அரசு அதிகாரத்தை ஒருபோதும் தவறாகப் பயன்படுத்தியதில்லை என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு விவகாரத்தில், அப்போதைய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறனின் சொல்படி நடக்காவிட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று மன்மோகன் சிங் மிரட்டினார் என்று இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய (டிராய்) முன்னாள் தலைவர் பிரதீப் பைஜால் தனது புத்தகத்தில் தெரிவித்துள்ள நிலையில், இவ்வாறு மன்மோகன் சிங் கூறினார்.
இதுதொடர்பாக தில்லியில் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பு சார்பில் புதன்கிழமை நடைபெற்ற மாநாட்டில் அவர் பேசியதாவது:
என்னையோ, எனது குடும்பத்தினரையோ அல்லது நண்பர்களையோ வளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக அரசு அதிகாரத்தை ஒருபோதும் நான் தவறாக பயன்படுத்தியது இல்லை. மக்களின் கவனத்தை தேவையில்லாத விவகாரங்களை நோக்கி திசை திருப்ப வேண்டும் என்று பாஜக அரசு விரும்புகிறது. அதற்காகவே, ஊழல் குறித்து பாஜக அரசு திரும்பத் திரும்ப பேசி வருகிறது.
மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது எதிர்த்த திட்டங்களை தற்போது தங்களின் திட்டம் என்று தெரிவித்து, புதிய பெயரில் விளம்பரப்படுத்தி வருகிறது பாஜக அரசு. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் திட்டத்தைத்தான் "இந்தியாவில் உருவாக்குவோம்' என்ற பெயரில் மோடி அரசு செயல்படுத்தியுள்ளது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சியில் கொள்கை முடக்கம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை மறுக்கிறேன்.
நாங்கள் ஆட்சியில் இருந்து விலகியபோது, உலகில் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் 2ஆவது நாடாக இந்தியா இருந்தது. ஆனால் தற்போதைய ஆட்சியின் கீழ், பொருளாதார நிலை பலவீனமாக இருக்கிறது.
மதவாதத்தை ஊக்குவிக்கிறது பாஜக அரசு: அதிகபட்ச பாகுபாடு, மதவாதம் ஆகியவற்றை ஊக்குவிப்பதற்காக வரலாற்றை மோடி அரசு மாற்றி எழுதுகிறது. எதிர்ப்புக் குரல்களை ஒடுக்குகிறது.
ஜனநாயக அமைப்புகளுக்கு தற்போது அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. வளர்ச்சி வேகத்தை விரைவுபடுத்துகிறோம் என்ற போர்வையில், அரசின் ஒட்டுமொத்த கட்டமைப்புக்கும் பாதிப்பு ஏற்படுத்தப்படுகிறது.
நாட்டின் பொருளாதாரமானது, பாஜக அரசு தெரிவிப்பதுபோல் சிறப்பானதாக இல்லை. கிராமப்புறங்களில் இருப்போர் கடும் துன்பத்தில் உள்ளனர். இதேபோல், நாட்டில் முதலீடுகள் அதிகரிக்கவில்லை. ஏற்றுமதி அளவு குறைந்து கொண்டிருக்கிறது. விவசாயப் பொருள்களின் உற்பத்தி குறைந்து வருவதால் விவசாயிகள் துன்பத்தில் உள்ளனர் என்றார் மன்மோகன் சிங்.
No comments:
Post a Comment