Sunday, 29 June 2014

சென்னை11 மாடிஇடிந்து விழுந்து 4பேர் பலி:50 பேர் தவிப்பு?

சென்னை போரூர் அருகே 11 தளங்களைக் கொண்ட அடுக்குமாடிக் கட்டடம் சனிக்கிழமை மாலை இடிந்து விழுந்து தரைமட்டமானது. இந்த விபத்தில் நள்ளிரவு நிலவரப்படி 4 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. 

கட்டட இடிபாடுகளுக்குள் 50-க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இவர்களில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 19 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சென்னை போரூரை அடுத்துள்ள மௌலிவாக்கம் பகுதியில் 11 தளங்களைக் கொண்ட 2 குடியிருப்பு கட்டப்பட்டு வருகின்றன. 2012 முதல் இந்தக் கட்டடங்களை கட்டும் பணியை "பிரைம் சிருஷ்டி' என்ற தனியார் கட்டுமான நிறுவனம், இந்தக் கட்டடங்களை கட்டி வந்தது.சனிக்கிழமை மாலை இந்த 2 கட்டடங்களில் ஒன்று திடீரென இடிந்து விழுந்து தரைமட்டமானது. அப்போது, அந்தப் பகுதியில் பெரும் சப்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அருகில் உள்ளவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இடிந்த கட்டடத்துக்குள் 50 பேர் வரை இருக்கலாம் என்று அந்தக் கட்டடத்துக்கு அருகில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.மீட்புப் பணிகள் தீவிரம்: இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணிகள் மாலை 5.30 மணியில் இருந்து தொடங்கின. 108 ஆம்புலன்ஸ்கள், தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ்கள், தீயணைப்புப் படை வீரர்கள், தேசிய பாதுகாப்புப் படையினர், பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்தவர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.மாலை 6 மணிக்கு மேல் மீட்புப் பணிகள் விறுவிறுப்பு அடைந்தாலும், போதிய வெளிச்சம் இல்லாததால் அதிக வெளிச்சம் கொண்ட மின் விளக்குகள் பொருத்தப்பட்டன. இடிபாடுகள் அனைத்தும் இயந்திரங்களைக் கொண்டு அகற்றப்பட்டு, அதற்குள் இருந்தவர்கள் ஒவ்வொருவராக மீட்கப்பட்டு வருகின்றனர்.ஒரே இடத்தில் 15 பேர்: கட்டடம் இடிந்த நேரத்தில், ஒரு குறிப்பிட்ட தளத்தில் மட்டும் 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வந்ததாகவும், அவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியதாகவும், அவர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டு வருவதாகவும் மீட்புப் பணிகுழுவினர் தெரிவித்தனர்.காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரன் இதுகுறித்து கூறுகையில், ""மீட்புப் பணியில் அனைத்துத் தரப்பினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்கிற விவரம் தெரியவில்லை'' என்றார்.சம்பவ இடத்தில் நடைபெற்று மீட்புப் பணிகளை அமைச்சர் டி.கே.எம். சின்னையா, சென்னை மாநகர காவல் ஆணையாளர் ஜார்ஜ் உள்ளிட்ட பலரும் பார்வையிட்டனர்.
பலியானவர்கள் விவரம்: இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்கள், அருகிலுள்ள போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மீட்கப்பட்டவர்களில் 13-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும், மதுரையைச் சேர்ந்த மருதுபாண்டி(23), சங்கர்(27), சாந்தகுமாரி(25), பால்ராஜ் ஆகிய 4 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் எனவும், அவர்களின் நிலைமை குறித்து உறுதியாகத் தெரிவிக்க இயலாது என்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.முகாமிட்ட மருத்துவக் குழுக்கள்: கட்டடம் இடிந்து விழுந்த இடத்தில் அரசு மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர்கள், சுகாதாரத் துறை அதிகாரிகளைக் கொண்ட 2 குழுக்களும், விபத்து நடந்த இடத்துக்கு அருகேயுள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் ஒரு குழுவும் முகாமிட்டுள்ளன. அவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர் என மருத்துவக் கல்வி இயக்குநர் கீதாலட்சுமி தெரிவித்தார்.ஏரி இருந்த இடத்தில் கட்டடமா? 11 தளங்களைக் கொண்ட 2 அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ள இடம் ஏரிப் பகுதி என அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவத்தில் தனியார் கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த மனோகரன், முத்து ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
இரவிலும் தொடரும் பணி: கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணி இரவிலும் தொடர்ந்தது. அரக்கோணத்தில் இருந்து வந்துள்ள பேரிடர் மீட்புப் படையினர் இந்தப் பணிகளை துரிதப்படுத்தியுள்ளனர். துணை கமாண்டர் உத்தம் காஷ்யப் தலைமையில் ஒரு கம்பெனிக்கு 40 பேர் வீதம் முதலில் 2 கம்பெனி படையினர் வந்துள்ளனர்.மேலும், 4 கம்பெனி படையினர் செல்லவும் தயாராகி வருகின்றனர். அவர்கள் இடிபாடுகளை மீட்க உதவும் பல்வேறு நவீன கருவிகளையும், மருத்துவ குழுவினைரையும் அழைத்து வந்துள்ளனர். மீட்புப் பணிகளை விடிய விடிய தொடர்ந்து நடத்த மீட்புக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

No comments: