Wednesday, 6 July 2016

15 பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க மோடி அரசு முடிவு.

சிமெண்ட் கார்ப்பரேசன் ஆப் இந்தியா,இந்துஸ்தான் நியூஸ் பிரிண்ட் லிமிடெட்உள்ளிட்ட 15 பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க நரேந்திர மோடி அரசு முடிவு செய்துள்ளதாக மத்தியஅரசின் அதிகார வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.மோடி அரசு பதவி ஏற்றவுடன் திட்டக்கமிஷனை கலைத்து விட்டு புதிதாக நிதிஆயோக் என்ற அமைப்பை அமைத்தது. ஐந்தாண்டு திட்டம் மற்றும் மாநிலங்களுக்கு நிதி அதிகாரங்களை பரவலாக்குவது உள்ளிட்ட முந்தைய திட்டக் கமிஷனின் செயல்பாடுகளாக இருந்தவற்றை நீக்கி விட்டு தற்போது அமைக்கப்பட்டுள்ள நிதிஆயோக்கின் செயல்பாடுகள் முற்றிலும் மாற்றப்பட்டுள்ளன. சமீபத்தில் மோடிஅரசு நிதி ஆயோக்கிடம் நாடு முழுவதும்இயங்குகின்ற பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடுகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டது. இதன் நோக்கம் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதாகும். நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களை நிரந்தரமாக மூடுவதாகும். இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடியின் அலுவலகத்திடம் நிதி ஆயோக் பொதுத் துறை நிறுவனங்கள் குறித்து அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. இது தொடர்பாக நிதி ஆயோக்கின் மூத்தஅதிகாரி ஒருவர் தில்லியில் பத்திரிகையாளர்களிடம் பேசியபோது கூறியதாவது:நாடு முழுவதும் மூடப்பட வேண்டிய மற்றும் தனியாருக்கு விற்கப்பட வேண்டிய பொதுத் துறை நிறுவனங்கள் குறித்து பட்டியல் ஒன்றை பிரதமர் மோடியிடம் சமர்ப்பித்துள்ளோம். நிதி ஆயோக்கினால் மொத்தம் 74 பொதுத்துறை நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதில் 25 நிறுவனங்கள் புதுப்பிக்கப்படலாம் என்ற திட்டங்கள் முன் வைக்கப்பட்டன. ஆனால் இவைதோல்வியடைந்துவிட்டன. புதுப்பிக்க முடியாதபடி தோல்வியடைந்து விட்டதால்மாற்று ஆலோசனைகளும் நிதி ஆயோக்கினால் முன் வைக்கப்பட்டுள்ளன. அவற்றின் சொத்துக்களான நிலங்கள் மற்றும் சாதனங்களை விற்று விட்டு நிரந்தரமாக மூடிவிடுவது மற்றும் அவற்றில் பணி புரிந்த ஊழியர்களுக்கு தன்னார்வ ஓய்வு அளிப்பது உள்ளிட்ட ஆலோசனைகள் அளிக்கப்பட்டுள்ளன. நிதி ஆயோக் பட்டியல் சமர்ப்பித்ததை தொடர்ந்து மத்தியஅமைச்சரவையின் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் அமைச்சகங்களின் உயர்அதிகாரிகளும் பங்கேற்றனர்.இக்கூட்டத்தில் சிமெண்ட், உப்பு, ஜவுளி, காகிதம், ஆண்ட்டி பயோட்டிக்ஸ் மருந்துகள் உள்ளிட்ட பொருட்களை தயாரிக்கும் துறைகளிலுள்ள பொதுத் துறைநிறுவனங்கள் மேலும் பட்டியலிடப்பட்டன. இதுபோன்ற துறைகள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு காரணம் இத்துறைகள் அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டியதில்லை என்பதுதான். ஏனெனில் இவற்றில் தனியார் துறைகள் அதிக லாபகரமாக இயங்குகின்றன என்று காரணம் கூறப்பட்டுள்ளது. இதன்படி இந்துஸ்தான் கோவா ஆண்ட்டி பயோட்டிக்ஸ் அண்ட் பார்மச்சூட்டிகல்ஸ், ஒரிசா டிரக்ஸ் மற்றும் கெமிக்கல்ஸ்,ராஜஸ்தான் டிரக்ஸ்அண்ட் பார்மச்சூட்டிக்கல்ஸ், சாம்பார் சால்ட்ஸ், இந்துஸ்தான் சால்ட்ஸ் லிமிடெட், இந்துஸ்தான் நியூஸ்பிரிண்ட் லிமிடெட், இந்துஸ்தான் பேப்பர் கார்ப்பரேசன், சிமெண்ட் கார்ப்பரேசன் ஆப்இந்தியா மற்றும் நேஷனல் டெக்டைல்மில்ஸ் உள்ளிட்ட 15 நிறுவனங்கள் தனியாருக்கு விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இம்முடிவு உறுதியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று மோடிகூறியுள்ளார்.மேலும் இந்த பட்டியலில் பிஎஸ்என்எல்லும் சேர்க்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த நிறுவனத்தில் 2.5 பேர் பணிபுரிவதாலும் எதிர்ப்பு கடுமையாக இருந்ததாலும் இந்நிறுவனத்தை விற்கும் திட்டம்கைவிடப்பட்டது.

No comments: