முதுபெரும் எழுத்தாளர் ராஜம்கிருஷ்ணன் சென்னையில் திங்களன்று இரவு காலமானார். திருச்சி மாவட்டம் முசிறியில், சாத்திர சம்பிரதாயங்களில் பிடிப்பு மிக்க குடும்பத்தில் 1925ம் ஆண்டு பிறந்தவரான ராஜம், பெண்கள் வயதுக்கு வருவதற்கு முன்பே திருமணம் செய்துவைத்துவிடும் அன்றைய சமூக வழக்கப்படி, தமது 15வது வயதிலேயே கிருஷ்ணனுக்குத் திருமணம் செய்துவைக்கப்பட்டார்.
தொடர்ந்து பள்ளி சென்று படிக்கவும் அனுமதிக்கப்படவில்லை.ஆயினும் ராஜத்தின் வாசிப்பு தாகத்தைப் புரிந்துகொண்டு அங்கீகரித்த மின் பொறியாளரான கிருஷ்ணன் கதைப் புத்தகங்கள் வாங்கித்தருவது, எழுதுவதற்கு ஊக்குவிப்பது என்று ஒத்துழைத்தார். அந்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக்கொண்ட ராஜம், 16வது வயதிலேயே எழுதத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.சிறுகதை, நாவல், கட்டுரை என மூவகை எழுத்திலும் தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தை வளர்த்துக்கொண்டார் ராஜம் கிருஷ்ணன்.
பள்ளி சென்று முறையாகப் படித்திராத அவரது படைப்புகள் பல்கலைக்கழகங்களில் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளத் தக்கவையாக அமைந்திருந்தன. நாட்டின் விடுதலைப் போராட்ட வரலாற்றின் கடைசிக்கட்டத்தில் வளர்ந்து, விடுதலை பெற்றஇந்தியாவின் வளர்ச்சிப் போக்குகளோடு இணைந்து பயணித்த அவர், தம் சமகாலத்தின் அரசியல், சமுதாய நிலைமைகளை உற்று கவனித்து ஏழை- எளியமக்களின் வாழ்க்கையையும் போராட்டத்தையும் தம் எழுத்துகளில் பதிவு செய்தார். குறிப்பாக பெண்ணடிமைத் தனத்திற்கும், உழைப்புச்சுரண்டலுக்கும் எதிரான ஆவேசம் அவரது எழுத்துகளில் உயிர்ப்புடன் வெளிப்பட்டது. படைப்புக்காகத் தேர்ந்தெடுக்கும் கதைக்களம் உள்ள பகுதிகளுக்கு நேரில் சென்று, அங்குவாழும் மக்களோடு நெருங்கிப் பழகி உண்மை நிலைமைகளை அனுபவப் பூர்வமாக உணர்ந்துகொண்டு, அந்த உணர்வையும், அவர்களது உண்மையான முன்னேற்றத்திற்கான லட்சியத்தையும் தம் எழுத்து வழியாகக் கொண்டுவந்தவர் ராஜம்.எழுத்தோடு நின்றுவிடாமல் பலரது உரிமைப் போராட்டங்களுக்கும் தோள் கொடுத்தவர்.சாகித்ய அகாடமி விருது, நியூயார்க் ஹெரால்ட் டிரிப்யூன் சர்வதேச விருது, கலைமகள் விருது, சோவியத் லாண்ட் நேரு விருது, திரு.வி.க. விருது உள்ளிட்ட பல விருதுகள் அவரைத் தேடி வந்தன.ஒரு விபத்தைத் தொடர்ந்து உடல்நிலையிலும் கடுமையான சோதனைகளுக்கு உள்ளானார். எனினும் மக்கள் மீதான அவரது நேசமும் சமுதாய மாற்றத்திற்கான தாகமும் கொஞ்சமும் மங்கியதில்லை.கலை இலக்கியம் மக்களுக்காகவே என்ற கோட்பாட்டை உயர்த்திப் பிடித்துஅதற்குத் தம்மையே ஒரு எடுத்துக்காட்டாகவும் வைத்துக்கொண்ட ராஜம் கிருஷ்ணன், சமத்துவ சமுதாயஇலக்கை நோக்கி நடைபோடும் படைப்பாளிகளுக்கும் களப்போராளிகளுக்கும் ஒரு உந்துசக்தியாக என்றென்றும் திகழ்வார்.. அவரது மறைவு முற்போக்கு இலக்கிய உலகிற்கு பேரிழப்பாகும்.
1 comment:
எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் அவர்களின் மறைவிற்கு அழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்
Post a Comment