Saturday 2 May 2015

வியட்நாம் - அமெரிக்காவை வீழ்த்திய - 40 ஆண்டுகள்.

`35 ஆண்டுகளுக்கு முன்னால் நான் வியட்நாமிற்கு வந்திருந்தேன். அப்போது நான் பார்த்த மனிதர்கள் எல்லாம் பசியால் துடித்துக் கொண்டிருந்தார்கள். ஹனோய் நகரில் இரண்டே இரண்டு உணவு விடுதிகள் மட்டுமே இருந்தன. இன்றைக்கு இந்த நாட்டைப் பார்த்து நான் பிரமித்துப் போயிருக்கிறேன். எத்தனை பிரம்மாண்டமான மாற்றம்! ஹனோய் நகரம் மாபெரும் வளர்ச்சியை எட்டியிருக்கிறது. உங்கள் எல்லோரையும் பார்ப்பதில், உங்களது மகிழ்ச்சிகரமான முகங்களைப் பார்ப்பதில் நான் இதயப்பூர்வமாக பெருமிதத்துடன் உணர்கிறேன்.அத்தனை அருமையான, அமைதியான தேசமாக மாற்றியிருக் கிறீர்கள்’.- ஜெர்மானிய புகைப்படப் பத்திரிகையாளரான மிக்கேல் எபர்ட் என்பவர், ஏப்ரல் 30 வியாழனன்று வியட்நாமின் மகத்தான ஹோ சி மின் சிட்டியில் நடைபெற்ற மிகப்பிரம்மாண்டமான விழாவில் பங்கேற்றபோது கூறிய வார்த்தைகள் இவை.ஹோ சி மின் சிட்டி எனும் அந்த மாநகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் வண்ணமயம்.எங்கு பார்த்தாலும் செங்கொடிகள். எங்கு பார்த்தாலும் வியட்நாம் புரட்சியின் மகத்தான தலைவர் ஹோ சி மின் உருவப்படங்கள்.1975 ஏப்ரல் 30 அன்று, இன்றைக்கு ஹோ சி மின் சிட்டி என்று அழைக்கப்படுகிற - அன்றைய சைகோன் நகரத்தை அமெரிக்க ஏகாதிபத்திய படைகளின் பிடியிலிருந்து வீர வியட்நாமிய புரட்சியாளர்கள் கைப்பற்றி, அமெரிக்க ஏகாதிபத்தியத்தை ஓட ஓட விரட்டிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு நடந்தது.உலக வரலாற்றில் முதல் முறையாக ஏகாதிபத்திய அமெரிக்காவை விரட்டியடித்த வீர வியட்நாமின் 40வது ஆண்டு விழாவே, ஏப்ரல் 30 வியாழனன்று ஹோ சி மின் சிட்டியில் நடைபெற்றது.அன்றைய நாள் வரை வியட்நாம் முழுவதும் அமெரிக்க ஏகாதிபத்தியம் நடத்திய கொடிய யுத்தத்தில் 30லட்சம் மக்கள் கொல்லப்பட்டனர். உலகமே வெகுண்டெழுந்து அமெரிக்காவுக்கு எதிராக போராடிய வரலாறு அன்றைக்கு நடந்தது. வியட்நாமை விட்டு அமெரிக்க ஏகாதிபத்தியமே வெளியேறு என்று உலகெங்கிலும் முழக்கம் எழும்பியது. வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில், கொரில்லா யுத்த முறைக்கு உலகிற்கே வழிகாட்டிய தோழர்கள் அமெரிக்கப் படையினரை திட்டமிட்டு சிதறடித்தனர். வீரத்துடன் போரிட்டு அமெரிக்க ஆக்கிரமிப்பை முடிவிற்கு கொண்டு வந்தனர்.அத்தகைய வீரம்செறிந்த போராட்டத்தின் 40 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ளன.அதை வியட்நாம் தேசமே பெரும் உற்சாகத்துடனும், பேரெழுச்சியுடனும் ஏப்ரல் 30 வியாழனன்று கொண்டாடியது. எழில்மிக்க ஹோ சி மின் சிட்டியில் நடந்த இந்த விழாவில் வியட்நாம் கம்யூனிஸ்ட்கட்சியின் பொதுச் செயலாளர் நிகுயென் பூ திராங், ஜனாதிபதி ட்ரூங் தான் சங், பிரதமர் நிகுயென்தான் டங் உள்ளிட்ட தலைவர்கள், முன்னாள் தேசிய தலைவர்கள், கம்யூனிஸ்ட் கட்சியின்பல்வேறு மாகாண தலைவர்கள் உட்பட பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற் றார்கள். கம்போடியா, கியூபா, லாவோஸ் உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகளும், அமெரிக்காவை எதிர்த்துப் போராடிய மூத்த வீரர்களும் தோழர்களும் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.இந்த விழாவில் கண்ணைக் கவரும் விதத்திலும் சோசலிச வியட்நாமின் இன்றைய ராணுவ வல்லமையை பறைசாற்றும் விதத்திலும் பிரம்மாண்டமான அணிவகுப்பு நடைபெற்றது. வியட்நாமிய ராணுவத்தின் 38 படைப்பிரிவுகளும் காவல் படைப்பிரிவுகளும் கம்பீரமாக அணிவகுத்து வந்த காட்சிகள் அனைவரையும் ஈர்த்தன.6 ஆயிரம் வீரர்கள் பங்கேற்ற இந்த அணிவகுப்பைத் தொடர்ந்து வியட்நாமிய இளைஞர்களின் கோலாகலமான கலைநிகழ்ச்சிகளும் அரங்கேறின. இந்த மாபெரும் விழாவைத் துவக்கி வைத்து உரையாற்றிய பிரதமர் நிகுயென் தான் டங் பேசுகையில்,
“1975ம் ஆண்டு வியட்நாம் அடைந்த மகத்தான வெற்றி நமது தேசத்தின் வரலாற்றில் ஒரு பொன்னான நாள்என்று குறிப்பிட்டார்.ஏகாதிபத்திய படையினை விரட்டியடித்து நாம் அடைந்த அந்த வெற்றி, தென் வியட்நாமையும், வட வியட்நாமையும் ஒரே நாடாக இணைப்பதற்கு உதவியது; அந்த நாள்முதல் வியட்நாம் ஒரு புதிய சகாப்தத்தில் நுழைந்தது; அன்று முதல் இன்று வரை வியட் நாமை ஒரு வலுவான சோசலிச நாடாக கட்டி அமைப்பதில், ஒரு வலுவான ஜனநாயக நாகரிக சமூகமாக நமது மக்கள் சமூகத்தை வளர்த்தெடுப்பதில் அர்ப்பணிப்போடு செயல்பட்டு வருகிறோம் என்றும் அவர் குறிப்பிட்டார். வியட்நாமின் விடுதலை நாயகன்ஹோ சி மின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய அரசு மற்றும் ராணுவத் தலைவர்கள் மற்றும் மூத்த தோழர்கள் தாங்கள் எதிர்கொண்ட கடினமான சூழல்களை விவரித்தனர். வியட்நாம் யுத்தம் முடிந்த பிறகு, கடந்த 40 ஆண்டுகளில் படிப்படியாக பெரும் வளர்ச்சியை கம்யூனிஸ்ட் அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது.
ஏழு சதவீத வளர்ச்சி விகிதத்தோடு இன்றைய உலகில் குறிப்பிடத்தக்க வளரும் பொருளாதாரத்தை கொண்டிருக்கிறது. வியட்நாமிய நகரங்கள் வேகமாக நவீனமயமாகிக்கொண்டிருக்கின்றன. நவீனமயம் மட்டுமல்ல சமூகநீதியும் கலாச்சார வளர்ச்சியும் கிராமப்புற வளர்ச்சியும் ஒருசேர நடந்துகொண்டிருக்கிறது. இவற்றை பற்றியெல்லாம் விழாவில் விரிவாக பேசிய பிரதமர் நிகுயென் தான் டங் நாட்டின் எதிர்காலமே இளைஞர்களின் கைகளில்தான் உள்ளது என்றும் அவர்களது வளர்ச்சியில் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியும், அரசும் அக்கறைகொண்டு செயல்படும் என்றும் உறுதியளித்தார்.யுத்தத்தின்போது அமெரிக்க ஏகாதிபத்தியம் வியட்நாமில் மிகக்கொடூரமான, காட்டுமிராண்டித்தனமான குற்றங்களை நிகழ்த்தியது எனக் குறிப்பிட்ட பிரதமர், அந்த தாக்குதல்களும், குற்றங்களும் நமது மக்களின் இதயங்களில் தீராத வேதனையை, துயரத்தை ஏற்படுத்தியது என்று குறிப்பிட்டார். ஆனாலும் அதை எதிர்கொண்டு தேசத்தை விடுவித்து, மிகப்பெரும் வளர்ச்சிப்பாதையில் முன்னேறியிருப்பதற்கு நாம் உயர்த்திப் பிடித்து செல்கிற சோசலிசப் பதாகையே காரணம் என்றும் குறிப்பிட்டார்.

No comments: