Sunday 19 October 2014

2014 பொலிவியா தேர்தல் : இடதுசாரிகள் அமோக வெற்றி...


பொலிவியாவில் சோசலிசம் நோக்கிய இயக்கத்தின் (Movement Towards Socialism MAS-IPSP)’ தலைவரான தோழர் ஈவோ மொரேல்ஸ், அக்டோபர் 12 ல் நடந்த தேர்தலில் ஜனாதிபதியாக மூன்றாவது முறை மகத்தான வெற்றி பெற்றுள்ளார். “ஜனாதிபதி தேர்தலில் 60சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று சாதனை படைத்தது மட்டுமல்ல...ஜனாதிபதி தேர்தலுடன் 130 இடங்கள் கொண்ட பிரதிநிதிகள் சபை மற்றும் 36 இடங்கள் கொண்ட செனட் சபைக்கான தேர்தலும் நடைபெற்று, அவற்றில் ஈவோ மொரேல்ஸின் கட்சி முறையே 113 மற்றும் 25 இடங்களை பெற்றுள்ளது. இந்த மாபெரும் வெற்றிக்கு அக்கட்சி பெருவாரியான மக்களின் நலனில் காட்டிய அக்கறையே காரணம். அதில் சிலவற்றை குறிப்பிட்டுச் சொல்லலாம்:2005ல் வறுமையால் பாதிக்கப்பட்ட மக்கள் 64சதவீதம், 2013ல் இது 43சதவீதமாக குறைந்தது, 8 ஆண்டுகளில் 21சதவீத மக்கள் வறுமையின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
2005ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2014 ல் குறைந்தபட்ச கூலி 87.7சதவீதமாக உயர்ந்துள்ளது.2005ல் 400 பொலிவியானோவாக (பொலிவிய நாணயம்) இருந்த குறைந்தபட்ச கூலி 2014 ல் 1440 உயர்ந்தது2005ல் தேசிய உற்பத்தி 6.8சதவீதமாக இருந்த பொதுத்துறைக்கான முதலீடு 2014ல் 13.4சதவீதமாக உயர்ந்தது; கிட்டத்தட்ட இருமடங்கு முதலீட்டு அதிகரிப்பு இது.2005ல் ஆண்டுக்கு 14.73 பில்லியன் பொலிவியானோவாக இருந்த கல்வி, மருத்துவம், ஒய்வூதியம் மற்றும் வறுமை ஒழிப்புக்கான சமூகநலத் திட்டங்களுக்கான செலவு 2012ல் ஆண்டுக்கு 21.42 பில்லியன் பொலிவியானோ ஆக உயர்ந்தது.மொரேல்ஸ் அரசாங்கம் 2006ல் எண்ணெய் நிறுவனங்களை தேசியமயமாக்கியதன் விளைவாக, 2004-05 வரை 9.8சதவீத வருமான வளர்ச்சி காட்டிய எண்ணெய் நிறுவனங்கள், 2013 ல் 35சதவீத வருமான வளர்ச்சியை காட்டின. 2006-2011 வரை கிடைத்த எண்ணெய் வருமான இலாபத்தில் 54.88 பில்லியன் பொலிவியானோ (அதாவது அமெரிக்க டாலரில் 8 பில்லியன் , 1 அமெரிக்க டாலர் = 6.86 பொலிவியானோ) மக்கள் நலத்திட்டங்களுக்காக செலவிடப்பட்டது.
எண்ணெய்க் கம்பெனிகளை தேசியமயமாக்கியது தொழில் வளர்ச்சியைப் பெரிதும் பாதிக்கும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு கேடு விளைவிக்கும் என்றும் அந்நிய முதலீட்டை பாதிக்கும் என்றும் கூறுகிற எதிர்க்கட்சிகளின் புலம்பல்களைப் பொய்யாக்கும் வகையில், 2003ல் தேசிய உற்பத்தியுடன் ஒப்பிடும் போது 12.1சதவீதமாக இருந்த அந்நியச் செலாவணி நிதி இருப்பு 48.4சதவீதமாக உயர்ந்தது, தேசிய உற்பத்தியுடன் ஒப்பிடும் போது தென் அமெரிக்க நாடுகளில் அதிக அந்நிய முதலீட்டை கவர்ந்தது பொலிவியாவாகும். 2005-06 ல் 6,860 பொலிவியானோ ஆக இருந்த தனி நபர் ஆண்டு வருமானம் 2014 ல் 17,150 பொலிவியானோ ஆக உயர்ந்தது. சீனாவின் பொருளாதார உதவியுடன் செயற்கைக் கோள் மூலம் கிராமப் பள்ளிக்கூடங்களுக்கு இணைய வசதி செய்து கொடுக்கப்பட்டது.இன்னும் மிக முக்கியமாக, அமெரிக்காவின் பொருளாதார உதவிக்காக அதன் நிபந்தனைகைளை ஒப்புக்கொள்ளாததால், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, பொலிவியா, தன் கோக்கோ உற்பத்தியில் கண்கூடாக தோற்றுவிட்டதுஎன்றார்.இந்தப் பொய்ப் பிரச்சாரத்தை நிராகரிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபை, கோக்கோ உற்பத்தியை பொலிவியா மிகச் சரியாக கையாண்டதாக தெரிவித்தது. சர்வதேச சமூகம் பொலிவியாவை கோக்கோவுக்கு ஆம், போதை பொருளுக்கு இல்லை (Coca Yes, Cocaine No)’ ’ என புகழ்ந்தது.
பழங்குடி இனத்தை சேர்ந்த கோக்கோ விவசாயியான ஈவோ மொரேல்ஸ் கோக்கோ விவசாயிகள் சங்கத் தலைவராக இருந்தவர் என்பதை அமெரிக்கா மறந்து செயல்பட்டதால் கோக்கோ வர்த்தகத்தில் சர்வதேச அளவில் தனிமைப்பட்டது.பொலிவியாவில் 1952 தேசியப் புரட்சிக்கு முன்பு வரை பழங்குடி இன மக்கள் அழுக்கானவர்கள் என்றும் சுகாதாரமற்றவர்கள் என்று ஒதுக்கப்பட்டு ஜனாதிபதி அரண்மனைக்கு முன்பு கூட அனுமதிக்கபடவில்லை.ஆனால் தொடர்ந்து 3வது முறையாக இத்தேர்தலில் வென்றதின் மூலம் ஈவோ மொரேல்ஸ் பொலிவியாவில் நீண்ட காலம் ஜனாதிபதியாக இருந்தவர் என்ற பெருமையைப் பெறுவது மட்டுமல்ல; பழங்குடியினத்தைச் சேர்ந்த முதல் ஜனாதிபதி என்ற பெருமையையும் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.அமெரிக்காவின் முயற்சிகளை எதிர்த்தும், உள்நாட்டு அரசியல் எதிரிகளை சமாளித்தும் தேர்தலில் வெற்றி பெற்ற ஈவோ, தனதுசெயல்திட்டம் 2025” முனைப்பாக செயல்படுத்துவார் என்ற நம்பிக்கையின் அங்கீகரிப்பாக இந்த வெற்றியை கருதலாம்.

No comments: