Friday, 27 June 2014

CITU சங்கத்தலைவர் எம்.எஸ்.மணி காலமானார்.


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டக்குழு உறுப்பினரும், பஞ்சாலைத் தொழிலாளர் CITU சங்கத்தின் மகத்தான தலைவராக திகழ்ந்த  எம்.எஸ்.மணி காலமானார். அவருக்கு வயது 60.
மதுரை சமயநல்லூர் சடச்சியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த எம்.எஸ்.மணி, கடந்த 40 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியராக திறம்பட செயலாற்றியவராவார். மதுரை பஞ்சாலைத் தொழிலாளர் சங்கத்தின் அலுவலகச் செயலாளராக 1974 ஆம் ஆண்டு பணியைத் துவக்கிய அவர், மதுரை பஞ்சாலைத் தொழிலாளர் சங்க பொதுச்செயலாளராக, சிஐடியு மாவட்டத்தலைவராக, மாநிலத்தலைவராக, கட்சியின் மாநகர் மாவட்டக்குழு உறுப்பினராக பணியாற்றியுள்ளார். 
மதுரை கோட்ஸ் உள்ளிட்ட பல்வேறு பஞ்சாலைகளில் நடைபெற்ற தொழிலாளர்களின் உரிமைக்கான போராட்டங்களில் பங்கேற்று உண்ணாவிரதம், மறியல் போன்ற நேரடி நடவடிக்கையில் ஈடுபட்டு பல முறை சென்றுள்ளார். தீக்கதிர் நாளிதழின் முன்னாள் ஊழியரான மணி, தற்போது மதுரை பாரதி புத்தகாலயத்தின்  பொறுப்பாளராகவும், கட்சியின் மாநகர் மாவட்டக்குழு சார்பில் தீக்கதிர் வினியோகத்தையும் திறம்பட செய்து வந்தார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் வியாழனன்று இரவு காலமானார். அவருக்கு கோகிலா என்ற மனைவியும், ஜான்சிராணி, சரோஜினி என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். 
பஞ்சாலைத் தொழிலாளர் சங்க மாநிலத்தலைவரும், சிஐடியு மாநில உதவித்தலைவருமான பி.எம்.குமார், முதுபெரும் தலைவர் எஸ்.மன்னார்சாமிதிண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலபாரதி, மதுரை தெற்குத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இரா.அண்ணாதுரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டச்செயலாளர் பா.விக்ரமன், மதுரை புறநகர் மாவட்டச்செயலாளர் சி.ராமகிருஷ்ணன், திண்டுக்கல் மாவட்டச்செயலாளர் என்.பாண்டி, தேனி மாவட்டச்செயலாளர் டி.வெங்கடேசன், மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ்.ஏ.பெருமாள், இரா.ஜோதிராம், மதுக்கூர் இராமலிங்கம், எஸ்.கே.பொன்னுத்தாய், எழுத்தாளர் என்.ராமகிருஷ்ணன்  மற்றும் சிஐடியு மதுரை மாநகர் மாவட்டத்தலைவர் இரா.தெய்வராஜ், புறநகர் மாவட்டத்தலைவர் கே.அரவிந்தன், மாவட்டச்செயலாளர் பொன்.கிருஷ்ணன், விருதுநகர் மாவட்டச் செயலாளர் அசோகன், தீக்கதிர் ஆலோசகர் வெ.சுந்தரம், மதுரை பொதுமேலாளர் வி.ஜெயராஜ், இடைக்கமிட்டி செயலாளர் உமாபதி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் தோழர் மணி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.  இதன் பின் நடைபெற்ற அஞ்சலிக் கூட்டத்தில் தலைவர்கள் அஞ்சலி உரை நிகழ்த்தினர். பின்னர் சமயநல்லூரில் உள்ள மயானத்தில் இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது.
நமது BSNLEU மாவட்ட சங்கத்தின் சார்பாக மாவட்ட தலைவர் தோழர்.சி.செல்வின் சத்தியராஜ் அவர்களும், மாவட்ட செயலர் தோழர்.எஸ்.சூரியன் அவர்களும் சென்று தோழர்.மணி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

No comments: