முத்துராமலிங்கத் தேவரை இந்நாட்டுக்காக ஈன்றளித்த பெருமைக்குரியோர் உக்கிர பாண்டியத் தேவரும், இந்திராணி அம்மையாரும்.இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமமே இவர் அவதரித்த திருத்தலமாகும். 30.10.1908 இவர் பிறந்த பொன்னாளாகும். இவர் ஆறு மாதக் குழந்தையாய் இருந்தபோதே அன்னையை இழந்தார். சாந்தபீவி எனும் இஸ்லாமிய அம்மையாரே இவருக்குத் தாய்ப்போல் ஊட்டி வளர்த்தார். இவருக்குக் குருவாக அமைந்து கற்பித்தவரோ கிறித்துவப் பாதிரியார் ஒருவர். எனவே இவரது மத நல்லிணக்கத்திற்கு இதுவே வித்து எனலாம்..
தொடக்கத்தில் தம் இல்லத்திலும், பின்னர் கமுதி, பசுமலை, மதுரை, இராமநாதபுரம் முதலிய இடங்களிலும் கல்வி கற்றார். இவர் இளமை முதலே நாட்டு விடுதலையில் நாட்டம் கொண்டார். தம் பத்தொன்பதாம் அகவையில் மூத்த காங்கிரஸ் தலைவர் ஸ்ரீமான் சீனிவாசக அய்யங்காரின் வழிகாட்டுதலால் அரசியலில் அடியெடுத்து வைத்தார். காங்கிரஸ் பேரியக்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டு விடுதலை வேள்வியில் தீவிரமாகப் பங்கேற்றார். காந்திஜி அறிவித்த கள்ளுக் கடை மறியலின் போது தமக்குச் சொந்தமான பனை மரங்களை வெட்டி வீழ்த்தினார்.ஒரு சமயம் இராமநாதபுரம் பகுதிக்கு மூதறிஞர் இராஜாஜி தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகை தந்த போது அவரை மாட்டு வண்டியில் அமர்த்தி இவரே சாரதியாகச் செயல்பட்டார். தீரர் சத்தியமூர்த்தியுடன் இணைந்து தமிழகமெங்குமுள்ள பட்டி தொட்டிகள் எல்லாம் சுற்றி அனல் பொறி பறக்கப் பிரச்சாரம் செய்தார். இவர் பெரு நிலக்கிழாராயினும் தம் நிலங்களை உழுபவர்களுக்கே உரிமையாக்கிய உத்தம சீலராவார். இவர் நாட்டு நலனில் நாட்டம் கொண்டதால் இறுதிவரை திருமணமே செய்து கொள்ளவில்லை.ஒரு சமயம் காமராஜர் விருதுநகர் நகராட்சித் தலைவரானதற்குத் தேவரின் தீவிரப் பிரச்சாரமே காரணமாகும். 1933 ஆம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டக் கழகத் தலைவர் பதவி தேவருக்குக் கிடைக்க வாய்ப்பிருந்தும் அதனைப் பெருந்தன்மையோடு தம் ஆத்ம நண்பரான – பின்னாளில் சென்னை மாகாண முதல்வராகவும், ஒரிசா ஆளுநராகவும் பதவி வகித்த – இராஜபாளையம் பி.எஸ்.குமாரசாமி ராஜாவுக்கு விட்டுக் கொடுத்தார்.ஜமீன் ஒழிப்புப் போராட்டத்திலும், மதுரை மீனாட்சி ஆலைத் தொழிலாளர் போராட்டத்திலும், கைரேகை மறுப்புச் சட்டப் போராட்டத்திலும் தீவிரமாக ஈடுபட்டு அவற்றை வெற்றி பெறச் செய்தார். ஆங்கில அரசு அமுல்படுத்திய குற்றப் பரம்பரைச் சட்டத்தை நீக்கப் போராடி அதிலும் வெற்றி கண்டார். இவரது செயல்பாடுகளைக் கண்டு அஞ்சிய ஆங்கில அரசு இவரைப் பேசவிடாது வாய்ப்பூட்டுச் சட்டம் போட்டது. காங்கிரஸ் கட்சியில் இருந்த போதும், பார்வர்டு பிளாக் கட்சியில் இணைந்த பின்னரும் பலமுறை சிறைவாசம் அனுபவித்தார்.1937 மார்ச் 11 ஆம் நாள் நடைபெற்ற திரிபுரா காங்கிரஸ் மாநாட்டுத் தலைவராக நேதாஜியைத் தேர்வு செய்ய தேவர் அரும்பாடு பட்டார். அது முதல் அவரோடு நெருங்கிய நட்புப் பூண்டு அவரது சீடராகவே மாறினார்.08.07.1937 ல் அன்றைய முதல்வர் ராஜாஜியும் விடுதலை வீரர் வைத்தியநாத ஐயரும் தாழ்த்தப்பட்டோரை மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் ஆலயப் பிரவேசம் செய்விக்க முயன்றனர். ஜாதி வெறியர்கள் அதனைக் கடுமையாக எதிர்த்தனர். தாழ்த்தப்பட்டோர் பலரைத் தம் இல்லத்தில் வைத்து ஆதரித்து வந்த பசும்பொன் தேவரின் ஒத்துழைப்பால் தான் அது வெற்றிகரமாக நிறைவேறியது.
நேதாஜியின் தொடர்புக்குப் பின்னர் காந்திஜியின் மிதவாதப் போக்கைக் காட்டிலும், நேதாஜியின் போர்க் கொள்கையே நம்நாட்டு விடுதலைக்கு உகந்தது என்ற முடிவுக்கு வந்தார். தேவரின் அழைப்பிற்கிணங்க 06.09.1939 அன்று நேதாஜி மதுரை வந்து தம் கொள்கையை மக்களிடையே பரப்பினார். நேதாஜி அமைத்த போர்க்குழுவில் தேவரும் இடம் பெற்றார்.1946 ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் ஆந்திர கேசரி பிரகாசம் இவரைத் தொழிலமைச்சராகப் பதவி ஏற்குமாறு இருமுறை வற்புறுத்தியும் இவர் இணங்கினாரில்லை. இந்நிகழ்வுகளால் இவருக்குப் பதவி ஆசை அறவே இல்லை என்பது கண்கூடு.இவர் இப்புவியில் வாழ்ந்த காலம் 55 ஆண்டுகள்தாம். ஆனால் சிறையில் வாடியதோ 10 ஆண்டுகளுக்கு மேல். இவரது அருந்தொண்டினைக் காணப் பொறுக்காத காலன் 30.10.1963 அன்று இப்பூவுலகை விட்டே அபகரித்துச் சென்றான்.நாட்டு விடுதலைக்காகப் போராடியவராகவிளங்கினார் தேவர்.
1 comment:
முத்துராமலிங்கத் தேவரின் நினைவினைப் போற்றுவோம்
Post a Comment