Wednesday 15 October 2014

பொதுத்துறை பாதுகாப்பது கடமை-BSNLEU மாநாட்டில் பி.சம்பத்

திருச்சிராப்பள்ளி, அக்.11-பிஎஸ்என்எல் உள்ளிட்ட பொதுத்துறைகளை பாதுகாப்பதே இன்றைய முக்கியக் கடமை என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் பி.சம்பத் கூறினார்.
BSNL ஊழியர் சங்க தமிழ் மாநில 7வது மாநாடு சனிக்கிழமை திருச்சியில் துவங்கியது.மாநாட்டிற்கு BSNLEUமாநிலத் தலைவர் மாரிமுத்து தலைமை வகித்தார். மாநில உதவிச் செயலாளர் நாராயணசாமி தேசியக் கொடியையும் மாநில உதவிச் செயலாளர் பழனிசாமி சங்கக் கொடியையும் ஏற்றி வைத்தனர். மாநில உதவிச் செயலாளர் சுப்ரமணியன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார்..வரவேற்புக்குழு தலைவர் பாலச்சந்திரன் வரவேற்றுப் பேசினார். சங்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் அபிமன்யு மாநாட்டு துவக்கவுரையாற்றினார்.
தமிழக தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் சம்பத் சிறப்புரையில் பேசியதாவது:பாரதிய ஜனதா கட்சி எவ்வளவு விரைவாக ஆட்சிக்கு வந்ததோ. அதுபோன்றே இடைத்தேர்தலில் தோற்கடிக்கப்பட்டுள்ளது. மக்கள் மிகப்பெரிய அளவிற்கு வேதனைகளையும், சோதனைகளையும் தற்போது தாங்கிக் கொண்டிருக்கிறார்கள். பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்து ஓராண்டில் ரூ .86ஆயிரம் கோடி மதிப்புள்ள பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் கொடுக்க உள்ளது. இன்றைய ஆட்சியில் இதற்கு விடிவுகாலம் வரப்போவதில்லை. இன்றைக்கு BSNL நிறுவனத்தை இழுத்து மூடப்போகிறார்கள் என்றெல்லாம் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இன்றைய சூழ்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள சவால் அதன் மூலம் பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள சவால். இது ஏதோ ஒரு துறைசார்ந்த பிரச்சனை அல்ல.
இது அரசாங்கத்தினுடைய கொள்கை சார்ந்த பிரச்சனை. பிஎஸ்என்எல் மட்டுமல்ல எல்லா பொதுத்துறை நிறுவனங்களும் ஆபத்தை சந்தித்துக் கொண்டிருக்கின்றன.ஒட்டுமொத்த தொழிலாளர் வர்க்கமே இன்றைய ஆட்சியில் மிகப்பெரிய தாக்குதல்களை சந்தித்துக் கொண்டிருக்கின்றது. இந்த ஆட்சியின் தாக்குதல்களிலிருந்து பிஎஸ்என்எல் நிறுவனத்தை காப்பது மட்டும் நமது கடமை அல்ல. ஒட்டு மொத்த பொதுத்துறை நிறுவனங்களை காப்பதும் நமது கடமையாகும். அதற்காகத் தான் நாம் போராடிக் கொண்டிருக்கின்றோம். தொழிலாளர்களை பாதிக்கும் அரசாக மட்டும் அல்ல, டீசல் விலை உயர்வு, ரயில்வே கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு போன்றவற்றின் மூலம் ஏழை, எளிய மக்களை பாதிக்கும் அரசாக நடந்து கொண்டிருக்கிறது. தொழிலாளர்களின் விரிவான ஒற்றுமையின் மூலம் தான் இந்த அரசாங்கத்தின் கொள்கைகளை பின்னுக்கு தள்ளமுடியும்.கோடான கோடி தொழிலாளர்கள் ஓற்றுமையின் மூலமும், பொதுமக்களின் ஆதரவுடனும் தான் இந்த அரசாங்கத்தின் அடக்குமுறைகளை முறியடிக்க முடியும். இந்த அரசு சாதியாலும், மதத்தாலும் மக்களை பிளவுபடுத்த முயற்சிக்கிறது. ஆனால் தொழிலாளர்களும் மக்களும் ஒற்றுமையாக இருந்து பொதுத்துறை நிறுவனங்களையும் நாட்டையும் பாதுகாக்க வேண்டும் என்றார்.
கருத்தரங்கு
பின்னர் பிஎஸ்என்எல் பாதுகாப்பு என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் பொதுச்செயலாளர் அபிமன்யு, தலைமை பொதுமேலாளர் ரெட்டி, மாநில செயலாளர் செல்லப்பா ஆகியோர் பேசினர். முன்னதாக வரவேற்புக்குழு பொதுச்செயலர் அஸ்லம்பாஷா, மாநில உதவிச் செயலாளர் பாபு ராதாகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றனர். முடிவில் மாநில உதவிச் செயலாளர் முருகையா நன்றி கூறினார்.--தீக்கதிர் .

No comments: