Wednesday 15 October 2014

உலகக் கை கழுவுதல் நாள்: அக்-15 கழுவுதலும் நழுவுதலும்...

அக்டோபர் 15, உலக கை கழுவும் தினமாக அனுசரிக்கப் படுகிறது என்று வாசித்ததும் பல்வேறு விஷயங்கள் ஒரு சேர நினைவில் தட்டுப்படுகின்றன. வீட்டுக்குள் நுழைந்ததும் முதல் வேலையாக கை, கால்கள், முகம் எல்லாம் கழுவிக்கொண்ட பிறகுதான் அடுத்த வேலை பார்ப்பது. உணவு உட்கொள்ளும் முன் கைகளைக் கழுவுவது போன்றவை பண்பாட்டின் கூறுகள். வேலைகளின் தன்மை, வாழ்க்கை முறை, நாகரிக அடையாளமாகத் தவறாகப் பழகிக் கொண்டது அல்லது பழக்கத்தைக் கை விட்டது போன்ற பல காரணங்களால் இவை மாறிவிட்டன. அது ஒருபுறமிருக்க, கை கழுவுதல் என்றால் நாம் புரிந்து வைத்திருப்பதே வேறாயிற்றே! பட்டிக்காடா பட்டணமா திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கோபித்துக் கொண்டு போய்விட்ட மனைவியைத் திருப்பி அழைத்து வர முயற்சி எடுத்து தோற்றுப்போய் வீடு திரும்புவார்.
அப்பத்தாள்மூக்கையா, போன காரியம் என்ன ஆச்சு,” என்று கேட்பாள். நடிகர் திலகம் பதில் சொல்ல மாட்டார். சொம்பிலிருந்து தண்ணீரை எடுத்துக் கைகளைக் கழுவிக் கொள்வதாகக் காட்டுவார்கள். பின்னணி இசை அதிர்ச்சியும், கிழவியின் முக பாவமும் ரசிகர்களையும் சேர்த்து அழ வைத்துவிடும். இப்படி கை கழுவும் வருத்தமும், பொறுப்பி லிருந்து நழுவும் கை கழுவுதலும்தான் விசனத்தைத் தருகின்றன. நவீன தாராளமய கொள்கை வந்தவுடன், வர்த்தகம் தொடர்பான கவலைகள், மேற்பார்வை, கேள்விக்கு உட்படுத்துதல் இவையெல்லாம் அரசாங்கத்தின் வேலையே இல்லை என்று ஆட்சியாளர்கள் கை கழுவத் துடித்தனர். அப்புறம், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாடுகள் பலவும் கை கழுவி விடப்பட்டன. அவ்வளவு ஏன், கல்வி, சுகாதாரம் எதுவுமே எம் பொறுப்பில்லை என்று ஆட்சியாளர்கள் இப்போதும் கை கழுவித்தான் நாடாளுமன்றத்திலேயே பேசுகிறார்கள்.
அடுத்த கட்சியின் ஊழல்களை நீட்டி முழக்குகிற முதலாளித்துவக் கட்சிகள் பலவும் தாங்கள் அதிலிருந்து விடுபட்டு ஊழலைக் கை கழுவ மறுக்கின்றன. ஜனநாயகத்திற்கான குரலை ஓயாது பேசும் அவர்கள், தங்களுக்கென்று வரும்போது அந்த சிந்தனையைக் கை கழுவி விட்டுப் பேசுகின்றனர். சாலை விபத்துக்களின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு கூடி வருகிறது எதனால்? சாலை விதிகளைக் கூசாமல் கை கழுவும் மனிதர்களால்தான்! தாங்கள் பார்க்கும் வேலையில் கவனத்தை, முன்னெச்சரிக்கையை, பாதுகாப்பைக் கை கழுவும் ஒவ்வொருவரும் தவிர்க்கக் கூடிய இழப்புகளுக்குப் பொறுப்பா கின்றனர்.பள்ளிக்கூடங்களில், வீடுகளில் தங்களது பொறுப்பைக் கை கழுவும் யாரும் அடுத்தடுத்த தலைமுறைகளைப் பறிகொடுப்பதாகவே கருத முடியும்.மாணவர்கள், இளைஞர்கள் திசை தவறிப் போவதும், மனம் நொறுங்கிப் போவதும் கணக்கிட முடியாத சோகக் கதைகளை உருவாக்குகின்றன. குடும்பங்களின் ஒத்திசைவு கூட, இருவரில் ஒருவர் தமது வேலைப் பங்கீட்டைக் கை கழுவும் போது எத்தனையோ சிக்கல்கள் தோன்றுகின்றன.நியாயம், நீதி, நேர்மை கை கழுவப்படும் சமூகத்தில் எல்லா அறங்களும் தலை குனிந்து நடக்கின்றன.இயற்கை வளங்களைக் கை கழுவி விலை பேசும் உலுத்தர்கள் தேச பக்தி பற்றி பாடம் நடத்தும் சகிக்க முடியாத அராஜகம் அரங்கேறிக்கொண்டேதான் இருக்கிறது. வாசிப்பைக் கை கழுவுவோர், புதிய வாழ்வியல் அனுபவங்களைப் பெற மறுக்கிறார்கள். சக மனிதர்களிடம் பேசாது சமூக ஊடகங்களில் பேசிக் கொண்டிருப்பதான பாவனையில் சந்திப்புகளின் தருணங்களைக் கை கழுவுவோர் எத்தனையோ இன்பங்களை நழுவ விடவே செய்கின்றனர்.தண்ணீர் என்பதே ஓர் அரிய பொருளாக மாற்றப் பட்டுவரும் உலகில், கை கழுவுவதைப் பற்றி யோசிக்கக் கூட முடியாது. இலவசமாகக் கிடைக்க வேண்டிய தண்ணீரை விலை குறைத்து விற்பதாலேயே யாரும் பொறுப்பிலிருந்து நழுவ முடியாது. மூன்றாம் உலகப் போர் தண்ணீருக்காகத்தான் நடக்கும் என சொல்லப்படுவதையும் மறந்துவிடக் கூடாது.
உலகக் கை கழுவும் நாள் இருக்கட்டும், கொஞ்சம் ஏமாந்தால் உலகையே கை கழுவி விட்டுப் போக ஏகாதிபத்திய சிந்தனையோட்டம் துடிப்பதையும் மறந்துவிடக் கூடாது. உலக அளவில் ஏற்றத் தாழ்வுகளையும், நாடுகளிடையே பரஸ்பரம் மோதல்களையும் தூண்டிவிட்டு அமைதியைக் குலைத்து வருவது அவர்களது பங்களிப்புதான். கை கழுவுதல் என்பது தூய்மை குறித்தது. “புறந்தூய்மை நீரால் அமையும்என்ற வள்ளுவர், அகத் தூய்மை குறித்தும் அறிவுறுத்தி இருக்கிறார். சாதிய, மதவாத அழுக்குகளும், சுயநலமும் மண்டிக் கிடக்கும் உள்ளங்களைக் கழுவும் நாள் எப்போது?

No comments: