காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்களைத் எதிர்த்துபிரச்சாரம் செய்ததன் மூலம்தான், மக்களிடமிருந்த அதிருப்தியை அறுவடை செய்து ஆட்சிக்குவந்தது பாஜக கூட்டணி. ஆனால், முந்தைய ஆட்சிக்காலத்தில் விதைக்கப்பட்டு வளர்க்கப் பட்ட தவறான பலத் திட்டங்களை அப்படியே பின்பற்ற துவங்கியுள்ளது நரேந்திர மோடி அரசு.நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் பல்வேறு முறைகேடுகளை செய்தது மன்மோகன்சிங் அரசு. இதனால் சுரங்க ஒதுக்கீடுகளை ரத்துசெய்தது உச்சநீதிமன்றம். ஆனால் தற்போது நிலக்கரி சுரங்கங்களை மீண்டும் அதே முதலாளிகளுக்கு வழங்க அவசரச் சட்டம் கொண்டு வந்துள்ளது மோடி அரசு. பெட்ரோல் மீதான அரசுக் கட்டுப்பாட்டை நீக்கியது முந்தைய அரசு. டீசலுக்கான அரசு கட்டுப்பாட்டை நீக்கியுள்ளது இன்றைய அரசு.சமையல் எரிவாயு மானியத்தை நேரடியாக நுகர்வோருக்கு வழங்கும் திட்டத்தை முந்தைய அரசு அறிமுகப்படுத்தியது. இப்போது தாங்களும் அதேப் பாதையை தொடரப் போவதாக பாஜக கூட்டணி அரசு அறிவித்துள்ளது. ஆதார் அட்டை என்ற அரைகுறையான, பல்வேறு குளறுபடிகளைகொண்ட திட்டத்தை முந்தைய அரசு அறிமுகப்படுத்தியது. இதன்மூலம் அனைத்து மானியங்களும் ஆதார்அட்டையுடன் இணைக்கப்படும் என்று அப்போது அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தினால் உள்நாட்டு பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்றும் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த திட்டத்தை முற்றாக ரத்து செய்வோம் என்றும் பாஜகவினர் பசப்பினர். அப்போதைய உள்துறை அமைச்சகம் கூட ஆதார் திட்டத்தின்கீழ் திரட்டப்படும் தகவல்களின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பியது.
ஆனால்,தற்போது மத்திய உள்துறை அமைச்சகம் ஆதார் அட்டை திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என்றும் மானியங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு உதவிகளும் இதனுடன் இணைக்கப்படும் என்றும் கூறியுள்ளது. இந்த நிலைமாற்றத்திற்கான காரணம் என்ன என்று கேட்டால் இந்த ஆணையத்தின் தலைவரான தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த நந்தன்நீல்கேனி என்பவர் அமைச்சர்களை சந்தித்துஆதார் அட்டையின் அவசியத்தை வலியுறுத்தினாராம். உடனே அரசு ஒப்புக் கொண்டதாம். இந்த திட்டத்திற்காக இதுவரை 4906 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பட்ஜெட்டில் 2,039 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை மேற்கொள்ளும் நிறுவனத்திற்கு உண்மையில் இது அவசியம் தான்.ஆனால், இந்தத் திட்டம் பல்வேறு குளறுபடிகளோடு, குறைபாடுகளோடு மேற்கொள்ளப்பட்டது என்பது ஒருபுறமிருக்க, பயோ மெட்ரிக் அடிப்படையில் திரட்டப்படும் தகவல்கள் அனைத்தும் அமெரிக்க உளவு நிறுவனமான CAA அமைப்பிற்கு அப்படியே செல்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியதோடு திட்டத்தை ரத்து செய்யுமாறு வலியுறுத்தியது. குடிமக்களுக்க பன்னோக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்போவதாக கூறியபாஜக தற்போது ஆதாரிடம் மீண்டும் சரணடைந்துள்ளதன் மர்மம் என்ன? இதில் அமெரிக்க நிர்ப்பந்தம் இருக்காது என்று நிராகரிக்க முடியாது. ஆதாரால் அதிக ஆதாயம் பெறுவது அமெரிக்கா என்பது மறுப்பதற்கில்லை.
No comments:
Post a Comment