குறளி வித்தை காட்டுகிறவர்களை இப்போது பெரிய அளவுக்குப் பார்க்க முடிவதில்லை. உடுக்கடித்து ஊரைக்கூட்டி, “பாதியில் திரும்பிப் போனால் ரத்த வாந்தி எடுப்பீர்கள்” என்று மிரட்டி நிற்கவைப்பார் வித்தைக்காரர். திடீரென “யாரோ” ஒருவர் வாயில் நுரை தள்ள “மயக்கம் போட்டு” கீழே விழுவார். குங்குமத்தை வீசி அவரது முகத்தோடு சேர்த்து உடலைத் துணியால் மூடிவிடுவார். அப்புறம் நின்றுகொண்டிருக்கிற யாரோ ஒருவரின் அடையாளம், அங்க லட்சணம், சட்டையின் நிறம், பையில் வைத்திருக்கிற பொருள் என்று மயங்கிக்கிடப்பவர் சரியாகச் சொல்வார். தங்களுடைய வண்டவாளங்களும் தண்டவாளம் ஏறிவிடும் என்று சிலர் எச்சரிக்கையோடும், மகிமையை நம்புகிற சிலர் ரத்த வாந்திக்குப் பயந்தும், இதிலெல்லாம் நம்பிக்கையில்லாதவர்கள் வேடிக்கை பார்த்த பொழுதுபோக்கிற்காகவும் வித்தைக்காரர் விரித்து வைத்த துண்டில் காசுகளைப் போட்டுவிட்டு நகர்வார்கள். எல்லோரும் போன பிறகு, வித்தைக்காரர், அந்த யாரோ ஒருவருக்குரிய வசூல் பங்கைக் கொடுத்துவிட்டு வேறு ஊருக்குச் செல்வார்.
அங்கேயும் கூட்டத்தில் அந்த “யாரோ” ஒருவர் போய் நிற்பார்...இந்தக் குறளி வித்தையை இன்று பார்க்க முடியாத தலைமுறையினரின் ஏக்கத்தைப் போக்க உடுக்கடிக்கத் தொடங்கியிருக்கிறார் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி. கீழே விழுந்து கிடந்து, பார்வையாளரகளின் ரகசியத்தைப் போட்டு உடைக்கிற “யாரோ” ஒருவரது இடத்தில் இருப்பது வெளிநாட்டு வங்கிகள். துண்டுக்குள் மறைந்துகொண்டு அந்நிறுவனங்கள் வெளிப்படுத்தப் போவதாகச் சொல்லிக்கொண்டிருப்பது, தங்களிடம் ரகசியமாகக் கணக்கு வைத்திருக்கிறவர்களின் பெயர்களையும், அவர்கள் போட்டு வைத்திருக்கிற கறுப்புப் பண விவரமும்.ஒரு சின்ன வேறுபாடு - குறளி வித்தைக்காரரைப் பொறுத்தவரையில், அவரது மறைமுகக் குறிப்புகளின்படி படுத்துக்கிடப்பவர் பதிலளிப்பார்.
கறுப்புப்பண வித்தையைப் பொறுத்தவரையில், படுத்துக்கிடப்பவராகிய வெளிநாட்டு வங்கிகளும் அரசுகளும் சொல்லச் சொல்வதை ஜெட்லி சொல்லிக்கொண்டிருக்கிறார்.கடந்த மக்களவைத் தேர்தலில், வேறு எதையும் விட வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப் பணம் மீட்கப்படும் என்பதைத்தான் பெரிதாக முழங்கினார்கள். ஆட்சிக்கு வந்த பின்னர், உச்சநீதிமன்ற ஆணைப்படி ஒரு குழுவை நியமித்தார்கள். இப்போது அந்தக் குழுவின் முயற்சியால் வெளிநாட்டு வங்கிகளிடமிருந்து, அங்கே கறுப்புப் பணம் போட்டு வைத்திருக்கிறவர்களுடைய பெயர்ப்பட்டியல் வந்திருக்கிறது என்கிறார்கள். ஆனால், அந்தப் பட்டியலை, வேண்டுமானால் இந்த வழக்கைத் தொடுத்தவரான வழக்குரைஞர் ராம் ஜெத்மலானிக்கு மட்டும் காட்டுகிறோம் என்றார்கள். சம்பந்தப்பட்ட நாடுகளுடன் இரட்டை வரிவிதிப்பைத் தவிர்ப்பதற்கான உடன்பாடு இருப்பதாகக் கூறி, அதன்படி பெயர்களை வெளியிட இயலாது என்கிறார் ஜெட்லி!ஆக, பட்டியலில் யார் பெயரெல்லாம் இருக்கிறது என்பது தெரியும் என்றாலும், அவர்கள் யார் என்பதாலேயே அவர்களுடைய பெயர்களை வெளியிட இந்த அரசு மறுக்கிறது என்பதைக் குறளிவித்தை சூக்குமம் அறிந்தவர்களால் ஊகிக்க முடிகிறது.
காங்கிரஸ் தலைவர்களோ, “இதைத்தானே முன்பு எங்கள் ஆட்சியின்போது சொன்னோம், அப்போது எங்களைக் கறுப்புப் பண பாதுகாவலர்கள் என்று தாக்கிவிட்டு இப்போது நீங்கள் அதே காரணத்தைச் சொல்லி பெயர்களை வெளியிட மறுப்பது ஏன்,” என்று புலம்புகிறார்கள்.உடனே அருண் ஜெட்லி, “பெயர்ப்பட்டியலை வெளியிட்டால் காங்கிரஸ் கட்சிக்கு சங்கடம் ஏற்படும் பரவாயில்லையா,” என்று கேட்கிறார். காங்கிரஸ் பொதுச்செயலாளர்களில் ஒருவரான அஜய் மக்கேன், “இப்படி பிளாக் மெயில் செய்கிற வேலையெல்லாம் வேண்டாம்... தப்பு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டியவர்கள்தான். தில் இருந்தால் பெயரை வெளியிடுங்கள் பார்க்கலாம்,” என்று சவால் விடுகிறார்! பாதி உண்மையை மட்டும் சொல்லிக்கொண்டிராமல், தேர்ந்தெடுத்த சில பெயர்களை மட்டும் கசியவிடாமல் முழுதாக வெளியிட வேண்டியதுதானே என்றும் அவர் கேட்டிருக்கிறார்.
முன்னாள் காங்கிரஸ் கூட்டணி அரசில் அமைச்சராக இருந்தவர் பெயர் இருப்பதாகக் கூறப்படுகிறதே என்று பத்திரிகையாளர்கள் கேட்டபோது, “இதை நான் ஒப்புக்கொள்ளவுமில்லை, மறுக்கவுமில்லை... புன்னகை மட்டுமே செய்கிறேன்,” பஞ்ச் டயலாக் பேசியிருக்கிறார் ஜெட்லி.அந்தப் புன்னகையின் பின்னணியில், வெளிப்படுத்த முடியாத வேறு முக்கியமானவர்களின் - அதாவது ஆளுங்கட்சிக்கு முக்கியமானவர்களின் - பெயர்கள் இருக்கலாம் என்று, குறளி வித்தைக்காரரின் மகிமையில் நம்பிக்கையில்லாமல் வேடிக்கை பார்க்கிறவர்கள் ஊகிக்கிறார்கள்.
உண்மையிலேயே முக்கியமான பெயர்களின் பட்டியல் இருக்குமானால், சும்மா குங்குமம் தூவிக்கொண்டிருக்காமல், நாட்டின் செல்வத்தை இப்படிக் கடத்தியவர்கள் பற்றிய தகவல்களை முழுமையாக வெளியிடுவதே அரசின் கடமை. அதைச் செய்யாமல், வெளியிட்டால் உங்களுக்குத்தான் சங்கடம் என்று ஜெட்லி கூறுகிறார் என்றால், பட்டியலில் முன்னாள் ஆளுங்கட்சியினரின் பெயர்கள் இருக்கிற நிலையில் அவர்களைக் காப்பாற்ற பேரம் நடக்கிறது என்றுதானே பொருள்? அந்த பேரம், “எங்களோடு சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களையும் வெளியிடமாட்டோம், சரியா” என்பதான எழுதப்படாத ஒப்பந்தம்தானோ என்று மக்கள் புரிந்துகொள்ளலாமா?
No comments:
Post a Comment