடியரசுத்தலைவருக்கு பரிந்துரை செய்தார். ஆனால் அதனை ஏற்க மறுத்தார் குடியரசுத்தலைவராக இருந்த ராதாகிருஷ்ணன் அவர்கள். காரணம் இந்தி ஆட்சி மொழி ஆவதில் அவருக்கு உடன்பாடு இல்லை. 1938 ஆம் ஆண்டின் நிலையிலேயே 1965 திலும் அவர் இருந்தார். ராதாகிருஷ்ணன் அவர்களின் இந்த நிலைதான் மத்திய அரசில்இந்தியோடு ஆங்கிலமும் இணைப்பு மொழியாக இருக்கும் என அரசை கீழிறங்கிவரச்செய்தது.இதன் பின் விளைவுகள் தமிழகத்தில் ஆங்கில ஆதிக்கம் நீடிப்பது என்பதெல்லாம் தனியே பேசத்தக்கவை. ஆனால் இந்தித்திணிப்பை ஏற்க மறுத்த ராதாகிருஷ்ணனின் பிறந்த நாள் விழாவை குரு உத்சவ் என்று அறிவித்து பாஜக அவரைஅசிங்கப்படுத்தாமல் இருக்கட்டும். இந்த ஆண்டு மட்டுமல்ல எதிர்காலத்திலும் இதற்கான முயற்சியை செய்யாதிருக்கட்டும். செய்தால் ராதாகிருஷ்ணன் அவர்களின் இந்தித் திணிப்பு எதிர்ப்பு உணர்வை தமிழகம் பெறட்டும்.
No comments:
Post a Comment