Saturday 7 June 2014

பாதையைமாற்றுங்கள்! CITU பொதுச்செயலர் தபன்சென் M.P.வற்புறுத்தல்.

தொழிற்சங்கத்தலைவர்களுடன் மத்திய நிதிஅமைச்சர் ஆலோசனை - பாதையைமாற்றுங்கள்!
CITU பொதுச்செயலாளர் தபன்சென் எம்.பி., வற்புறுத்தல்
காங்கிரஸ் தலைமையிலான முந்தைய அரசாங்கம் முற்றிலும் பெரும் முதலாளிகளுக்கு ஆதரவாகவும் நாட்டின் உழைக்கும் மக்களுக்கு எதிராகவும் செயல்பட்டு மக்கள் விரோதக் கொள்கைகளை அமல்படுத்தியதன் விளைவாக நாசமடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீட்கும் விதமாக, பாதையை மாற்றி புதிய அரசு பயணிக்க வேண்டும் என்று மத்திய தொழிற் சங்கங்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்து ள்ளன.மத்திய பட்ஜெட்டை விரைவில் தாக்கல் செய்வதற்கான தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள மோடி அரசின் நிதியமைச்சர் அருண் ஜெட்லி,வெள்ளியன்று பட்ஜெட்தொடர்பான ஆலோசனை க்காக மத்திய தொழிற்சங்கங் களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பினை ஏற்று, அரசு மற்றும் தொழிற்சங்கத் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நிதியமைச்சக வளாகத்தில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி, தொழில் மற்றும் வர்த்தகத்துறை இணையமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மற்றும் நிதியமைச்சகம், தொழிலாளர் அமைச்சகங்களின் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் தலைவர்கள் பி.என்.ராய் மற்றும் உபாத்யாயா (BMS), சந்திரபிரகாஷ் சிங் மற்றும் சாந்தகுமார் (INTUC), அமர்ஜித் கவுர் மற்றும் டி.எல்.சச் தேவா(AITUC), சரத்ராவ் மற்றும் ஹர்பஜன்சிங் சித்து (HMS), தபன்சென் மற்றும் ஸ்வதேஷ் தேவ் ராய் (CITU), சங்கர் சகா (AITUC), அபானிராய் (UTUC), எஸ்.பி.திவாரி TUCC), சண்முகம் (LPF), சந்தோஷ்ராய் (AICCTU) ஆகியோர் பங்கேற்றனர்.
மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் மேற்கண்ட தலைவர்கள் கையெழுத்திட்டு விரிவான ஆலோசனை அறிக்கையை அமைச்சரிடம் வழங்கினர். இதைத்தொடர்ந்து தொழிற்சங்கங்கள் சார்பில் CITU பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான தபன்சென் கூட்டத்தில் பேசினார். அப்போது, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மிகப்பெருமளவு பங்களிப்புசெய்கிற, நாட்டின் கருவூலத்திற்கும் தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் மிகப்பெரும் லாபங்களுக்கும் தங்களது உழைப்பைச் செலுத்துகிற கோடானுகோடி உழைக்கும் மக்களின் அடிப்படையான பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் நடவடிக்கைகள் மத்திய பட்ஜெட்டில் அவசியம் இடம்பெற வேண்டும் என்று வலியுறுத்தினார். முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு முற்றிலும் தனியார் பெரும் முதலாளிகளுக்கு ஆதரவாகவும் நாட்டின் உழைக்கும்மக்களுக்கு எதிராகவும் பின்பற்றிய அதே கொள்கைகளை புதிய அரசும் பின்பற்றக்கூடாது என்றும், பாதையை மாற்றி திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்றும் அவர் வற்புறுத்தினார்.
பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பது, அனைத்துத் துறைகளிலும் தீவிரத் தனியார்மயம், ஊக வணிகம் காரணமாக அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களின் விலை உயர்வு,பெரும் வர்த்தக நிறுவனங்கள் நாட்டின் கருவூலத்திற்குச் செலுத்த வேண்டிய வரி வகைகளை படிப்படியாக தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள், குறைந்தபட்ச கூலி, சமூகப்பாதுகாப்பு, தொழிற்சங்கஉரிமைகள், பணியிடப்பாது காப்பு உள்ளிட்ட அடிப்படையான தொழிலாளர் சட்டங் களை மீறுவதற்கு அரசே வாய்ப்பளிப்பது, நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் வேலைகள் காண்ட்ராக்ட் மயம் - என நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்துள்ள மோசமான கொள்கைகள் அனைத்தும் புதிய அரசின் பட்ஜெட்டில் கைவிடப்படவேண்டும் என்று தபன்சென், தனது உரையின்போது வலியுறுத்தினார்.
மேலும் அனைவருக்கும் பொது விநியோக முறை, ஊக வணிகத்திற்கு முற்றிலும் தடை, விவசாயத்தில் அதிகப்படியான பொது விநியோகம், அடிப்படை கட்டமைப்பு மற்றும் பொதுமக்களுக்கான திட்டங்களில் கூடுதல் முதலீடு, அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் வலுப்படுத்துதல், பொருளாதாரத்தின் முக்கியத் துறைகளான நிதி, எரிசக்தி, பாதுகாப்பு, இயற்கை வளங்கள் உள்ளிட்ட துறைகளில் தனியார்மய நடவடிக்கைகளை கைவிடுதல், தொழிலாளர் சட்டங்களை முழுமையாக அமலாக்குதல் உள்ளிட்டநடவடிக்கைகளை பட்ஜெட் டில் மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்றும் தபன்சென் வலியுறுத்தினார்.இதர தொழிற்சங்கத் தலைவர்களும் தங்களது கருத்துக்களை முன்வைத்தனர். இதைத்தொடர்ந்து தொழிற்சங்கப் பிரதிநிதிகளின் ஆலோசனைகளுக்கு அமைச்சர் அருண் ஜெட்லி நன்றி தெரிவித்தார்.

No comments: