Friday, 22 July 2016

சேலம் உருக்காலை தனியாருக்கா? மாநிலங்களவையில் தபன்சென் கடும் எதிர்ப்பு...

தமிழ்நாடு சேலம் உருக்காலை மற்றும்விஸ்வேஸ்வரய்யா இரும்பு மற்றும் உருக்காலையை தனியாருக்குத் தாரைவார்க்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் தபன்சென் வலியுறுத்தினார்.நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. வியாழனன்று அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை எழுப்பும் நேரத்தில் தபன்சென் பேசியதாவது:மத்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள சேலம் உருக்காலையையும், கர்நாடகாவில் உள்ள விஸ்வேஸ்வரய்யா இரும்பு மற்றும் உருக்காலையையும் தனியாருக்குத் தாரை வார்த்திட நடவடிக்கை களை மேற்கொண்டு வருகிறது. தமிழக மக்களின் நீண்ட நெடிய போராட்ட த்திற்குப் பின்தான் சேலம் உருக்காலை வந்தது. அது ஒரு சிறப்பு உருக்காலை ஆகும். அது துவக்கப்பட்ட காலத்திலிருந்தே மிகவும் திறமையாகச் செயல்பட்டு வருகிறது. ஆயினும் மின்வினியோகம் மிகவும் முறையற்று கிடைத்து வந்தமையால் அது பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டது. கடந்த பத்தாண்டு காலமாக அந்த ஆலை மத்திய, மாநில அரசுகளால் புறக்கணிக்கப்பட்டு வந்ததால் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டது. அதேபோன்று கர்நாடகாவில் செயல்படும் விஸ்வேஸ்வரய்யா இரும்பு மற்றும் உருக்காலைக்குத் தேவையான இரும்பு கனிம வளங்களை அதற்கு அளிக்காமல் அதனையும் நலிவடையச்செய்திடும் வேலைகள் நடைபெற்று வருகின்றன. இப்போது இவ்விரு ஆலைகளையும் தனியாரிடம் தாரை வார்த்திட மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நாட்டின் சொத்துக்களை விற்கும் வேலைகளை மத்திய அரசு கைவிட வேண்டும். நாட்டின் சொத்துக்களைத் தனியாரிடம் ஒப்படைத்துவிட்டு, எப்படிஇந்தியாவை உருவாக்குவோம்’’ என்கிற கொள்கையை அமல்படுத்துவீர்கள்? இந்த இரண்டு ஆலைகள் மட்டுமல்ல, நாட்டில் உள்ள முக்கியமான பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையுமே தனியாரிடம் தாரை வார்த்திட இந்த அரசு திட்டமிட்டிருக்கிறது. அந்த வேலையை நிதி ஆயோக் அமைப்பிடம் அரசு ஒப்படைத்திருக்கிறது.உருக்கு ஆலைகளைத் தனியாரிடம் தாரை வார்த்திடும் நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். இல்லையேல், நாடு முழுவதும் இவற்றிற்கு எதிராக பெரும் கிளர்ச்சிகள் நடக்கும். இவ்வாறு தபன்சென் கூறினார்.தபன் சென் கோரிக்கையை கே.கே.ராகேஷ், டி.கே.ரங்கராஜன், டி.கே.எஸ். இளங்கோவன், சி.பி.நாராயணன், பி.கே. ஹரிபிரசாத் ஆகியோரும் வலியுறுத்தினர்

No comments: