அலங்காநல்லூர் கல்குவாரி விபத்து குறித்து ஆய்வறிக்கை வெளியிடுக! சிஐடியு மதுரை புறநகர் மாநாடு வலியுறுத்தல்
சிஐடியு மதுரை புறநகர் மாவட்ட 8-வது மாநாடு ஞாயிறன்று எஸ்.ஆலங்குளத்தில் நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் கே.அரவிந்தன் தலைமை வகித்தார். மாநாட்டுக் கொடியை மெப்கோ தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் கே.தவுடன் ஏற்றிவைத்தார். மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.எம்.பாண்டி அஞ்சலி தீர்மானம் வாசித்தார். வரவேற்புக்குழு தலைவர் பி.ஜீவானந்தம் வரவேற்றுப்பேசினார்.
மாநிலச் செயலாளர் டி.ஏ.லதா துவக்கவுரையாற்றினார். மாவட்டச் செயலாளர் பொன்.கிருஷ்ணன் வேலையறிக்கையையும், மாவட்ட பொருளாளர் வி.பிச்சைராஜன் நிதிநிலை அறிக்கையையும் சமர்ப்பித்தனர். விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச்செயலாளர் கே.ராஜேந்திரன் வாழ்த்திப் பேசினார்.
புதிய நிர்வாகிகள்
மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வுசெய்யப்பட்டனர். மாவட்டத் தலைவராக கே.அரவிந்தன், மாவட்டச் செயலாளராக பொன்.கிருஷ்ணன், பொருளாளராக பி.முத்துராஜா, துணை தலைவர்களாக வி.பிச்சைராஜன், ஜி.பாண்டிச்செல்வி, ஏ.அய்யணப் பிள்ளை, என்.காளிராஜன், எம்.அறிவு,
துணைச் செயலாளர்களாக ஜி.கௌரி,பி.பொன்ராஜ், எஸ்.எம்.பாண்டி,
சி.கண்ணன், கே.தங்கவேல்பாண் யன், பாண்டீஸ்வரன் ஆகியோர் தேர்வுசெய்யப்பட்டனர். மாநில துணைத்தலைவர் கே.செல்லப்பன் நிறைவுரையாற்றினார். வரவேற்புக் குழு செயலாளர் செ.ஆஞ்சி நன்றி கூறினார்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கொண்டையம்பட்டியில் உள்ள கல் குவாரியில் அண்மையில் நிகழ்ந்த விபத்தில் 3 தொழிலாளர்கள் பலியாகினர். இச்சம்பவத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த மதுரை மாவட்டஆட்சியர் மற்றும் கனிமவள அதிகாரிகள் இதுபற்றி ஆய்வறிக்கையை வெளியிட வேண்டும். மதுரை மாவட்டத்தில் கல்குவாரிகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு உடைகள், கருவிகளை வழங்க வேண்டும்.அத்தொழிலாளர்களுக்கு இன்சூரன்ஸ்உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யும் முறையில் தீவிர கண்காணிப்பு செய்யப்பட வேண்டும். கொண்டையம்பட்டி கல்குவாரி விபத்தில் மரணமடைந்த தொழிலாளர்களான நல்லையன், முத்துராமலிங்கம், செந்தில் ஆகியோர் குடும்பங்களுக்கு இழப்பீடாக தலா ரூ.20 லட்சம் வழங்க வேண்டும்.குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதோடு, குழந்தைகளின் கல்விச் செலவுகளை தமிழக அரசே ஏற்க வேண்டும்.எஸ்.பி.ஐ.வங்கியில் கல்விக்கடன் வாங்கிய மதுரை, அனுப்பானடியை சேர்ந்த கட்டுமான தொழிலாளியின் மகன் கே.லெனின் என்ற மாணவர் ரிலையன்ஸ் நிறுவனத்தினரின் மிரட்டலால் மனமுடைந்து தற்கொலைசெய்து கொண்டுள்ளார். அவரது குடும்பத்திற்கு நிவாரண நிதியாக ரூ.25 லட்சம் மத்திய அரசு வழங்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தமிழக அரசும்,மத்திய அரசும் உரிய முறையில் தலையிட வேண்டும்.
குறைந்தபட்ச ஊதிய மறுநிர்ணயக்குழுவின் பரிந்துரைகளை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த, அரசாணை வெளியிட வேண்டும். பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளை தடுக்க, பெண்கள் வேலை செய்யும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் புகார் குழுக்கள் மற்றும்புகார்பெட்டிகள் நிறுவ வேண்டும். அமைப்பு சாரா பெண் தொழிலாளர்களை பாதுகாக்க மாவட்ட ஆட்சியர் தலைமையின் கீழ் புகார் குழுக்கள்மற்றும் புகார் பெட்டிகள் வைக்க வேண்டும். பெண்கள் கூடும் இடங்களான ரயில் நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.தமிழக அரசு, மணல், சிமெண்ட், ஜல்லி, கம்பி உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தி கட்டுமான தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மதுரை மாவட்டத்தில் குவாரி, கிரானைட் உள்ளிட்ட கனிமவள தொழில்களை முறைப்படுத்தி, டாமின் குவாரிகளை திறந்தும், கல் உடைக்கும் தொழிலாளர்களுக்கு வேலை கிடைத்திட ஏற்பாடு செய்ய வேண்டும். அரசு அறிவித்தபடி அமைச்சர் உறுதி அளித்தபடி மேலூர் கூட்டுறவு நூற்பு ஆலையை மீண்டும் திறக்க வேண்டும்.செப்டம்பர் 2 அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தை வெற்றிபெறச் செய்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.