Friday 31 October 2014

திரும்பி வராத பணத்துக்காதீவிர நடவடிக்கை நாடகம்?

வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும் கறுப்புப்பணத்தை மீட்டால் இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.3 லட்சம் கொடுக்க முடியும் என்று எவ்வளவு சவடாலாக தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக முழங்கியது! வீட்டுக்கு அவ்வளவு பணம் வராவிட்டாலும், மொத்தக் கறுப்புப்பணமும் மீட்கப்பட்டால் அரசுப் பொறுப்பிலேயே அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி வழங்க முடியும், அனைவருக்கும் தரமான மருத்துவ சேவைகளை உறுதிப்படுத்த முடியும் என்றெல் லாம் நினைத்து அக்கட்சிக்கு வாக்களித்தவர்கள் உண்டு. நரேந்திர மோடி பதவியேற்றதும் முதல் நடவடிக்கையாக, இதற்கான சிறப்பு நடவடிக்கைக் குழு அமைக்கப்பட்டது.உச்சநீதிமன்றக் கட்டளையின்படி அந்தக் குழுவை அமைப்ப தன்றி அரசுக்கு வேறு வழியில்லை என்பதை மறைத்தார்கள் இப்போது மக்களிடம் வேறொரு உண்மை மறைக்கப்படுகிறது. சில வங்கிகளிடமிருந்து வாடிக்கையாளர்களின் பெயர்ப்பட்டியல்கள் வந்துள்ளன. முதலில், அதில் உள்ள அனைவரின் பெயர்களையும் தெரிவிக்க இயலாது என்பதால், வரி ஏய்ப்புக்காக வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்போரின் பெயர்களை மட்டும் தெரிவிக்க ஏதுவாக ஆணையைத் திருத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது அரசு. நீதிபதிகள் அதை நிராகரித்த பிறகும், மூன்று பேர்களின் பெயர்களை மட்டும் அரசு தெரிவித்தது. எல்லோரின் பெயர்களையும் தெரிவிக்க நீதிமன்றம் கிடுக்கிப்பிடி போட்ட பிறகு, 627 பேர்களின் பெயர்களை மோடி அரசு முத்திரையிடப்பட்ட உறையில் வைத்து அளித்திருக்கிறது.அந்தப் பெயர்களை வெளியிடுவது குறித்து இனி நீதிமன்றம்தான் முடிவெடுக்க வேண்டும். இந்நிலையில், அந்தப் பட்டியலால் அரசுக் கருவூலத்திற்கு ஏதேனும் வருவாய் வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால், அந்த 627 பேர்களில் பெரும்பாலோர், சம்பந்தப் பட்ட வங்கிகளுக்குக் கடிதம் அனுப்பப்பட்ட தகவல் கிடைத்தபின் இத்தனை நாட்களில் தங்களது முந்தைய கணக்குகளில் இருந்த பணத்தை வேறு கணக்குகளுக்கு மாற்றி விட்டனர்! பலர் தங்கள் கணக்குகளையே முடித்துக்கொண்டு விட்டனர்! அதாவது இப்படிப்பட்ட நழுவல் உத்திகளுக்கான அவகாசம் தரப்பட்டிருக்கிறது!பட்டியலிலுள்ள 150 பேர் ஏற்கெனவே கணக்கில் காட்டப்படாத பணத்திற்கான வரியை அவசரமாக செலுத்தியிருக்கிறார்கள்.
அப்படிச் செய்தால் தண்டனை நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட மாட்டாது என்று, சட்டவிரோதமாகப் பதுக்கப்பட்ட பணத்தை சட்டப்பூர்வமாக்குவதற்கு வழி செய்ததே மோடி அரசுதான். முன்பு இதே போல் மன்மோகன் சிங் அரசு செய்தபோது, கறுப்புப்பணத்தை வெள்ளையாக்க உதவுவதா என்று கடுமையாக விமர்சித்தது இதே பாஜக-தான்.பெரும்பாலான கணக்குகள் வெளிநாடுகளில் இதற்கென்றே ஏற்படுத்தப்பட்ட அறக்கட்டளைகளின் பெயர்களில் தொடங்கப்பட்டவை. அவற்றின் மூல நபர்களை இந்திய புலனாய்வு அமைப்புகளால் கண்டுபிடிக்க முடியாது என்று கூறப்படுகிறது. மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றச்சாட்டுகளை மறுக்கும் நிலையில், வழக்குகள் முடிவதற்கே பல ஆண்டுகளாகும்! இவையனைத் தையும் காரணம் காட்டி, கறுப்புப் பணத்தை மீட்க சட்டச் சிக்கல்கள்தான் தடையாக இருக்கின்றன என்று பாஜக அரசு தப்பித்துக்கொள்ள முயலக்கூடும். கடத்தப்பட்டிருப்பது இந்திய மக்க ளின் உழைப்பிலிருந்து உறிஞ்சப்பட்ட பணம் என்பதால், அப்படி தப்பிப்பதற்கு அனுமதிக் கலாகாது.

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

பணம் திரும்பிவர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் ஐயா