ஏர் இந்தியா நிறுவனத்தின் செயல்திறன் சரியில்லைதான். ஆனால் அதை தனியார்மயமாக்குவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ கூறினார்.மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வருகிறது. கடன்களும் அதிகரித்துவிட்டன. மத்திய அரசு அவ்வப்போது நிதி உதவி அளித்தும் கூட இதிலிருந்து அந்த நிறுவனம் மீளவே இல்லை.
இதனால் ஏர் இந்தியாவை தனியார் மயமாக்க வேண்டும் என்று முன்பு எதிர்க்கட்சியாக இருந்த பாஜக கூறிவந்தது. இந்த நிலையில் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு அமைந்தது. அண்மையில் பிரதமர் மோடியை மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு குறித்து டெல்லியில் அசோக் கஜபதி ராஜூவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அளித்த பதிலில், "ஏர் இந்தியா நிறுவனத்தைப் பொறுத்தவரை அதன் செயலாற்றல் திறன் போதுமானதாக இல்லை என்ற பொதுவான கருத்து நிலவுகிறது. எனவே அதன் செயலாற்றலை வலுப்படுத்துவதற்கு நாங்கள் குறுகிய கால யுக்திகளை மேற்கொள்வோம். பிரதமருடான சந்திப்பின்போது ஏர் இந்தியா நிறுவனம் தொடர்பான அத்தனை பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. எனினும் ஏர் இந்தியாவை தனியார் மயமாக்குவது குறித்து எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை. இந்த விஷயத்தில் நானாக ஏதும் சொல்லி குளவிக்கூட்டை கலைக்க விரும்பவில்லை. விமான எரிபொருள் மீதான விற்பனை வரி மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. எனவே இந்த வரியை குறைப்பது தொடர்பாக மாநில அரசுகளுடன் கலந்து பேசுவோம்," என்றார். இப்போதைக்கு, 100 நாட்களுக்குள் ஏர் இந்தியா நிறுவனத்தை சீர்ப்படுத்தும் திட்டத்தைச் செயல்படுத்தப் போவதாக அமைச்சர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment